spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்சிவன் கோயில்களில் சடாரி வைப்பது உண்டா?

சிவன் கோயில்களில் சடாரி வைப்பது உண்டா?

- Advertisement -

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர் கலைமகள்


பெருமாள் கோவில்களில் சடாரி சாத்துவது சிறப்பு. சடாரியின் மேல் திருமாலின் திருவடி பொறிக்கப்பட்டிருக்கும். இதனால் இறைவன் நம்மை ஆசீர்வதிக்கிறான் என்ற எண்ணம் ஏற்பட்டு நம்முடைய அஹங்காரமும் மட்டுப்படும் அல்லது நீங்கும்.

‘சடை’ என்ற தேவையற்ற விஷயங்களை விலக்குவது அல்லது தீர்ப்பது என்று சடாரிக்குப் பொருள் கொள்ளலாம். பெருமாளுக்கு ஆதிசேஷனை பாதரக்ஷையாகப் பார்ப்பதால் சடாரியை “ஆதிசேஷம்” என்றும் அழைப்பார்கள்.

நம்மாழ்வாரின் இயற்பெயர் மாறன் சடகோபன்! சடாரிக்குப் பெயரும் “சடகோபம்” தான்! நம்மாழ்வார் தான் ஆதி குரு! அவர் தான் சடாரியாக வருகிறார் நம்மிடம்! அவரே இறைவனின் சடாரியாக இருந்து, அவன் பாதங்களை, நம்மை நோக்கிக் கொண்டு வந்து கொடுத்து, நம்மை ஆசீர்வதிக்கிறார் – இதுவே சடாரியின் பொதுவான தத்துவம்!

உலகத்தில், தலை மேல் வைத்துக் கொண்டாட வேண்டிய ஒரே பொருள் எது? – இறைவனின் திருப்பாதங்கள் தான்! – எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்பது தான் வள்ளுவம்! அவன் மலரடிகளைச் சூட்டிக் கொள்வதை விட பெருமை வேறெதுவும் இல்லை. இராமகாவியத்தில் ஸ்ரீ ராமபிரானின் பாதுகையை வைத்துத்தானே பரதன் ஆட்சியே செய்தான்!!

அத்வைத மடங்களில் ஆதி சங்கரரின் பாதுகைகளை வைத்து பூஜை செய்து தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு பத்திரமாக அது இருக்க வேண்டிய இடத்தில் கொண்டு சேர்ப்பார்கள். பாத பூஜை சிறப்பான ஒன்றாக அத்வைத மடங்களில் கருதப்படுகிறது.

ஸ்ரீ ராமாநுஜரின் பரமகுருவான ஆளவந்தார், தமது ஸ்தோத்திர ரத்தினம் என்ற நூலில், “த்ரிவிக்ரம த்வத் சரண அம்புஜ த்வயம் மதீய மூர்த்தானம் அலங்கரிஷ்யஸி”என்ற சுலோகத்தில், “திரிவிக்கிரமப் பெருமானே, உனது திருவடிகளை என் தலைமேல் எப்போது மீண்டும் பதிக்கப் போகிறாய்?” என்று திருமாலைப் பார்த்துக் கேட்கிறார். திருமாலின் திருவடிகள் அத்தனை விசேஷமானவை.

சடாரியை எல்லோர் தலையிலும் வைத்து விட்டு, அதை அலம்பாமலேயே மீண்டும் உற்சவர் பக்கம் கொண்டு செல்கிறார்களே, அது சரியா? சடாரியை அலம்ப வேண்டாமா? என்ற கேள்வி எழும்புவது இயற்கை!! பகவானுக்கு நேவேத்தியம் பண்ணினால் கையை அலம்பிக் கொள்கிறோம். பாவனையிலாவது உத்திரனியில் தண்ணீரை எடுத்து சிறிது தெளித்துக் கொள்கிறோம்.

அதெல்லாம் சரி ஆனால் சடாரியை அலம்பக் கூடாது என்கிறது பாஞ்சராத்திர ஆகமம். பெருமாளின் திருவடி எப்போதுமே தூய்மையானது. எந்த தோஷமும் அதற்கு கிடையாது. அதன் மீது எந்த தோஷமும் ஒட்டாது. திருமாலின் திருவடி நிலையின் வடிவமாகச் சடாரி இருப்பதால், எத்தனைபேர் தலையில் அதை வைத்தாலும், அது தூய்மையானதாகவே இருக்கும். எனவே அதை அலம்புவதில்லை என்ற வியாக்கியானம் உண்டு!!

