பி. வேங்கடகிருஷ்ணன், திருவல்லிக்கேணி
திருவையாற்றில் ஆண்டுதோறும் க்ருஷ்ண பட்ச பஞ்சமி தினத்தன்று நடைபெறும் “ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா” இன்று வெகு விமரிசையாக நடந்தேறியது. ராமனே அனைத்தும் என்று இருந்து, தன்னுடைய ஆத்மாவை ராமனுக்கே அர்ப்பணித்து வாழ்ந்து காட்டி, முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைக் கார்நாடக ராகங்களில் மெட்டமைத்துப் பாடி, பக்தியை சங்கீத வெள்ளமாகப் பரவச்செய்தவர் அல்லது சங்கீதத்தால் பக்தி வெள்ளமானது எங்கும் பரந்தோடும்படி செய்தவர் ஸ்ரீதியாகப்ரும்மம்.
“நிதி சால ஸுகமா? ராமுனி ஸந்நிதி ஸேவா ஸுகமா? நிஜமுக பல்கு மநஸா” என்று தன்னுடைய மனத்திடம் விசாரிக்க, மனமும் இவர் சிந்தைக்கு உட்பட்டு உவந்ததாய் “அழியக்கூடியதும் தாழ்ந்ததுமான நிதி ஸுகமல்ல ; நித்யமானவனான ராமபிரானே “பெரும் நிதி” என்று காட்ட,, “இவர் தானும் இவர் நெஞ்சும் ராமனுக்கே இசைந்தொழிந்தார்கள்.”
அப்பேர்ப்பட்ட மகானைச் சிறப்பிக்கும் வண்ணம் தியாகப்ரும்மம் பிறந்த ஊரான திருவையாற்றில் ஆண்டுதோறும், இவருக்கு மேற்சொன்னபடி ஓர் நாள் ஆராதனை விழா ஏற்பாடு செய்து செவ்வனே நடத்திவருகிறார்கள் நம் கர்நாடக ஸங்கீத சிரோன்மணிகள்.
இந்த விழாவின் போது, ஸ்ரீ தியாகராஜ கீர்த்தனைகளில் ப்ரஸித்தி பெற்றதான :
“(1) ஜகதாநாந்த காரகா, (2) துதுகு; (3) ஸமயாநிகி, (4) கனகன ருசிரா (5) எந்தரோ மகாநுபாவு”
என்ற ஐந்து கீர்த்தனைகள் (பஞ்சரத்ன கீர்த்தனைகள்) கர்நாடக ஸங்கீத வித்வான்கள் தியாகராஜர் ஸந்நிதியில் ஒன்றுகூடி பக்கவாத்யங்கள் குழாங்களோடு கானாம்ருதமாக வழங்கப்பெறும்.
கர்நாடக ஸங்கீதத்தில் மேளகர்த்தா ராகங்கள் இவ்வளவு என்ற கணக்கில் இருந்தாலும் – “உடனே 72, 74 என்று சொல்லி அல்லது comment/reply போட்டு குழப்பவேண்டாம்” – google ல போட்டா ஒவ்வொரு ராகத்துக்கும் குடும்பப் பாங்கெல்லாம் சொல்லி பல results வருது – அதனால இங்கு எண்ணிக்கை போடவில்லை.” – ஆகையால் மேளகர்த்தா ராகங்கள் இவ்வளவு என்ற கணக்கில் இருந்தாலும் அதன் குடும்ப ஸகிதங்கள் எல்லாம் ஒன்றுகூடி மொத்தமாகப் “பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன? “பஞ்சரத்ன கீர்த்தனை பாட ஸுகமாகுமே” ன்னு தில்லுமுல்லெல்லாம் செய்தாலும், ஐந்து ரத்தினமான ராகங்களான :
“(1) நாட்டை (ஜகதாநந்த) , கௌளை (துதுகு) , ஆரபி (ஸமயாநிகி) , வராளி (கன கன) ஸ்ரீ (எந்தரோ)”
ஆகியவற்றில் அமைந்த ஐந்து கீர்த்தனைகள் ஸாமகானமாக அமைந்த சிறப்பால், இந்த ஐந்தையும் வேட்கையோடு கேட்கையில் அல்லது வேடிக்கையாகக் கேட்டாலும், இவை நம் ஐந்தை (புலன்கள்) தெய்வத்தின்பால் ஒருங்கிணைப்பவனாக இருக்கின்றன.
“Feather in the cap” என்றபடி, இந்த ஐந்துக்குள்ளுமே ஒரு போட்டி வைத்தால் அவற்றில் “எந்த ரோ” வில் அமர்ந்து பாடினாலும், கேட்டாலும், ஸ்ரீ ராகத்தில் அமைந்த “எந்தரோ மகாநுபாவு” மற்ற நான்கு ரத்தினங்களை ஜெயித்துவிடும்.
