spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைசனாதனத்தில் சமத்துவம்

சனாதனத்தில் சமத்துவம்

- Advertisement -

கட்டுரை: பத்மன்

வளர்ச்சி அடைந்த மரம் எதுவும் வேரை விலக்குவதில்லை. ஏனெனில் வேரறுந்தால் எவ்வளவு வளர்ந்த மரமும் வீழ்ந்துபடும். மரத்தில் கிளைகளும், கிளைகளில் கொம்புகளும், கொம்புகளில் தளிர் இலைகளும், இலைக் காம்புகளில் பூக்களும் புதிது புதிதாய் முளைக்கும். அந்தப் புதுமைகள் அனைத்தையும் தாங்கிப் பிடிப்பது, அவற்றின் ஜீவாதாரமாய் இருப்பது பழைமையான வேர்கள். ஆகையால் மரத்தின் புதுமைகள் எதுவும் பழைய வேர்களை வெறுப்பதில்லை. பத்தாம்பசலி என்று பரிகாசம் செய்வதில்லை.

ஆனால், மனிதர்களில் ஹிந்துக்களிடம் மாத்திரம் ஓர் வினோத குணம் உண்டு. பழைமை என்றால் பரிகாசத்துக்குரியது, அது பிற்போக்குத்தனமானது என்று ஓர் எண்ணம். நேற்று முளைத்த நாட்டைச் சேர்ந்தவர்கள்கூட, தங்களது பாரம்பரியப் பெருமை என்று எதையாவது முன்னிறுத்த முனைகிறார்கள். ஆனால், பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் வாய்ந்த, உலகின் மிக மூத்த நாகரிக, பண்பாட்டைச் சேர்ந்த நாம், நமது வேர்களை வெறுக்கிறோம்.

காலனியாதிக்க அடிமை புத்தியும், அவர்களது கால்களை வருடி வளர்ந்த பாசாங்கு பகுத்தறிவும், எதையும் வர்க்க பேதமாகப் பார்க்கும் வக்கரித்த கம்யூனிஸமும் வழங்கிய தீய பரிசு இது. இந்திய விடுதலைக்குப் பிறகும் இத்தகு எண்ணவோட்டத்தில் இருந்து நாம் இன்னமும் சுதந்திரம் பெறாததால், சுயபுத்தி தடுமாறி நமது பாரம்பரியப் பெருமையை உதாசீனப்படுத்துகிறோம்.

இதற்கு ஓர் உதாரணம், சனாதனம் என்ற சொல்லுக்கு, உடனிருந்தே கொல்லும் இந்த வியாதிகளால் உருவாக்கித் தரப்பட்டுள்ள அர்த்தம். சனாதனம் என்றால் பகுத்தறிவு இல்லாதது, வேறுபாடுகளைக் கற்பிப்பது, அடிமைத்தனத்தை உபதேசிப்பது, மனிதர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது, மற்றவர்களோடு முரண்படச் செய்வது, சாதிகளை உருவாக்கியது, சமத்துவம் இல்லாதது என்பதெல்லாம் இந்தப் புதிய ‘அகராதி’களின் பொல்லாங்குத்தனமான பொருள்கொள்ளல்கள்.

உண்மையில் சனாதனம் என்பது என்ன? அது நமது பாரம்பரியத்தின் ஆணிவேர் மட்டுமல்ல, மானுடத்தின் மிக ஆழமான அஸ்திவாரமும்கூட. ஆதனம் என்றால் எப்போதும் நிலைத்திருப்பது, பன்னெடுங்காலமாக நீடிப்பது, தோன்றிய காலம் தெரியாத பழம்பெருமை வாய்ந்தது என்று பொருள். அதற்கு முன்னொட்டாக இருக்கும் சன்(சம்) என்பது நன்மை என்ற பொருளுடையது. சம்ஸ்கிருதி (நற்பண்பு), சம்ஸ்காரம் (நல்லொழுக்கம்), சங்கரம் (நற்செய்கை) என நன்மை என்ற பொருள் கொண்ட முன்னொட்டுகள் இருப்பதை நோக்குக. அந்தவகையில் சனாதனம் என்பதற்கு வெறுமனே தொன்றுதொட்டு இருக்கக்கூடிய விஷயம் என்று பொருள் அல்ல, தொன்றுதொட்டு நிலைத்திருக்கும் நல்ல தன்மை என்பதே சரியான பொருள்.

