பாரீஸ் ஒலிம்பிக் 2024 – பதினொன்றாம் நாள் – 06.08.2024
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஈட்டி எறிதல் – நீரஜ் சோப்ரா
இன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர், நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் 89.34 மீட்டர் தூரம் எறிந்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 86.59 மீட்டர் எறிந்துள்ளார். இதற்கிடையில், மற்றொரு இந்திய வீரர் கிஷோர் ஜெனா தனது தகுதிச் சுற்றில் 80.73 மீட்டர் எறிந்துள்ளார். அவருக்கு இறுதிப் போட்டியில் விளையாட அவர் தகுதி பெறவில்லை. ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச் சுற்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறும், ஆனால் இறுதிப் போட்டிக்கான இடத்தைப் பதிவு செய்ய விளையாட்டு வீரர்கள் சிறந்த 12 வீரர்களில் இருக்க வேண்டும் அல்லது தகுதித் தரமான 84-மீட்டரை மீற வேண்டும்.
மகளிர் மல்யுத்தம் – வினேஷ் போகட்
இதற்கிடையில், இந்தியாவின் மூத்த மல்யுத்த வீரர் வினேஷ் போகட், காலிறுதிக்கு முந்தைய மற்றும் காலிறுதிச் சுற்றுகளில் முறையே ஒலிம்பிக் சாம்பியனான யுய் சுசாகி மற்றும் உக்ரைனின் ஒக்ஸானா லிவாச்சை தோற்கடித்து அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்..
நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.
பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனை வினேஷ் போகட் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அடுத்தடுத்து ஸ்கோர் செய்து வந்த வினேஷ் போகட் இறுதியில் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியானது. இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.
இறுதிப் போட்டியில் அவர் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருக்கிறார். இந்தப் போட்டி, இந்திய நேரப்படி இன்றிரவு 11.23 மணிக்கு தொடங்கும்.
டேபிள் டென்னிஸ்
இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி (ஹர்மீத் தேசாய், ஷரத் கமல், மானவ் தாக்கர்) காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.
தடகளம்
மகளில்ர் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் ரீப்பேஜ் ஓட்டத்தில் இந்தியாவில் கிரன் பஹல் 6ஆவதாக வந்ததால் போட்டியிலிருந்து வெளியேறினார்.
ஹாக்கியில் அதிர்ச்சி தோல்வி
ஹாக்கி ரசிகர்களுக்கான மிகப்பெரிய போட்டியான இந்தியா மற்றும் ஜெர்மனி அரையிறுதி இந்திய நேரப்படி இரவு 10:30க்கு தொடங்கியது. இதில், இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.
தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 7 ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தில் 18 ஆவது மற்றும் 27 ஆவது நிமிடங்களில் ஜெர்மனி வீரர்கள் கோல் அடித்தனர். இதனால் போட்டி விறுவிறுப்பானது. இந்திய வீரர்கள் பதில் கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தினர்.
இதற்கு பலன் அளிக்கும் வகையில், போட்டியின் 36 ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் சுக்ஜீத் சிங் கோல் அடித்தார். இதனால், இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் இருந்தன. இதையடுத்து இரு அணி வீரர்களும் மற்றொரு கோல் அடித்து வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் விளையாடினர்.
இறுதியில் போட்டியன் 54 ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கோல் அடித்தார். இதனால், ஜெர்மனி 3 கோல்கள் என முன்னிலை பெற்றது. இந்திய வீரர்கள் பதில் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். எனினும், அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.
இறுதியில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் ஜெர்மனி அணி ஒலிம்பிக் ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
வெங்கல பதக்கத்துக்கான போட்டியில்…
அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்தியா அணி இன்று நடைபெற உள்ள வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது.