
கிரீடம் – சில சுவையான தகவல்கள்
கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
ஆசிரியர் கலைமகள்
கிரீடம் என்பது சமஸ்கிருதச் சொல். மணி முடி, மௌலி, மகுடம் என்றும் இதற்கு அர்த்தம் கொள்ளலாம். ஒருவர் ராஜா பதவி ஏற்கும் பொழுது அரசுச் சின்னமாக கிரீடம் அவர் தலையில் குல குரு மூலமாக அணிவிக்கப்படுகிறது.
அதேபோல நாம் வணங்கும் கடவுள்களும் தலையில் கிரீடம் அணிந்து இருப்பார்கள். மிக உயர்ந்த பதவிக்கு உரியவர்களை கிரீடத்தோடு சம்பந்தப்படுத்துவது உண்டு! உலகத்திற்கேத் தலைவர் இறைவன் என்பதால் அவர்களுக்கும் கிரீடம் உண்டு!!
ராமகாதையில் ராவணன் சுறாமீன்(மகரம்) பொறித்த ஒரு நீண்ட கிரீடத்தை அணிந்து வந்தான் என்று கம்பன் சுந்தர காண்டத்தில் சொல்கிறார். இது ஒரு அதிசயமான விஷயம். ஏனெனில் இப்படிப்பட்ட மணிமுடி பற்றிய குறிப்பு வேறு எங்கும் காணப்படுவது இல்லை!!
“வளர்ந்த காதலர் மகரிகை நெடுமுடி
அரக்கரை வரக் காணார்
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட
உயிரொடு தடுமாறி
களம் தவா நெடுங்கருவியில்கைகளில்
செயிரியர் கலைக் கண்ணால்
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவிபுக அலமரலுறுகின்றார்”
வசிஷ்டர் இராமனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் பொழுதும் கிரீடத்தை(மௌலி) தலையில் சூட்டுகிறார்.
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி
இதுவும் கம்ப ராமாயண பாடல். ராமனின் குல குரு வசிஷ்டர் கிரீடத்தை அணிவிக்கிறார் என்பதைப் இப்பாடல் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது!
மலையின் முடியே சிவலிங்கமாக காட்சி அளிப்பதால் “கொடுமுடி” என்று சேலத்திற்கு பக்கத்தில் உள்ள ஊரை அழைக்கிறார்கள். இங்கு எழுந்தருளி உள்ள சிவபெருமானை மகுடேசுவரர் என்று அழைக்கிறார்கள். மகுடேசுவரரின் திருமணத்தைக் காண திருமாலும், பிரம்மனும் இங்கு வந்தார்கள் என்பது ஐதீகம். கோவிலின் முன்பு காவிரி ஆறு செல்கிறது. கொடுமுடியில் இருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பிப் பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியபின் கோவிலுக்குச் செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது.
மதுரைக் கடவுளான சோமசுந்தரப் பெருமான் மணிமகுடத்தைப் பாண்டியர்களுக்கு வழங்கியதாகவும், இந்திர சபைக்குச் சென்று இருந்தபோது பாண்டிய மன்னரிடம் முத்துக்கள் பதிக்கப்பட்ட இந்திர ஆரத்தை தேவேந்திரன் வழங்கியதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது.
பாண்டியர்களின் மணிமுடி பிரசித்தியமானது!! பாண்டியர்கள் காப்பாற்றி வந்த இந்த மணிமுடி(ரத்தினங்களும் முத்துக்களும் அலங்கரிக்கும்) இன்று இலங்கையில் இருப்பதாக நம்பப்படுகிறது.
பாண்டிய மன்னர்களில் ஒருவரான ராஜசிம்ம பாண்டியன், சோழரை எதிர்க்க வழி தெரியாமல் இலங்கைக்குத் தப்பி ஓடினார். அப்போது அவரிடம், பாண்டியர்களின் குலச் சின்னங்களான மணிமகுடம், இந்திர ஆரம் ஆகியவை இருந்தன.
அவற்றுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், அவற்றை இலங்கை அரசரிடம் அடைக்கலமாகக் கொடுத்துவிட்டு, ராஜசிம்ம பாண்டியன் தனது தாயார் வானவன்மாதேவியின் பிறந்த ஊரான சேர நாட்டிற்குச் சென்றுவிட்டார் என்று சொல்லப்படுகிறது!!
பாண்டிய நாட்டை முழுமையாக வென்று தனது குடையின் கீழ்க் கொண்டுவந்த சோழ மன்னர் பராந்தகன், மதுரையில் பாண்டிய அரசராக முடிசூடிக் கொள்ள, பாண்டிய குலச் சின்னமான மணிமகுடத்தைத் தேடினார். அப்போது அந்த மணிமகுடம், இலங்கை அரசரிடம் அடைக்கலப் பொருளாக இருப்பதை அறிந்து, அதனை மீட்டுவர மன்னர் பராந்தகன் தனது படையை இலங்கைக்கு அனுப்பினார்.
சோழர் படை வருவதை அறிந்த மன்னன் பாண்டியனின் மணிமகுடம், இந்திர ஆரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, இலங்கையின் தென்கிழக்கில் உள்ள ரோகணா என்ற காட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டார். காடுகளுக்குள் சென்று ஒளிந்து கொண்ட அவரை, சோழர் படையினரால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது சரித்திர செய்திகளாகும் !!
அதன் பிறகு பாண்டியரின் மணிமகுடத்தையும், இந்திர ஆரத்தையும் கைப்பற்ற பராந்தகன் பல முறை முயன்றும், அவரது அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. சோமசுந்தர கடவுள் அருளிய மணிமுடி என்பதால் சிவபக்தியில் தெளைத்த ராவணேஸ்வரன் பூமியில் அது இருக்கிறது போலும்!!
கிருஷ்ணர் தலையில் அணிந்த கிரீடத்தில் மயிலிறகு அழகு செய்கிறது. இந்த அலங்காரம் அவருக்கு எப்படி ஏற்பட்டது தெரியுமா? கம்சனின் கொடுமை காரணமாக கிருஷ்ணருடைய பெற்றோர் சிறைச்சாலையில் வாடநேரிட்டது. தங்கத்தொட்டிலில் இட்டு சீராட்டப்பட வேண்டிய குழந்தை மூங்கில் கூடையில் கிடத்தப்பட்டு கோகுலத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறான்.
இதனால் ஆயர்பாடி புழுதியில் விளையாட வேண்டியவன் ஆகிறான் ஸ்ரீ கிருஷ்ணன். ஆனால் ராஜலட்சணம் பொருந்திய அவனது முகம் பார்ப்போரையெல்லாம் வசீகரித்தது. அவன் புதுப்புது உத்திகளைக் கையாண்டு சின்னச்சின்ன பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டான். இதனால் கண்ணனை கவுரவிக்க விரும்பினார்கள் ஆயர்பாடி சிறுவர்கள். உடனே அங்கே சுற்றித்திரிந்த மயிலைப்பிடித்தார்கள். அதனிடம் இருந்து ஓர் இறகை எடுத்து கிருஷ்ணனின் தலையில் கிரீடம் போல் சொருகினார்கள். எனவேதான் கிருஷ்ணர் வேடம் அணிகின்றவர்கள் கீரிடத்தைச் சூட்டிக் கொள்ளும் பொழுது அதில் ஒரு மயில் இறகையும் சொருகுவார்கள்.
கிருஷ்ணனின் மருமகனான முருகனின் கீரிடத்திலும் மயில் இறகு உண்டு. அவனே மயில் வாகனன் தானே?
பல கோவில்களில் உள்ள சிலைகளைப் பார்த்தால் அந்த சிலைகளில் உள்ள கிரீடத்தையும் அதன் அழகையும் நாம் கண்குளிரப் பார்க்க முடியும். மணி முடி சூட்டும் வழக்கம் பழங்கால தமிழர்களிடம் இருந்த ஒன்று என்பதை அறிய முடிகிறது. பல கல்வெட்டு செய்திகளும் இதனை உறுதி செய்கின்றன.
கொடுமுடி கோவில், மயிலிறகு கொண்ட கிரீடம் அணிந்த ஸ்ரீ கிருஷ்ணர், ரங்கநாத பெருமானின் கிரீடம் ஆகியவற்றைக் காணலாம்!