நமது வேதங்களும், உபநிஷதங்களும் சனாதனமானவை. அவற்றில் இருந்து கிளைத்தைவகள்தான் இதிகாச-புராணங்களும், தத்துவங்களும். இவற்றை ஆதாரமாகக் கொண்டிருப்பதுதான் ஹிந்து மதம் என்ற பொதுப் பெயரால் வழங்கப்படுகின்ற நமது சனாதன தர்மம். தர்மம் என்றால் அறம் என்று பொருள். தர்மம், அறம் என்பதற்கு பிச்சை போடுவது, தானம் கொடுப்பது என்பதாக இப்போது பொருள் சுருங்கிப் போயிருக்கிறது.

திருவள்ளுவரின் அறத்துப்பால் என்ன பிச்சையிடும் கலை அல்லது தானம் செய்யும் முறையையா போதிக்கிறது? தர்மம், அறம் என்பதற்கு நாம் வாழுகின்ற வழிமுறைகளை வரையறுப்பது, வாழ்க்கைக்கான நெறிமுறைகள் என்று பொருள். ஆகையால்தான் நமது சனாதன தர்மம் என்பது வெறும் வழிபாட்டு மதமாக இல்லாமல், நம்மை வழிப்படுத்தும் வாழ்க்கை முறையாக இருக்கிறது.

சராசரி ஹிந்துக்களின் வாழ்க்கை முறைக்கு, சனாதனமாக விளங்கக்கூடிய வேதங்களும், உபநிஷதங்களும்தான் ஆணிவேர். இந்த ஆணிவேரில் குடிகொண்டுள்ள அதி உன்னத சமத்துவ, மனிதநேய மற்றும் அனைத்து உயிரினங்களையும் இயற்கையையும் உள்ளடக்கிய ஆன்மநேய தத்துவங்களை நாம் புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும்.

கடவுளை மற, மனிதனை நினை என்கிறார்கள் பகுத்தறிவுவாதிகள். மனிதர்கள் அனைவரும் சமம் என்றும் மதம் ஒரு போதை (அபின்) என்றும் சொல்கிறார்கள் கம்யூனிஸவாதிகள். அதேநேரத்தில், மனிதனை மனிதன் உண்மையிலேயே நினைத்துப் பார்க்க வேண்டுமானால் அனைத்து மானுடர்களும் கடவுளின் அங்கம் என்பதை முதலில் அவன் உணர வேண்டும் என்றும், அனைவருள்ளும் நம்மை இணைக்கும் தன்மையாகிய ஆண்டவன் இருப்பதை அறிந்துகொண்டால்தான் அனைவரும் சரிசமம் என்பது உறுதிப்படும் என்றும் நமது சனாதன தர்மமாகிய ஹிந்து மதம் போதிக்கிறது. இது மூடநம்பிக்கையா? போதையா? இல்லையே! இதுவன்றோ மானுடத்தையும் சமத்துவத்தையும் முழுமையாய் நிறுவுகின்றது!

“ஈஸா வாஸ்யமிதம் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்” என்கிறது யஜுர் வேதம் (40.1). உலகில் உள்ள அனைத்திலும் ஆண்டவனே உறைகிறார், அவரே அகில உலகமாகவும் பரவி நிற்கிறார் என்பதே இதன் பொருள். இதையே, “ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்” என்கிறது சாந்தோக்ய உபநிஷதம் (3.14). ஆனவை அனைத்தும் அந்த பிரும்மமே (ஆண்டவனே) என்பது இதன் பொருள்.

இவ்வாறாக அனைத்திலும் இருக்கும் ஆண்டவனைப் பாராமல், நான், நீ, அவன், அவள், அது என்று தனித்துப் பார்த்து பேதம் செய்வதால்தானே சமூகத்தில் பல சச்சரவுகளும், கொடுமைகளும் ஏற்படுகின்றன?

மனிதர்களில் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களிலும், அனைத்துப் பொருள்களிலும் அந்த ஆண்டவனாகிய தன்மை வீற்றிருக்கிறது என்கிறது நமது சனாதன தர்மம். இயற்கையோடு ஒன்றி வாழ் என்றும், இயற்கையை மாசுபடுத்தாதே என்றும், பிற உயிரினங்களையும் மதியுங்கள் என்றும் மேலைநாடுகளில் மெல்லிய சப்தம் தற்போது எழுகிறது.

இதனை பன்னெடுங்காலம் முன்பே நமக்கு உரத்த குரலில் நமது முன்னோர்கள் உபதேசித்திருக்கிறார்கள். அதனால்தான் நாம் மண்ணையும், மரத்தையும், ஆறு, குளங்களையும், பசுக்களையும் கடவுள் என்று கருதி அவற்றை புனிதமாக மதித்துக் காப்பாற்றும் மரபைப் பெற்றோம். ஆனால், இடைக்காலத்தில் அந்த மரபை மறந்து, வெறுமனே சடங்கு சம்பிரதாயங்களாக மரத்தையும், ஆற்றையும் புனிதம் என்றுகூறி வழிபாடு மட்டுமே நடத்தி, ஆண்டவனின் இருப்பிடங்களான அவற்றின் புனிதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பாரம்பரியப் பண்பைத் துறந்துவிட்டோம்.

அதனாலன்றோ இன்று விருட்சங்கள் வீழ்ந்துபட்டு, கங்கை போன்ற நதிகளும் கழிவுநீரோடைகளாக மாறிவருகின்றன. கால்நடைகள் அன்போடு பேணப்படுவது கழிந்துபோய், வெறும் கசாப்புக்கடைப் பொருட்களாக மாறிவிட்டன. மானுடருக்குள்ளும் மேல், கீழ் என்ற பாகுபாடுகள் புகுந்து நாமும் மக்கிப்போனோம்.

“ஏகோ தேவ: சர்வபூதேஷு கூட: ஸர்வவ்யாபீ ஸர்வபூத அந்தராத்மா” என்கிறது ஸ்வேதாஸ்வதர உபநிஷதம் (6.11). ஏகோ தேவ என்றால் ஒற்றைக் கடவுள். இருப்பது ஒரு கடவுள்தான், அவரைப் பல விதங்களில், பல பெயர்களில், பல வடிவங்களில் நாம் வணங்குகிறோம் என்பதே நமது சனாதன தர்மம் உலகுக்கு அளித்துள்ள அறிவுரை.

வெளிநாட்டு மதங்களைப்போல, என் கடவுள்தான் வல்லவர் அவரை நீ வணங்காவிட்டால் அழிக்கப்படுவாய் என்ற அச்சுறுத்தலோ, இல்லையேல் என் கடவுளை ஏற்காவிட்டால் நீ நரகத்துக்குப்போவாய் என்ற மிரட்டலோ இதில் இல்லை. இருப்பது ஒரே கடவுள் என்பதே நமது சனாதனம். அதுவும் அவர் எப்படி இருக்கிறார்? எல்லா பொருள்களுக்குள்ளும் அவர் உறைகிறார் (ஸர்வபூதேஷுகூட), எங்கும் நிறைந்திருக்கிறார் (ஸர்வவியாபீ), எல்லா உயிரினங்களுக்குள்ளும் ஆத்மாவாக அவரே திகழ்கிறார் (ஸர்வபூத அந்தராத்மா). மனிதர்களுக்கு இடையே மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுடனும், அனைத்து வஸ்துகளுடனும் மனிதருக்குள்ள சமத்துவத் தன்மையை அன்றோ நமது சனாதனம் பகர்கின்றது!

ஸங்கச்சத்வம் ஸம்வதத்வம் 
ஸம்யோ மனாம்ஸி ஜானதாம்
தேவா பாகம் யதா பூர்வே
ஸஜ்ஞானானா உபாஸதே
ஸமானி வா ஆஹூதி:
ஸமானா ஹ்ருதயானி வ:
ஸமான மஸ்து வோ மனோ
யதா வ: ஸுஸஹாஸதி
(ஸம்மனன சூக்தம், ரிக் வேதம் 10.191. 2, 4)

இதன் பொருள்: “எல்லா மனிதர்களும் இணக்கமாக செயல்படட்டும். எல்லோரும் அன்பாக உரையாடட்டும். ஒருவரையொருவர் மனப்பூர்வமாக நன்கு புரிந்துகொள்வோம். நமது முன்னோர்கள் எவ்விதம் நல்லறிவோடு தங்களுக்குக் கிடைத்த செல்வங்கள் அனைத்தையும் பகிர்ந்துகொண்டு வாழ்வதைக் கடைப்பிடித்தார்களோ நாமும் அதனைப் பின்பற்றுவோம். நமது நோக்கங்கள் ஒத்தவையாக அமையட்டும். அனைவரின் உள்ளங்களிலும் ஒத்த உணர்வுகள் ஓங்கட்டும். மனத்தால் நாம் ஒன்றிணைவோமாகுக. அதேபோல் நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவிகரமாக வாழ்ந்து இறைவனைச் சேர்வோமாகுக!”

இதே கருத்தை அதர்வண வேதமும் (3.27) அழகுற இவ்வாறு சொல்கிறது.

யோ(அ)ஸ்மான் த்வேஷ்டி யம் வயம்
த்விஷ்மஸ்தம் யோ ஜம்பே தத்ம:

“ஏ பகவானே, என்னிடம் எவரேனும் விரோதம் கொண்டிருந்தாலும், நான் யாரிடத்திலாவது விரோதம் கொண்டிருந்தாலும் அந்த விரோதத்தை ஒழித்து, எவரும் என்னைப் பகைக்காமலும், நானும் எவரிடமும் பகை கொள்ளாமலும் இருக்கச் செய்வீராகுக!” என்பதே இந்தப் பிரார்த்தனை.

மனிதர்களிடம் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களிடமும் நாம் நண்பர்களாக வாழ வேண்டும் என்ற கருத்தை யஜுர் வேதம் (36.19) சிறப்புறச் சொல்கிறது.

மித்ரஸ்யமா சக்ஷுஷா ஸர்வாணி பூதானி ஸமீக்ஷந்தாம்
மித்ரஸ்யஅஹம் சக்ஷுஸா ஸர்வாணி பூதானி ஸமீக்ஷே

இதன் பொருள் – எல்லா உயிரினங்களும் என்னை நண்பராகக் கருதட்டும். அதேபோல் நானும் எல்லா உயிரினங்களையும் எனது நண்பர்களாகக் கருதுவேனாகுக.

“வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம்” என்றார் மகாகவி பாரதியார். பசிப்பிணியைப் போக்குதல், பிறருக்கு உதவுதல் ஆகியவற்றை நமது வேதங்கள் மிகவும் பாங்குடன் எடுத்துரைக்கின்றன. “ப்ருணீயாதின்னாதமானாய த்வ்யாந்த்ராதீயாம் ஸமனு பச்யேத பந்தாம்” என்கிறது ரிக் வேதம் (10.17.5). தானமளிப்பவனுக்கு மிகுதியாகப் புண்ணியம் கிடைப்பதால், உன்னிடம் வந்து உணவு கோருபவனுக்கு அதனை அளிக்கத் தவறாதே என்று உரைக்கிறது இந்த ஸ்லோகம்.

இதற்கு ஒரு படி மேலேபோய், நூறு கைகளால் பொருளைச் சேர்த்து, ஆயிரம் கைகளால் அதைப் பிறருக்கு அளி என்று போதிக்கிறது அதர்வண வேதம். “சதஹஸ்த சமாரஹர ஸஹஸ்ரஹஸ்த சங்கிர” என்பதே அந்த ஸ்லோகம் (3.24.5).

பொருளைச் சேர்ப்பதற்கான உழைப்பைவிட அவற்றைப் பிறருக்குத் தானமளிப்பதற்கான உணர்வு மிகவும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை இது அழகாக எடுத்துரைக்கிறது. இதற்கும் மேலே சென்று, பிறருக்கு அளித்தது போக எஞ்சியதை நீ உண்ணு என்று உபதேசிக்கிறது யஜுர் வேதம் (40.1). “த்யக்தேன புஞ்ஜீதா” என்பதே அந்த ஸ்லோகம்.

சுயநலத்தை அடக்கிக் கொண்டு, பிறர் நலத்தைப் பேணும் உன்னத தியாக மனப்பான்மையைக் கூறுகிறது இந்த ஸ்லோகம். இதைத்தான் தமிழிலே தனக்கு மிஞ்சினால் தானம் என்று உரைத்தனர் நம் முன்னோர். ஆனால், பிறருக்குக் கொடுத்தது போக மிஞ்சியதை தனக்கு வைத்துக்கொள்வதே உண்மையான தானம் என்ற உட்கருத்து மழுங்கி, தனக்கு வேண்டியதை வைத்துக்கொண்டு மிஞ்சியிருப்பதை தானம் செய்யலாம் என்பதாக தவறான அர்த்தம் பின்னர் புகுந்துகொண்டது.

இதைப்போல்தான் இடைக்காலத்தில் புகுந்த தவறான பொருள்கொள்ளல்கள் நமது சமுதாயத்தை வீழச் செய்துள்ளன. யாதுமாகி நிற்கும் பரம்பொருளை ஓர் ஒற்றை மனிதனாக உருவகித்து, புருஷன் என்று அழைத்தனர் நம் முன்னோர். புருஷன் எனப்படும் இந்த ஆதி ஆற்றல்தான், படைப்புகளாக தன்னை விரித்துக்கொண்டுள்ளது என்பதை ரிக் வேதத்தின் புருஷ சூக்தம் மிகுந்த கவித்துமாக எடுத்துரைக்கிறது. அதன் 12-ஆவது ஸ்லோகம், மனிதர்கள் யாவரும் சரிநிகர், எல்லோரும் ஓர் நிறை என்பதை அற்புதமாக விண்டுரைக்கிறது. ஆனால், இவ்விதம் ஒற்றுமையை உணர்த்துகின்ற இந்த ஸ்லோகத்தைத்தான், பாகுபாட்டுக்கான இலக்கணம் என்றுகூறி வசைபாடுகிறார்கள் பகல்வேஷ பகுத்தறிவுவாதிகள்.

பிராஹ்மணோ(அ)ஸ்ய முகமாஸீத் பாஹ ராஜன்யஹ க்ருதஹ
ஊரூதஸ்ய யத்வைஸ்யஹ பத்ப்யாம் சூத்ரோ ஆஜாயத-
என்பதே அந்த ஸ்லோகம்.

“பிரும்மமாகிய அந்தப் புருஷனின் வாயில் இருந்து (சம்ஸ்கிருதத்தில் முகம் என்பதற்கு வாய் என்று பொருள்) பிராமணர்களும், தோள்களில் இருந்து ராஜ்யங்களை நடத்துகின்ற க்ஷத்திரியர்களும், தொடைப் பகுதிகளில் இருந்து வியாபாரம், தொழில் செய்கின்ற வைசியர்களும், பாதங்களில் இருந்து சூத்திரர்களும் தோன்றினார்கள்” என்பது இதன் பொருள். இந்த நான்கு வர்ணத்தாருமே (வர்ணம் என்பது இங்கே வகைப்பாட்டைக் குறிக்கிறது) ஒரே பிரும்மத்தின், அதாவது ஒற்றை இறையின் உறுப்புகள்தான். இதில் மேல், கீழ் ஏதுமில்லை. பிறகு ஏன் இந்த வகைப்பாடு? இதன் உட்பொருள் என்ன?

வேதம் அல்லது அக்காலக் கல்வி, சொல்வதைக் கேட்டுத்தான் (ஸ்ருதி) வளர்க்கப்பட்டது. ஆகையால் வேதங்களை ஓதுகின்றவர்களுக்கு வாய் முக்கியம். வேதத்துக்குத் தமிழில் எழுதாக்கிளவி (எழுதப்படாத சொல்) என்றொரு பெயர் உண்டு. எனவே, சொல்லுக்கு (ஸ்ருதிக்கு) முக்கியத்துவம் கொடுக்கும் பிராமணர்கள், புருஷனின் வாயில் இருந்து தோன்றியதாக வர்ணிக்கப்படுகிறார்கள். அடுத்ததாக, அரசாங்கத்தை நடத்துபவர்களுக்கு தோள் வலிமை, பராக்கிரமம் அவசியம். வீரம் என்றதுமே நாம் தோள் தட்டுகிறோம் அல்லவா? ஆகையால் க்ஷத்திரியர்கள், புருஷனின் தோள்களில் இருந்து தோன்றியதாக உருவகப்படுத்தப்படுகிறார்கள்.

இதேபோல், எந்தவொரு சமூகத்துக்கும் அதன் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் உற்பத்தி அவசியம். உற்பத்தியே சமூகத்தைத் தாங்கிப் பிடிக்கும் பொருளாதாரத் தூணாக விளங்குகிறது. மனிதனுடைய தொடைப் பகுதி தூண்களைப்போல உள்ளது. மேலும் அந்தத் தொடையின் அருகில்தான் வயிறு மற்றும் உற்பத்தி உறுப்பு ஆகியன அமைந்துள்ளன. ஆகையால் உழவு மற்றும் தொழில் செய்தல், வியாபாரம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபடும் வைசியர்கள், புருஷனின் தொடைகளில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறார்கள். மீதி இருப்பவர்கள் சூத்திரர்கள். இதற்கான பொருளை நாம் சரியாக அறிந்துகொள்ள வேண்டும்.

சூத்திரம் என்றால் அடிப்படை, அஸ்திவாரம் என்று பொருள். கணக்குகளுக்கான அடிப்படை சூத்திரம் எனப்படுகிறது. பல்வேறு சாஸ்திரங்களுக்கான அடிப்படையும் சூத்திரங்கள் என்று போற்றப்படுகின்றன. அப்படியிருக்க, வருணத்தில் மட்டும் சூத்திர என்பது எப்படி மட்டமாகிவிட முடியும்? சூத்திர என்பது எந்தவொரு சமூகத்துக்கும் அடிப்படை அவசியம் என்ற பொருளைக் கொண்டது. எந்தவித சிறப்புத் திறமையும் இல்லாத பொதுவானவர்கள் சூத்திரர்கள் எனப்பட்டனர். உடலைத் தாங்கி நிற்பதோடு, அதன் இயக்கத்துக்கும் உதவுபவை இரண்டு பாதங்கள். அந்தப் பாதங்கள் இல்லாவிட்டால் எந்த மனிதனும் படுத்த படுக்கை ஆகிவிட வேண்டியதுதான். அதேபோல்தான் சமூகத்தைத் தாங்கிப் பிடிக்கின்ற, அதனுடைய இயக்கத்துக்குக் காரணமாக அமைகின்ற பிரிவினரே சூத்திரர்கள்.

இங்கே, மேலும் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். தற்காலத்தில் ஜாதியின் அடிப்படையில் பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்பதற்கு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. இது பொய்யானது. ஜாதி முறையும், அதன் பாற்பட்ட ஏற்றத்தாழ்வுகளும் நமது சமூகத்தைப் பீடித்த பிற்காலப் பீடைகள். ஆனால், வருணம் என்பது ஒரு மனிதனின் அடிப்படை குணம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றைப் பொருத்து அமைகின்ற வகைப்பாடு. இதைத்தான் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், “சாதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாஹசஹ” என்கிறார். குணம், செயல் ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு வர்ணம் என்ற வகைப்பாட்டை நானே படைத்தேன் அதாவது நால்வகை வர்ணமாக நானே வெளிப்பட்டேன் என்கிறார் கிருஷ்ணர்.