ஆழ்வார்களையே தெரியாதவரும்கூட, திவ்யப் ப்ரபந்தங்களில் பரிச்சயமில்லாதவர்கூட “பல்லாணடு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு” என்று சொல்வதுபோல,
“கிரிக்கெட்டே தெரியாதவன் கூட சச்சினையும் தோனியையும் பெயரளவிலாவது தெரிந்து வைத்திருப்பது போல,
“கர்நாடக ஸங்கீதம்னா ? “கிலோ என்ன விலை ன்னு கேட்கும்”சிந்துபைரவி படத்தில் பைரவி (சுலக்ஷணா) போன்றவர்கூட திருவையாறு விழாவின்போது “எந்தரோ மகாநுபாவு அந்தரிக்கி வந்தனமுலு” ன்னு முணுமுணுக்கவாவது செய்வார் அல்லது குறைந்தபட்சம் தப்பு தப்பாகத் தாளம் போட்டு தலையையாவது ஆட்டுவார் என்பது உறுதி. அவ்வளவு ப்ரஸித்தி “எந்தரோ”. கர்நாடக ஸங்கீத வித்துவான்கள் அத்தனைபேருக்கும் தன்னுடைய வந்தனத்தைத் தெரிவிக்கிறார் ஸ்ரீ தியாகராஜர் “எந்தரோ” வில். நிற்க. இது பஞ்சரத்ன கீர்த்தனைகளை பற்றி.
இனி இந்த விழாவின் மற்ற சிறப்பம்சங்களை லேசாகப் பார்ப்போம்.
கடந்த ஆண்டு வரை, பக்கவாத்தியங்கள் எல்லாம் சேர்த்து கர்நாடக ஸங்கீதம் தெரிந்த 250 முதல் 300 பேர் வரை இவ்விழாவில் பங்குகொண்டு சிறப்பிப்பார்கள். அதில் எப்படி பல நூறு ராகங்களில் ஐந்து ப்ரஸித்தியோ, அதுபோல பல பல ஆயிரம் வித்வான்களில் ஐந்து அல்லது பத்து என்ற கணக்கில் ப்ரஸித்தி பெற்றவர்கள் (female artists) பங்கு கொண்டு இவ்விழா தங்களுக்கென்றே அமைந்ததுபோல் முதல் வரிசையில் அமர்ந்து பாடு(படுத்து)வார்கள். இதில் சில பாடகர்களது கம்மல்களும் சேர்ந்து கம்மும்.
ஆண் பாடகர்களில் சில ரத்தினங்கள் இருந்தும், கம்மல்களுக்கு முன்னே கம்முனு பாடும்படிதான் ஆகிவிடும். சிலர் “camera தங்கள் பக்கம் எப்போது திரும்பும்” என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு, அது தன் பக்கம் திரும்புகையில் தங்கள் முகத்தை அப்படி இப்படித் திருப்பாமல் “கேமராவிற்கு நான் அழகு; எனக்குக் கேமரா அழகு” என்பதுபோல் வாயை பலமாக அசைத்து, தாளத்தை பலமாகப் போட்டு, பாவத்தை (bAvam) மிருதங்க சக்கரவர்த்தி சிவாஜிபோல் கடினமாக்கி .. … ” no no ….” என்று என்மனது எச்சரிப்பதால் இது இதற்குமேல் இது வேண்டாம்.
இப்படிப்பட்ட சில காமெடி பீஸ்கள் இருந்தாலும், கார்நாடக ஸங்கீதம் என்றால், அதற்கொரு orthadoxy (ஆசாரம்) இருக்குமே! ராகத்திலும் சரி; (உடல்) பாவத்திலும் சரி; அது குலையாமல் “தனி ஆவர்த்தனம்” செய்யாமல், சங்கத்தோடு இசைந்து அற்புதமான நிகழ்ச்சியை நமக்கு விருந்தாக அளிப்பார்கள் பல பல வித்வான்கள்.
இன்றைய விழாவில் வித்வான்கள் எண்ணிக்கை மிகக்குறைவு என்றாலும், அதனால் ஒன்றும் குறையில்லை. “ஊரார் ஒன்றுகூடி இழுத்தால் போதும்; தேர் சிறப்பாக ஓடிவிடும்” என்றபடி, இன்று திருவையாறு வித்வான்கள் இவ்விழாவிற்கு அதியழகு சேர்த்துவிட்டார்கள்.
Let me offer my “vandhanam” to all of them through the same and unique words of Saint Sri Thyaga Brammam – எந்தரோ மகானுபாவு அந்தரிக்கி மா வந்தநமுலு.