உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 2 – 1979 போட்டி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
1979 கிரிக்கெட் உலகக் கோப்பையும் புருடென்ஷியல் கோப்பை என்று அழைக்கப்பட்டது. இது கிரிக்கெட் உலகக் கோப்பையின் இரண்டாவது பதிப்பாகும். இது 1979 ஜூன் 9 முதல் 23 வரை இங்கிலாந்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் எட்டு அணிகள் பங்குபெற்றன. 1975ஆம் ஆண்டு இடம் பெற்றிருந்த கிழக்கு ஆப்பிரிக்க அணிக்குப் பதிலாக போட்டிக்கான தகுதிச் சுற்றில் இலங்கையுடன் கனடா அணி தகுதி பெற்றது. இது மட்டுமே ஒரு மாற்றமாக இருந்தது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரண்டு அணிகள் தகுதிபெற்று, இறுதிப் போட்டி மீண்டும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றதால், வடிவம் அப்படியே இருந்தது.
குரூப் A பிரிவில் இங்கிலாந்து பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருந்தன. குரூப் B பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இலங்கை, இந்தியா ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தன. முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தானுடன் குரூப் ஏ பிரிவிலிருந்து தகுதிச் சுற்றில் இங்கிலாந்து இணைந்தது, அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் நியூசிலாந்தை விட குரூப் பி பிரிவில் முதலிடம் பிடித்தது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து இரண்டும் முறையே பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்தை எதிர்த்து அரையிறுதியில் வெற்றி பெற்ற பிறகு, லார்ட்ஸில் நடந்த இறுதிப் போட்டியில் சந்தித்தன. 23, ஜூன், 1979இல் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 92 ரன்கள் வெற்றியுடன் தங்கள் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.
மேற்கிந்திய வீரர் கோர்டன் க்ரீனிட்ஜ் நான்கு போட்டிகளில் 253 ரன்களை குவித்து அதிக ரன் எடுத்தவர் ஆனார். இங்கிலாந்து வீரர் மைக் ஹென்ட்ரிக் 10 விக்கெட்டுகளுடன் முன்னணி விக்கட் எடுத்தவராக போட்டியை முடித்தார்.
இந்திய அணி குரூப் அளவிலேயே வெளியேறியது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி, நியூசிலாந்து அணிகளுடன் தோற்றது மட்டுமல்லாமல் மூன்றாவது அணியான இலங்கையிடமும் இந்திய அணி தோற்றது. 1975ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எஸ். வெங்கடராகவன் அணித்தலைவராக இருந்தார்.
1979இலும் அவரே அணித்தலைவராக இருந்தார். கபில்தேவ் இந்த உலகக் கோப்பையில் விளையாடினார்.
மேற்கு இந்தியத்தீவுகள் அனிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி முதலில் ஆடி 53.1 ஓவரில் 190 ரன் எடுத்தது. குண்டப்பா விஸ்வநாத் 75 ரன்கள் எடுத்தார். பதிலுக்கு மே.இ. தீவுகள் அணி 51.3 ஓவரில் ஒரு விக்கட் இழப்பிற்கு 194 ரன் எடுத்து வெற்றிபெற்றது. கிரினீட்ஜ் 106 ரன் எடுத்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 55.5 ஓவரில் 182 ரன் எடுத்தது. கவாஸ்கர் 55, பிரிஜேஷ் படேல் 38, கபில்தேவ் 25, கர்சன் கௌரி 20 ரன்கள் எடுத்தனர். பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 57 ஓவர்களில் இரண்டு விக்கட் இழப்பிற்கு 183 ரன் எடுத்து வென்றது.
இலங்கையுடனான மூன்றாவது போட்டியில் இலங்கை முதலில் விளையாடியது. அந்த அணியின் விட்டுமணி (67 ரன்), ராய் டயஸ் (50 ரன்), துலிப் மெண்டிஸ் (64 ரன்) நன்றாக விளையாடினர். அந்த அணி 60 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 238 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி 54.1 ஓவரில் 191 ரன் எடுத்து ஆட்டமிழந்தது.
1975, 1979 ஆகிய இரண்டு போட்டிகளிலும் கோப்பையை வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி 1983இல் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஏன் தெரியுமா? நாளை பார்க்கலாம்.