பாரீஸ் ஒலிம்பிக் 2024 – பதினொன்றாம் நாள் – 06.08.2024
அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று இந்தியா ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி அணியைச் சந்திக்கிறது. கடந்த ஐந்து போட்டிகளில், ஜெர்மனிக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இன்றைய ஹாக்கி அரையிறுதி ஆட்டம் இன்று இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது.
கடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பெற்ற வெண்கலப் பதக்கத்தை விட அதிக நிலை பதக்கத்தினை வெல்லும் நம்பிக்கையுடன் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி இன்று களமிறங்குகிறது. 1980 மாஸ்கோ விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது எட்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களில் கடைசிப் பதக்கத்தை வென்றது. பாரிஸ் அவர்களுக்கு வரலாறு படைக்க ஒரு சிறந்த வாய்ப்பை கிடைத்துள்ளது.
அரையிறுதியில் வெற்றி பெற்றால், 1960 ரோம் ஒலிம்பிக்சில் கடைசியாக வெள்ளிப்பதக்கம் வென்றது போல இம்முறையும் இந்தியாவுக்கு வெள்ளி கிடைக்கலாம். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த காலிறுதியில் பிரிட்டனுக்கு எதிராக இந்திய வீரர்கள் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய அணியும் ஜெர்மனி அணியும் இதுவரை விளையாடிய போட்டிகள் 103 ஆகும். அதில் இந்திய அணி 23இல் வெற்றி பெற்றுள்ளது. ஜெர்மனி 53இல் வெற்றி பெற்றுள்ளது. 27 போட்டிகள் டிரா ஆனது. 1976 ஆம் ஆண்டு மாண்ட்ரீல் ஒலிம்பிக்கில் 7-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 1936இல் பெர்லின் ஒலிம்பிக்கில் இந்தியா 8-1 என்ற கணக்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதுவரை ஜெர்மனிக்கு எதிராக இந்திய அணி அடித்துள்ள கோல்கள் 165. இந்தியாவிற்கு எதிராக ஜெர்மனி அடித்த கோல்கள் 222.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணியும் ஜெர்மனி அணியும் நேருக்கு நேர் இதுவரை விளையாடிய மொத்த போட்டிகள் 12 ஆகும். அதில் இந்திய அணி 5 ஆட்டங்களில் வென்றுள்ளது. ஜெர்மனி 4 ஆட்டங்களில் வென்றுள்ளது. ட்ரா ஆன ஆட்டங்கள் 3.
இந்தியா மற்றும் ஜெர்மனி நேருக்கு நேர் மோதிய கடந்த ஐந்து போட்டிகளில்
இந்தியா 2-3 கணக்கில் வெற்றி ஜூன் 8, 2024
இந்தியா 3-0 கணக்கில் வெற்றி ஜூன் 1, 2024
இந்தியா 6-3 கணக்கில் வெற்றி மார்ச் 13, 2023
இந்தியா 3-2 கணக்கில் வெற்றி மார்ச் 10, 2023
இந்தியா 3-1 கணக்கில் வெற்றி ஏப்ரல் 15, 2022
2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இந்திய அணி – கோல்கீப்பர்: பிஆர் ஸ்ரீஜேஷ், டிஃபெண்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், சுமித், சஞ்சய்; மிட்பீல்டர்கள்: ராஜ்குமார் பால், ஷம்ஷேர் சிங், மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத்; முன்கள வீரர்கள்: அபிஷேக், சுக்ஜீத் சிங், லலித் குமார் உபாத்யாய், மந்தீப் சிங், குர்ஜந்த் சிங்; மாற்று வீரர்கள்: நீலகண்ட சர்மா, ஜுக்ராஜ் சிங், கிரிஷன் பகதூர் பதக்