முற்காலத்தில் இவ்வாறாகத்தான் பாரதத்தில் மனிதர்கள், குறிப்பிட்ட வர்ணத்தவர்களாக வகைப்படுத்தப்பட்டார்கள். இதில் வாரிசுரிமை ஏதும் இருக்கவில்லை. ஆனால், காலம் போகப்போக, அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசியல்வாதிகளாகவும், மருத்துவர்களின் பிள்ளைகள் மருத்துவர்களாகவும், நடிகர்களின் பிள்ளைகள் நடிகர்களாகவும் தற்காலத்தில் எளிதில் ஆகிவிடுவதைப்போல ஒரு காலகட்டத்தில் ஆகத் தொடங்கினார்கள். பின்னர், ஜாதீய அடிப்படையில் இன்னாரின் மகன்தான் இன்னார் என்ற சாபக்கேடு நுழைந்தது. அதன் உச்சகட்டமாக பஞ்சமர் (நான்கு வர்ணத்தைத் தாண்டிய கலப்பு வர்ணத்தவர்) என்ற பிரிவினையும், தீண்டாமைக் கொடுமையும் புகுந்துகொண்டு விட்டன.

பிரும்மத்தின் அடிப்படையை உணர்ந்துகொண்டு எவ்வித ஏற்றதாழ்வும், மனக்கிலேசமும் அடையாமால், மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களையும் சமமாக பாவிப்பவன் எவனோ, இன்ப-துன்பம் எது வந்தபோதிலும் மனம் இளகிவிடாமல் நிலைமனதினனாக இருப்பவன் எவனோ அவனே பிராமணன். அந்த நிலையை மனிதர் அனைவரும் எய்துதல் வேண்டும் என்பதே மானுட லட்சியம் என நமது சனாதன தர்மம் காட்டுகிறது. இதனை தனது பல்வேறு கட்டுரைகளிலும், ஞானரதம் என்ற நெடுங்கதையிலும் விளக்கமாக எடுத்துரைக்கிறார் மகாகவி பாரதியார்.

அடுத்ததாக, பெண்ணடிமைத்தனத்தை சனாதன தர்மம் போதிப்பதாக ஒரு குற்றச்சாட்டு. ஆனால், நமது சனாதன தர்மம் பெண்களை ஆண்களின் போக வஸ்துகளாகப் பார்க்கவில்லை, போற்றுதலுக்கு உரியவர்களாகப் பார்க்கிறது. “யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா” (எங்கு பெண்கள் போற்றப்படுகிறார்களோ அங்குதான் தெய்வங்கள் மகிழ்வடைகின்றன) என்கிறது மனு ஸ்மிருதி (3.56). பெண்ணை ஆற்றலின் உறைவிடமாக, சக்தி என்னும் இறைவியாக வணங்கச் சொல்லிக் கொடுக்கிறது நம் சனாதன தர்மம். உங்கள் போற்றுதல் யாருக்கு வேண்டும், சாதாரண மனுஷியாக சமஉரிமை கொடுத்தீர்களா? என்று சீறுகிறார்கள் மாதர் சங்கப் புரட்சிப் பெண்கள்.

அவர்களுக்கான விளக்கம் இதோ: சகதர்மினியாக (இல்லறத் துணைவியாக), அர்த்தாங்கினியாக (ஆணின் சரிபாதியாக), கிருஹராணியாக (இல்லத்தரசியாக) பெண்களை வேதங்கள் வர்ணிக்கின்றன. இவற்றின் உட்பொருளை மாதர் சங்கப் பெண்ணரசிகள் ஒரு கணம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

வேத காலத்தில் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். ரிக் வேதத்தின் 126-ஆவது ஸ்லோகத்தை ரோமஷா என்ற பெண் ரிஷியும், 179-ஆவது ஸ்லோகத்தை லோபமுத்ரா என்ற ரிஷிபத்தினியும் (அகத்தியரின் மனைவி) எழுதியுள்ளனர். யாக்ஞவல்க்ய ரிஷி துறவறம் பூணுவதற்கு முடிவெடுத்தபோது அவரது மனைவி மைத்ரேயி ஆத்மஞானம் குறித்து அவருடன் விவாதித்து, தானும் துறவறம் பூண்டார்.

கார்க்கி, விஸ்வவரா, சாஷ்வதி, கோஷா, அபலா, அதிதி உள்ளிட்ட பெண் தத்துவ அறிஞர்கள் வேத காலத்தில் இருந்துள்ளனர். அனைத்தும் பிரும்மமே என்ற தத்துவத்தில் ஆழ்ந்து அகன்ற அறிவு கொண்டு வாதிடும் இவர்களை பிரும்மவாதினிகள் என்று வேதம் விளிக்கிறது.

ஸ்ரீராமரின் தந்தை தசரதனுக்கு அவரது மனைவி கைகேயியும், ஸ்ரீகிருஷ்ணருக்கு அவரது மனைவி சத்யபாமாவும் போரில் உறுதுணையாக, சாரதிகளாக இருந்துள்ளனர். துர்காவும் காளியும் போர்த் தெய்வங்கள். திருமணமாகி புகுந்த வீடு வரும் பெண், அந்த இல்லத்தின் அரசியாக உள்ளே நுழைகிறார் என்கிறது அதர்வண வேதம் (14.1.43-44).

பெண்கள் தனக்குப் பிடித்தவனை கணவனாகக் கரம்பிடிக்கும் வழக்கம் இருந்ததை இதிகாச, புராணங்களில் கூறப்படும் சுயம்வரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இடைக்காலத்துப் பாவமான பால்ய விவாகம் அக்காலத்தில் இருந்ததில்லை. கணவனை இழந்த கைம்பெண்கள், மொட்டையடித்துக்கொண்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று வேதம் சொல்லவில்லை.

மாறாக, “எழுந்திரு பெண்ணே, உன் கரம் பிடித்த கணவனின் மனைவி என்ற ஸ்தானத்தை இதுவரை அனுபவித்தாய், இனிமேலும் இந்த வாழ்வுலகில் உனது வாழ்க்கையை வாழ்” என்பதை “உதீர்ஷ்வ நார்யபி ஜீவலோகம் கதாஸுமேதமுப சேஷ ஏஹி” என்று தைரியமூட்டுகிறது ரிக் வேதம் (10.18.8). கணவனை இழந்த பெண்கள் மட்டுமல்ல, கணவனைப் பல ஆண்டுகள் பிரிந்திருக்கும் பெண்கள்கூட மறுமணம் செய்துகொள்ளலாம் என்பதை நள மகராஜன் காணாமல் போன பின்னர், தமயந்திக்கு அவரது தகப்பனார் மறுமண ஏற்பாடுகள் செய்ததைக் கூறும் மகாபாரதத்தின் நள-தமயந்தி உபகதை (கிளைக்கதை) மூலம் அறியலாம். வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போம் என்ற விந்தை வழக்கம் பிற்காலத்தில் வந்தது. அதிலும், பெண்களைக் குறிவைத்து வேட்டையாடும் அன்னியப் படையெடுப்புகள் என்ற ஆறாத் துயரங்களுக்குப் பின்னர் ஏற்பட்டது.

ஆக, ஆணும் பெண்ணும் சமம், மனிதர்கள் அனைவரும் சமம், மனிதர்களோடு அனைத்து உயிரினங்களும் சமம் என்ற உன்னத சமத்துவத்தைத்தான் நமது சனாதன தர்மம் போதிக்கிறது. இந்த உயர் நிலையில் இருந்து இடைக்காலத்தில் பிறழ்ந்ததால்தான் சாதி ஏற்றத்தாழ்வுகள், பெண்ணடிமைத்தனம் ஆகிய மூடப்பழக்கங்கள் புகுந்தன. சனாதனம் குறித்த தவறான புரிந்துகொள்ளல்கள் அதனை எதிர்ப்பவர்களிடம் மட்டுமே இல்லை, அதனை ஏற்பவர்களிடமும் உள்ளது.

சனாதன தர்மத்தைப் பின்பற்றுவது என்றால் அதன் உட்பொருளை, உள்ளார்ந்த வீரியத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அந்த சத்திய, சமத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்துவது என்றே பொருள். முதலில் நமக்குள்ளேயும், பின்னர் நம்மை எதிர்ப்பவர்கள் மத்தியிலும் சனாதனத்தின் மேன்மையை நாம் நிலைநாட்டுவோமாகுக!

அனைவரும் ஒத்த கருத்துடன், உணர்வுடன் அதனை எப்போதும் பின்பற்றுவோமாகுக!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe