spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (35)- பிபீலிகா கதி ந்யாய:

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (35)- பிபீலிகா கதி ந்யாய:

- Advertisement -

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் -35

தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன் 

பிபீலிகா ந்யாய: (பிபீலிகா கதி ந்யாய:)
பிபீலிகா – எறும்பு, கதி – நடை

இந்த நியாயத்திற்கு ‘எறும்பின் நடை போல’ என்று பொருள். அதோடு, ஏறும்பை அற்ப பிராணி என்று ஏளனம் செய்யக் கூடாது என்ற பொருளும் உள்ளது. 

சிறியவர்களிடமிருந்து கூட ஏதாவது கற்றுக் கொள்வதற்கு இருக்கும். எறும்பு ஒரு எளிய உயிரினம். ஆனாலும் பல விஷயங்களில் எறும்பு நமக்கு குருவாக உள்ளது. சிறு வயதிலிருந்தே எறும்பு பற்றிய கதைகளைக் கேட்டு வருகிறோம். அதன் மூலம் பல நீதிகளைக் கற்றும் வருகிறோம்.

உதவி செய்தவருக்கு உதவி –

ஒரு எறும்பு எதிர்பாராமல் குளத்து நீரில் விழுந்து அடித்துச் செல்லப்படுவதைப் பார்த்து குளக்கரையில் மரக்கிளையின் மேலிருந்த பறவை ஒன்று ஒரு இலையைப் பறித்து எறும்பின் அருகில் போட்டது. எறும்பு அந்த இலையைப் பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்து கரையை அடைந்தது. பின்னர் ஒரு நாள் அந்த பறவையைக் குறிபார்த்து அம்பு  செலுத்தவிருந்த வேடனின் காலை இந்த எறும்பு கடித்து பறவையைக் காப்பாற்றி தன்   நன்றிக் கடனைத் தீர்த்துக் கொண்டது. 

முன்னோக்குப் பார்வை –

வேனிற்காலத்தில் எறும்புகள் கடினமாக உழைத்து உணவுப் பொருளை சேகரித்து சேமித்து வைத்து மழை மற்றும் குளிர் காலத்தில் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவை. தன் உடல் எடையைவிடப் பத்து மடங்கு அதிக எடையுள்ள பொருளைச் சுமந்து, வழியில் எதிர்ப்படும் தடைகளைக் கடந்து கூட்டில் கொண்டு சேர்க்கும். இவையெல்லாம் இயற்கை நமக்குக் கற்றுக் கொடுக்கும் படங்கள். அதுபோலின்றி வெயில் காலத்தில் உணவை சேகரிக்காத சோம்பேறி வெட்டுக்கிளி, குளிர்காலத்தில் வருத்தப்பட்ட கதையையும் நாம் படித்துள்ளோம். 

நுகரும் சக்தி –

எறும்புக்கு சிறப்பான நுகரும் சக்தி உண்டு. நம் வீடுகளில் பூஜை செய்யும்போது விநாயகருக்கு ‘கூடோபஹார நைவேத்யம்’ செய்வது இந்த சிறு உயிரினத்திற்கு எப்படித் தெரியுமோ தெரியாது. பூஜை முடிவதற்குள் அங்கு வைக்கும் வெல்லத்தைச் சுற்றிலும் எறும்பு வரிசை கட்டியிருக்கும். தடயத்தைக் கண்டறிவது, இலக்கை அடைவது என்ற குணம் வெற்றிவாகை சூட நினைப்பவருக்கு கட்டாயம் தேவை. தேசத்தின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் கண்டறிவது அரசாளுபவருக்கு இருக்க வேண்டிய குணம், கடமையும் கூட.

எதிரிகளை அழிப்பது –

எறும்புப் புற்றுகளை பாம்பு பயன்படுத்தும் என்று கேட்டுள்ளோம். தம் கூட்டை வசப்படுத்திக் கொண்ட பாம்புபை எறும்புகள் ஒன்று கூடி படையெடுத்துச் சென்று அழித்த கதையைக் கேட்டுள்ளோமல்லவா.

அபகாரம் செய்தவருக்குத் தகுந்த பாடம் –

ஒரு கதையில் ஒரு சிறுவனை எறும்பு கடித்து விடும். எறும்பே ஏன் கடித்தாய் என்று கேட்டபோது என் புற்றில் விரல் வைத்தால் கடிக்க மாட்டேனா என்று கேட்டது எறும்பு. எப்படிப்பட்ட சிறந்த பாடம் இது. நம் தேசத்தின் எல்லைக்குள் நுழைந்து தீமை செய்ய நினைக்கும் எதிரிகளை மன்னிக்காமல் தண்டிக்க வேண்டும். ஊர்வலத்தின் மீதும் ராணுவத்தின் மீதும் கல்லெறியும் தேசத் துரோகிகளான வீணர்கள் தண்டனைக்குரியவர்கள். மன்னிப்புகுரியவர்கள் அல்ல என்னும் பாடத்தை இந்த எறும்பின் கதை உணர்த்துகிறது.

ஒழுங்குமுறை –

எறும்புகள் ஒழுங்கு முறைக்கும் ஒற்றுமைக்கும் சின்னம் என்று குறிப்பிடுகிறோம். ராணுவ வீரர்களைப் போல ஒரே வரிசையில் ஊர்ந்து செல்லும். அவை தம் புற்றை அமைக்கும் அழகைப் பார்த்தால்தான் தெரியும். விவரிப்பது கடினம். அலுப்பு இல்லாமல் வேலை செய்யும் எறும்புகள் மண்ணைத் தோண்டி எடுத்து வந்து ஓயாமல் பணி  செய்யும். அவற்றின் ஓய்வில்லாத முயற்சி பார்ப்பவருக்கு ஊக்கமூட்டக் கூடியது. யாராவது பார்க்க வேண்டும், புகழ வேண்டும் என்பதற்காக அவை உழைப்பதில்லை.  அவற்றின் கட்டுப்பாடும் ஒழுங்குமுறையும் பாடமாக ஏற்கத்தக்கவை.

செயல்திறன்  –

எறும்பு ஊர்வதை ஏளனமாகப் பார்ப்போம். ஆனால் செயல்திறனில் ஏறும்பைப் புகழ்ந்து கூறும் இந்த சுபாஷிதம் மிகமும் புகழ்பெற்றது. 

கச்சன் பிபீலிகோ யாதி யோஜனானாம் சதான்யபி
அகச்சன் வைனதேயோபி பதமேகம் ந கச்சதி !!

பொருள் – பயணம் செய்வதற்குத் தொடங்கினால் மெதுவாக ஊரும் எறும்பு கூட நூறு யோசனை தூரம் பிரயாணம் செய்து விடும். ஆனால், இருக்கும் இடத்திலிருந்து அசையாவிட்டால் வேகமாகப் பயணிக்கும் கருடனானாலும் ஒரு அடி தூரம் கூட பயணம் செய்ய இயலாது.

ஒவ்வொரு மனிதனும் சுறுசுறுப்பாக இயக்க வேண்டும். உறங்காமல் மெதுவாக நடந்து சென்ற ஆமை வெற்றியை சாதித்தது. கர்வத்தோடு உறங்கிய முயல் தோல்வியடைந்தது. இந்த கதையை அறியாதவர் யார்?

வெறும் எறும்புக் கதைகளைக் கூறுவதிலா இந்த நியாயத்தின் சிறப்பு உள்ளது? எறும்பின் உடலைப் பார்த்து அது சிறிய உயிரினம் என்று ஏளனம் செய்யக் கூடாது என்பதே இந்த நியாயத்தின் உட்பொருள்.

அஷ்டாவக்ரர் –

தந்தையின் சாபத்தால் எட்டு கோணல்களோடு பிறந்த அஷ்டாவக்கிரர் பால மேதாவி. மகா பண்டிதர். அவர் ஒரு முறை ஜனகரின் அரச சபையில் நுழைய முனைந்த போது அவருடைய உடலைப் பார்த்து துவாரபாலகர்கள் அனுமதி மறுத்தனர். “கஸ்மாத் பால: ஸ்தவிர இவ ப்ராபாஷஸே..” – நீ சிறுவனைப் போல் இருக்கிறாய். முதியவரைப் போல் பேசுகிறாயே என்று கேட்ட போது அஷ்டாவக்கிரர் இவ்வாறு பதில் கூறினார் –

ந ஞாயதே காயவ்ருத்தாய விவ்ருத்தி:
யதா ஷ்டீலா சால்மலே: சம்ப்ரவ்ருத்தா
ஹ்ரஸ்வோஅ ல்ப காய: பலிதோ விவ்ருத்த:
யஸ்சா பலஸ்தஸ்ய ந வருத்த பாவ: !!

(மகாபாரதம் – வன பர்வம் (133/9)

பொருள் – உடல் வளர்ச்சியைப் பொறுத்து ஞானம் வளராது. பருத்தி விதை முற்றினால் சாரமற்றுப் போய்விடும். சிறிய மரமானாலும் காயும் பழமும் அதிகமாக இருந்தால் அதுவும் பெரிய மரமே. அவ்வாறின்றி பழங்கள் அளிக்காத பெரிய மரம் வீண். உடலின் அளவைப் பொறுத்து அறிவை கணக்கிடுவது கூடாது.

ஜனகரின் சபைக்குள் பிரவேசித்த அஷ்டாவக்ரனின் கோணல்களைப் பார்த்து கேலி செய்து சிரித்தவர்களை கவனித்தார் அஷ்டாவக்கிர முனிவர். “ஜனக மகாராஜா, உன் அரசவையில் பண்டிதர்கள் இருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் இங்கு உடலில் இருக்கும் சுழிகளை கவனிக்கும் மாட்டு வியாபாரிகளே இருக்கிறார்கள்” என்று கடிந்தார். 

“பாலோஉ வ்யக்னிர்தஹித ஸ்ப்ருஸ்யமான: “ – சிறிய நெருப்பானாலும் தொட்டால் சுடும் என்று தன்னம்பிக்கையோடு எடுத்துரைத்தார் அஷ்டாவக்கிரர்.

எண்ணிக்கையைக் கொண்டும் உடல் அமைப்பைக் கொண்டும் திறமையை மதிப்பிடக் கூடாது என்பது இந்த பிபீலிகா நியாயம் கூறும் செய்தி. தாம் எண்ணிக்கையில் அதிகம் இருக்கிறோம் என்று கூறி பாண்டவர்களை கேலி செய்த கௌரவர்கள் தோல்வி அடைந்தனர் அல்லவா.

உலகப் படத்தில் சிறு தேசங்கள் என்று கருதப்பட்டவை இன்று பெரிய தேசங்களுக்கு புத்தி புகட்டும் நிகழ்கால உதாரணங்கள் இந்த பிபீலிகா நியத்திற்குப் பொருந்துபவையாக உள்ளன.

எறும்புகளைப் பற்றி எத்தனையோ கதைகள் இருந்த போதிலும் இந்த பிபீலிகா நியாயம் கூறும் கருத்தில் உயர்ந்த வேதாந்தம் உள்ளது. ஒரு மரத்தின் உயர்ந்த கிளையில் இருந்த பழத்தைச் சுவைக்க வேண்டும் என்று விரும்பிய எறும்பு, தரையிலிருந்து மெதுவாக ஊர்ந்து, விழுந்தும் எழுந்தும் பொறுமையோடும் சாமர்த்தியமாகவும் அந்த மரத்தின் மீது ஏறி இறுதியில் அந்தப் பழத்தை அடைந்து அதன் சாரை அருந்தி மகிழ்ந்தது. இதுவே பிபீலிகா கதி நியாயம்.

அதே போல் அஞ்ஞானியான மனிதன் சுருதி, ஸ்ம்ருதி, புராணங்களில் கூறியபடி கடுமையான உபாசனை மார்க்கத்தை சாதனை செய்து அந்தக்கரணம் தூய்மையாகி சம்பூரணமான ஞானத்தை அடைந்து பிரம்மானந்தத்தை அனுபவிப்பான்.

மெதுவாக ஊர்ந்தாலும் தன் இலட்சியத்தை அடையக் கூடியது எறும்பு என்று உரைக்கிறது இந்த பிபீலிகா கதி (எறும்பு நடை) நியாயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe