கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
ஆசிரியர் – கலைமகள்
ஆடி மாதம் என்பது தட்சிணாயன தொடக்க காலம்.சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலமாகும். இதுவரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன், தற்போது தெற்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கும் மாதம் இது என்பதால், சிவபெருமானின் இடப் பக்கமாக வீற்றிருக்கும் அம்பிகையை வழிபட உகந்த மாதம் ஆடி மாதம் என்கிறார்கள்.உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப் பூரம் என்று கூறப்படுகிறது!
திருமணம் ஆகி தாய்மை நிலையை அடைந்திருக்கும் பெண்ணை அவர்களுடைய வீட்டார் அழைத்து மகிழ்விக்கும் வகையில், அப் பெண்மணிக்கு வளைகாப்பு நடத்துவது போல் உலகத்தைக் காக்கும் அம்மனுக்கு வளையல்கள் அணிவித்து ஆடிப்பூரத்தை கொண்டாடுகிறார்கள். இந்நாளில் கோவில்களுக்குச் சென்று அம்மனை வழிபடுவதுடன் கோவிலில் தரும் வளையல் பிரசாதங்களை வாங்கி மகிழ்வார்கள்!
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் என்பதால், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் விழா 10 நாட்கள் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆண்டாளைத் தரிசித்தால் அனைத்து நன்மைகளும் வந்து சேரும் என்பது ஐதீகம்!
வளையல் அணியும் பழக்கம் ஆதிகாலம் தொட்டே பெண்களுக்கு இருந்து வந்திருக்கிறது என்பது தொல்லியல் மூலம் தெரிய வருகிறது!சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் 2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றுவருகின்றன. அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள், தங்க அணிகலன்கள் வளையல்கள் தங்க பட்டை, சுடுமண் வணிக முத்திரை, சுடுமண் புகைப்பிடிப்பான், கல்லால் ஆன எடைக்கல், செப்பு நாணயம், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி, யானை தந்தத்தால் ஆன பகடைக்காய், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கலைநியமிக்க சங்கு வளையல், சுடுமண்ணாலான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய காதணி ஆகியவற்றை கண்டெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்!
திருவிளையாடல் புராணத்தில் வளையல் வியாபாரியாக வலம் வந்தார் சிவபெருமான். சோமசுந்தரக் கடவுள் வளையல் வியாபாரியாக வேடம் தாங்கி வணிகத் தெருவிற்கு வந்தார். அத்தெருவில் இருந்த வணிக மகளிர் தத்தம் மாளிகைகளில் இருந்து வெளிப்பட்டனர். வளையல்களின் அழகை விட வளையல் வியாபாரியின் அழகு அவர்களைக் கவர்ந்தது. வளையல் போட்டுக்கொள்ள போட்டி இட்டு கைநீட்டினர்.
வளையல்போடும் சாக்கில் வியாபாரியாய் வந்த இறைவன் அவர்களைத் தொட்டு வளையல் அணிவித்தார். பின் வியாபாரி மறைய வானத்தில் சிவலிங்கம் தோன்றியது. ரிஷிபத்தினிகளின் முன்பொரு காலத்தில் சிவபெருமான் மீது மையல் கொண்டதால் சாபம் பெற்று மதுரையம்பதி வணிகர் தெருவில் பிறந்தனரென திருவிளையாடல் புராணக் கதையில் உள்ளது!