
ஆந்திர மாநிலம் நந்தியாளாவில் உள்ள ஞானபுரம், ஆர்.கே. பங்ஷன் ஹாலில் சிஐடி போலீசார் சந்திரபாபு நாயுடுவை கைது செய்தனர். இதனால் திருப்பதியில் பஸ்கள் ஓடவில்லை. திருப்பதி சென்று பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநில சிஐடி பொருளாதார பிரிவு டிஎஸ்பி கைது செய்வதற்கான வார்ண்ட்-ஐ சந்திரபாபுவிடம் வழங்கினார். அதில் ”நீங்கள் கைது செய்யப்படுகிறீர்கள். இதற்கான தகவல் உங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது ஜாமீனில் வரமுடியாத குற்றமாகும்” என்று தெரிவிக்கப்பட்டது.
சந்திரபாபு நாயுடுவுக்கு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டதால் மருத்துவ பரிசோதனைக்காக சிஐடி போலீசாரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்வோம் என அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்திவிழா கடந்த 2 நாட்களாக கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இன்று திடீரென கைது செய்யப்பட்டதால் ஆந்திரா முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் லாரி கார் ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. எனினும் கீழ் திருப்பதியில் ஓட்டல்கள், கடைகள், டீக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது.
இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு வந்த முதியவர்கள் குழந்தைகள் உள்படபக்தர்கள் உணவு, டீ, காபி, குடிநீர் இன்றி அவதி அடைந்து வருகின்றனர். பஸ் போக்குவரத்து இல்லாததால் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல பக்தர்கள் தவித்தனர். ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படுகிறது. இதனால் திருப்பதி ரயில் நிலையத்தில் பக்தர்கள் குவிந்து உள்ளனர். திருப்பதி ரயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதை அடுத்து, தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர்.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியானது. தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகளும், தமிழ்நாடு எல்லையிலே நிறுத்தப்பட்டுள்ளது.
திருப்பதியில் சந்திரபாபு கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலையில் டயருக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தெலுங்கு தேச கட்சியினர். ஆர்ப்பாட்டக் காரர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பாதுகாப்பு காரணமாக ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகள் தமிழ்நாடு எல்லையில் நிறுத்தப்பட்டன. திருப்பதி கோவிலுக்கு சென்ற தமிழக பக்தர்கள், திரும்பி வருவதற்கு பேருந்து இல்லாததால் அவதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், என்னைக் கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சந்திரபாபு நாயுடு கூறினார். வழக்கை திசை திருப்புகிறார்கள்; நான் எந்த ஊழலையும் செய்யவில்லை, சட்டபடி வழக்கு விசாரணையை சந்திப்பேன். புகாரில் உண்மையில்லை என்பதால் கட்சியினர் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.