
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர் கலைமகள்…
ஆகமம் என்றால் கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள், திருவிழாக்கள் நடத்த வேண்டிய முறை ஆகியவை அடங்கிய நூல் வகை
சைவ ஆகம நூல்களை ஆகமம் என்றும், வைணவ ஆகம நூல்களை ஸம்ஹிதை என்றும், சாக்த ஆகம நூல்களை தந்திரம் என்றும் பொதுவாக அழைப்பார்கள்.
ஆகமம் என்ற வார்த்தை இன்று பலராலும் உச்சரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு என்ன அர்த்தம்? என்று எனக்குத் தெரிந்த இரண்டு சிவாச்சாரியார்களிடமும் ,சில வைணவ பெரியவர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
என்னுடைய இனிய நண்பர் பூசை ஆட்சி லிங்கம் அவ்வப்போது என்னிடம் சொல்லும் கருத்துக்களைக் குறித்து வைத்துக் கொண்டும், வைணவ பத்ததிகளில் விவரம் தெரிந்த செங்கோட்டை ஸ்ரீராம் போன்றவர்களின் குறிப்புகளில் இருந்தும் இந்தக் கட்டுரையைத் தொகுத்துள்ளேன். சில சிவாச்சாரியார்கள் என்னிடம் சில குறிப்புகளையும் கொடுத்தார்கள். இது ஒரு நீண்ட கட்டுரை தான். ஆனால் தேவையானது என்று நினைக்கிறேன்.
இதில் ஏதாவது தவறு இருந்தால் பின்னர் அதனைத் திருத்திக் கொள்ளலாம். உவேசா நூலகத்தில் உள்ள சில நூல்களோடும் ஒப்பீடு செய்தும் பார்த்தேன். மிகப்பெரிய புத்தகமாக எழுத வேண்டியதை அகத்தியர் காவிரியை கமண்டலத்தில் அடக்கியது போல் சுருக்கித் தந்திருக்கிறேன். மீண்டும் சொல்கிறேன் தவறுகள் இருந்தால் அதனைத் திருத்திக் கொள்ளலாம்.
ஆகமம் என்றால் கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள், திருவிழாக்கள் நடத்த வேண்டிய முறை ஆகியவை அடங்கிய நூல் வகை ஆகும். ஆகம நூல்கள் சமஸ்கிருத மொழியில் (கிரந்தம்) உள்ளன. ஆகமங்கள் நான்கு வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை என்றாலும் இவை வேதங்களுக்கு மாறான கருத்துக்களைச் சொல்லாதவை. ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு வகையான வழிபாட்டு முறைகள் பற்றி விரிவாகக் கூறுகின்றன.
ஆகமம் என்னும் சொல், ஆ-பாசம், க- பசு , ம-பதி எனப் பொருள் கொள்ளத் தக்கதால் முப்பொருளுண்மையை உணர்த்தல் என்றும் ,ஆ – ஞானம் , க-மோட்சம்,ம- மலநாசம் என இன்னோர் விதத்தில் பொருள் கொடுப்பதாலும் ஆன்மாக்களுக்கு மலத்தை நாசம் பண்ணி சிவஞானத்தை உபதேசித்து மோட்சத்தைக் கொடுத்தல் என்னும் பொருள் படும்படி விரிந்து நிற்கின்றது.
ஆகமங்கள் இறைவனால் அருளப்பட்டவையாகும். மாணிக்கவாசகர் “ஆகமம் ஆகி நின்று அன்னிபான்” எனவும் “மண்ணுமாமலை மகேந்திரமதனிற் கொள்ள ஆகமம் தோற்றுவித்தருளியும்” என்றும் பாடுகின்றார்.
திருமூலர் ஆகமம் பற்றிக் கூறியதை “சுந்தர ஆகமம் சொல் மொழிந்தானே” என்ற குறிப்புத் தெளிவுபடுத்துகின்றது. திருமூலர் இறைவனால் ஆகமம் அருளப்பட்டதை “தானாய் அடியார்கள் அர்ச்சிக்கும் நந்தி உருவாகி ஆகமம் ஓங்கி நின்றாளே” என்றும் கூறுகின்றார்.
ஆகமங்கள் சிவபெருமானின் ஐந்து முகத்திலிருந்தும் தோற்றம் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
சைவ ஆகமங்கள் என்பவை சிவ வழிபாட்டின் முக்கியத்துவத்தினையும், சிவாலயம் அமைக்கும் விதம், பூஜை முறைகள், அபிஷேகம், அலங்கார செய்முறை போன்றவற்றை விளக்குகின்ற நூல் வகையாகும்.
பூஜைக்கு உரிய சிவாச்சாரியார்களை அவர்களின் மரபை ஒட்டியும் அவர்கள் பயின்ற முறைகளை ஒட்டியும் தேர்ந்தெடுத்தல் முதற்கொண்டு அனைத்தும் சிவாகமத்தில் அடங்கும் என்கிறார் என்னுடைய நண்பர் ஒருவர்.
அகோரசிவாச்சாரியாரின் “க்ரியாக்ரம த்யோதி அபர க்ரியாவிதி” என்னும் நூல் தமிழகத்தில் சிவபூஜைக்கான முக்கியமான ஆகமவிளக்க நூலாக கருதப்படுகிறது.
சிவாகமங்கள் 28- உள்ளன. காரண, காமிக, ரௌரவ, பௌஷ்கர ஆகமங்கள் பரவலாக உள்ளன. தென்னாட்டு கோவில்களில் இந்த ஆகம முறை தான் கடைப்பிடிக்கப்படுகிறது!
இவையனைத்தையும் பயில்வதற்காக எழுதப்படும் நெறிநூல்கள் அல்லது வழிகாட்டு நூல்கள் பத்ததிகள் எனப்படுகின்றன. ஒரு கோவிலில் பின்பற்றப்படும் ஆகமும் இன்னொரு கோவிலில் பின்பற்றப்பட வேண்டும் என்கிற நியதி இல்லை. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு முறை இருக்கிறது. அந்த முறை வழுவாமல் இருக்க வேண்டும் என்பதுதான் சிவாச்சாரியார்களின் எண்ணமாக இருந்து வருகிறது. இதற்காக அந்த ஆதி குடிகள் பெரிதும் பாடுபட்டு வருகிறார்கள். உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள் இவர்கள்தான்!!
பதஞ்சலி யின் “மகாபாஷ்யம்” என்ற நூலில் ஆகம விவரங்கள் சரியாகப் புரியும் வண்ணம் எடுத்துக் கூறப்பட்டுள்ளன! சைவ ஆகமங்கள் இருபத்தெட்டும், சிவபெருமானின் ‘சதாசிவ’ முகங்களிலிருந்து அவராலேயே வெளியிடப்பட்டவை.
சிவனின் ‘சத்யோஜாத’ முகத்திலிருந்து காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம் என்று ஐந்து ஆகமங்களும், ‘வாமதேவ’ முகத்திலிருந்து தீப்தம், சூட்சுமம், ஸகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம் என்று ஐந்து ஆகமங்களும், ‘அகோரம்’ என்ற முகத்திலிருந்து விஜயம், நிசுவாசம், சுவாயம்புவம், அனலம், வீரம் என்று ஐந்து ஆகமங்களும், ‘தத்புருஷ’ முகத்திலிருந்து ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், பிம்பம் என்று ஐந்து ஆகமங்களும், ‘ஈசான’ முகத்திலிருந்து புரோக்கீதம், லலிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பரமேசுவரம், கிரணம், வாதுளம் ஆகிய எட்டு ஆகமங்களும் வெளிப்பட்டன. இவை ‘சிவபேத ஆகமங்கள்’ என்றும் ‘ருத்ரபேத ஆகமங்கள்’ என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
சிவாக்கிரயோகியும் தமது சிவஞானபோதம் என்ற தமிழ் நூலிலும் விவரித்துள்ளனர். ஆகமங்கள் இருபத்தெட்டும், நாடு முழுவதும் பரவி எல்லாராலும் பின்பற்றப்படுகின்றன. ஆகமங்கள் தமிழ் மொழிக்கு உரியவை என்று சொல்வோரும் உண்டு!!
பாஞ்சராத்திரம், வைகானசம் ஆகிய இரண்டும் வைணவ ஆகமங்கள் ஆகும்.
எம்பெருமானை உபாசிப்பது மானசம், ஓமம், விக்கிரக ஆராதனம் என்று மூன்று விதமாக நடைபெறும். மூன்றாவது வகை ஆத்மார்த்தம் என்றும் பரார்த்தம் என்றும் இருபிரிவினையுடையது. ஒருவர் தம் குடும்ப நலன்களைக் கருதித் தம் இல்லத்தில் எம்பெருமானின் திருமேனியை எழுந்தருளப் பண்ணித் தம் சக்திக்கு ஏற்றவாறு ஆராதிப்பது ஆத்மார்த்தம் ஆகும்.
ஆத்மார்த்த பூஜை.
வீட்டில் ஏற்றப்பெற்ற விளக்கு எங்ஙனம் வீடு முழுதும் ஒளியை உண்டாக்குகின்றதோ அம்மாதிரியே இவ்வாராதனம் அவர்தம் குலம் முழுவதும் மேம்பாடு அடைவதற்குக் காரணமாக இருக்கும். பரார்த்தம் என்பது உலக நலன்களைக் கருத்தில் கொண்டு திருக்கோயிலில் எழுந்தருளப் பண்ணியிருக்கும் திருமேனிகளை விதிப்படி வழிபடுவது. திவ்ய பிரபந்தங்கள் சொல்வது உட்பட எல்லாம் இதில் அடங்கும்.
சந்திர சூரியர்களின் ஒளி உலகினருக்குப் பயன்படுவது போலே இந்த வழிபாட்டால் உண்டாகும் பலன் உலகம் முழுவதையும் வாழ்விக்கும். இங்கனம் குறிப்பிட்டவாறு பிரதிட்டை செய்யப்பெற்ற திருமேனியின் சக்தி தாரதம்மியத்தால் அந்தந்த தலங்கள் (1) திவ்வியம் (2) ஆர்ஷம் (3) பெளராணம் (4) மாதுசம், (5) ஸ்வயம், வியக்தம் என்று ஐந்து வகையாகப் பாகுபடுத்தப் பெற்றுள்ளன. இந்தத் திருத்தலங்களின் சொரூப சக்தி விசேடங்கள் ஆகமங்களில் விரிவாக எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.
இந்த ஆகமங்கள் பாஞ்சராத்திரம், வைகாநச கல்பசூத்திரம் என்பவையாகும். இவற்றுள் பாஞ்சராத்திர சம்ஹிதை ஆதி கேசவப்பெருமாள் திருவுள்ளப்படி திரேதாயுகத்தில் உண்டானது. அனந்தன், கருடன், விஷவக்சேனர், நான்முகன், சிவன் இவர்கள் அனைவர்க்கும் ஏற்பட்ட ஐயங்களை பகவான் ஐந்து இரவுகளில் போக்கியருளினான் என்று சொல்வார்கள்.
வைகானச கல்ப சூத்திரம் ஸ்ரீமன் நாராயணனே விகனசர் என்னும் மாமுனிவருக்கு அருளிச் செய்தது.
இந்த இரண்டு ஆகம சாத்திரங்களும் ஞானம், யோகம், கிரியை, சரிதம் இவற்றை நுவலும். இவற்றுள் கிரியையும் சரிதமும் நம் சந்ததிகளுடன் சம்பந்தப்பட்டவை. கிரியை என்பது திருக்கோயில்கள் கட்டப் பெறுவது பற்றியும், திருமேனிகள் செய்வது பற்றியும் இத்திருமேனிகளைப் பிரதிஷ்டை செய்வது பற்றியும் சொல்லும்.
சரியை என்பது திருக்கோயிலில் நடைபெறும் தினசரிச் சடங்குகள், உற்சவங்கள் நடைபெறும் முறை இவை பற்றிச் சொல்லும், இந்த இரண்டு சாத்திரங்களும் வைணவ சந்நிதிகளைப் பற்றியே ஏற்பட்டிருந்தாலும், சில சந்நிதிகள் பாஞ்சராத்திர ஆகம நெறிகளையும் மற்றவை வைகானச ஆகம நெறிகளையும் மேற்கொண்டு நடைபெற்று வருகின்றன. கேரளாவில் உள்ள கோவில்களில் தந்திர முறை பின்பற்றப்படுகிறது. சில முருகன் கோவில்களிலும் இந்த முறையைப் பின்பற்றுவார்கள்.