நம்மாழ்வார் சடாரி என்பதால் “சடாரி சாதியுங்கோல்” என்ற பெயரை பெருமாள் சந்நிதியில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.ஆழ்வார் திருநகரி திவ்ய தேசத்தில், ஸ்வாமி நம்ஆழ்வார் சந்நிதியில், குருபரமபிராயி ஸ்தல புராண விசேஷத்தில் காணப்படுவது போல், நம்ஆழ்வாரின் திருவடி ‘தாமரை’யாக இருப்பதால், “சுவாமி ராமானுஜர் சாதியுங்கோல்” என்று தான்கேட்க வேண்டும். முதலிஆண்டவன் சுவாமி ராமானுஜரின் திருவடி என்பதால் ‘சடாரி’ என்று கேட்கக் கூடாது என்பார்கள். அது சரி சிவன் கோவிலில் சடாரி சாத்தக்கூடிய வழக்கம் உண்டா? பொதுவாக இல்லை என்று தான் பதில் வரும்! ஆனால் வித்தியாசமாக ஒரு கோவிலில் சடாரி சாதிக்கிறார்கள்!!

பக்தர்களின் தலையில் சடாரி வைக்கும் நடைமுறை, தொன்மைச் சிறப்பு வாய்ந்த, நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த ஆச்சர்யமான பழக்கத்துக்குக் காரணம், சிவபெருமான் திருநல்லூரில் திருநாவுக்கரசரின் தலையில் தன் திருவடிகளைவைத்து ஆசீர்வாதம் செய்ததுதான்!!

திருச்சத்திமுற்றம் ஸ்தலத்தைத் தரிசித்த திருநாவுக்கரசர், “இறைவா, யமன் என்னைக் எடுத்துக் கொண்டுபோகும் முன்னர் உன் திருவடியை என் தலை மீது சூட்டி ஆசீர்வாதம் செய்யுங்கள்” என வேண்டிக் கொண்டாராம்!!

திருச்சத்திமுற்றத்தில் வேண்டிக்கொண்ட திருநாவுக்கரசருக்கு, நல்லூர் திருத்தலத்தில் சிவபெருமான் திருவடிகளைவைத்து ஆசீர்வதித்தார். அதை நினைவுகூரும் வகையில், இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சிவபெருமானின் திருவடிகள் பதிக்கப்பட்ட சடாரிவைக்கப்படுகிறது. நவகிரஹம் எதுவும் இல்லாத சிவஸ்தலம் இது.

குந்திதேவிக்கு தோஷ நிவர்த்தி அளித்த ‘சப்த சாகர’ தீர்த்தம் இருக்கும் இடம்.

பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயிலுக்கு முன் பெரிய சப்த சாகரம் எனும் தீர்த்தக்குளம் காணப்படுகிறது. கர்ணனை ஆற்றில் விட்டதால் ஏற்பட்ட பாவத்தை குந்தி தேவி சப்த சாகரத் தீர்த்தத்தில் போக்கிக்கொண்டாள். சப்த சாகரம் என்றால் ஏழு கடல்கள் ஒரே இடத்தில் சங்கமித்திருக்கும் இடம் என்று பொருள்.ஸ்தலத்தின் அம்பாளின் பெயர் கல்யாண சுந்தரி. அகத்தியருக்கு கல்யாணக் கோலத்தில் காட்சி தந்ததால், ஐயனும் அம்மையும் `கல்யாண சுந்தரரேஸ்வரர்’ என்றும், `கல்யாண சுந்தரி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். அம்பாளை கிரிசுந்தரி (மலையழகி) என்றும் அழைக்கிறார்கள்.

திருநல்லூர் அமைவிடம்:தமிழ்நாட்டில் கும்பகோணம் – தஞ்சை இரயில் பாதையில் சுந்தரப்பெருமாள் இரயில் நிலையத்திலிருந்து தெற்கே 3-கி.மீ. தூரத்தில் உள்ளது. பாபநாசம் என்னும் தலத்திற்கு கிழக்கே 5-கி.மீ. தொலைவில் உள்ளது. திரு சத்தி முற்றம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பாடல் பெற்ற பட்டீச்சுரம் என்னும் திருத்தலத்துக்கு மிக அருகில் இருக்கிறது. அருகில் உள்ள இரயில் நிலையம் தாராசுரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe