தில்லைச் சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சன விழா, அறநிலையத்துறையின் தலையீட்டில், நெருக்கடியான முறையில், கோயிலை நிர்வகித்து வரும் பொது தீட்சிதர்களை அச்சுறுத்தி, மிரட்டலுக்கு உள்ளாக்கி, அவர்களின் நடைமுறைகளை நசுக்கி, ஒரு வழியாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதே போன்ற அளவுகோல், பக்தர்களின் தரிசனத்தை தடுத்து நிறுத்தி, தட்டிகள் வைத்து, அர்த்த மண்டபத்தை அர்த்தமே இல்லாமல் அனர்த்தமாக அப்பிரதட்சிணமாக சுற்ற வைத்து ஆகம விரோதமாக நடக்கும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களில் இருக்குமா, அவற்றை நீதிமன்றங்களும் கணக்கில் எடுக்குமா என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி!
சிதம்பரம் கோயிலை குறி வைத்து, காவல்துறை அடக்குமுறையுடன், எத்தனை எத்தனை தாக்குதல்களை அறநிலையத்துறை இதுவரை தொடுத்திருக்கிறது என்பதை நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்! அதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த வருடம், ஆனி திருமஞ்சன விழாக் காலத்தை ஒட்டி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகையை அகற்ற வேண்டும் என்று மிரட்டிய அறநிலையத் துறை அதிகாரிகளிடம், தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தங்கள் உரிமைக்காகவும், கனகசபையின் பாதுகாப்பைக் கருதியும் குரல் கொடுத்தார்கள்.
அப்போது, சிதம்பரம், தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர், தாசில்தார், எஸ்.ஐ.,க்கள், போலீசார் என நாத்திக திமுக., அரசின் அலுவலர் படையே கோவிலுக்குள் திரண்டு வந்து, தீட்சிதர்கள் வைத்த அறிவிப்புப் பலகையை அகற்றிவிட்டு, கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என்று வலுக்கட்டாயமாக சிலரை ஏற்றி, அடாவடியில் ஈடுபட்டனர்.
தீட்சிதர்கள் தரப்பில் இது பற்றி விளக்கம் அளித்த போது, அதிகாரிகள் மற்றும் சிலர் வேண்டுமென்றே பிரச்னை செய்கின்றனர். தேர் மற்றும் தரிசனத்தின் போது, கருவறையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜரை கனகசபையில் எழுந்தருளச் செய்து பூஜை செய்து வெளியே கொண்டு வருவோம். அதற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் பக்தர்களை கனகசபையில் அந்த நான்கு நாட்களுக்கு மட்டுமே அனுமதிப்பதில்லை. திருவிழாவிற்காக நடராஜருக்கு அணிவிக்க விலை உயர்ந்த நகைகள் வைக்கப்பட்டுள்ளன. கருவறையில் இருந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜர் தேரில் எழுந்தருள வெளியே கொண்டு வரும் பணிகள் நடைபெறும்போது பாதுகாப்பு கருதி கனகசபை மீது பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை. இது வெகுகாலமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. ஆனால் புதிதாக பிரச்னை ஏற்படுத்தியது போல் கிளப்பி, எங்களது பணியை செய்யவிடாமல் அறநிலையத்துறை செயல் அலுவலரும் அறநிலையத்துறை அதிகாரிகளும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றனர் என்று கூறினார்கள்.
இப்படி எல்லாம் கடந்த காலங்களில் நடந்து கொண்டு, இந்த வருடம் கனகசபையில் வீம்புக்கு மக்களை ஏற்றி, அறநிலையத்துறை தன் சட்டாம் பிள்ளைத்தனத்தை நிலைநாட்டி இருக்கிறது! கடந்த வருடம் பழனி கோயில் அறிவிப்பு பலகை அகற்றம், அதைத் தொடர்ந்து நடந்த குளறுபடிகள் எல்லாம், அறநிலையத்துறை அதிகாரிகளின் உள்நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
தெற்கே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அறநிலையத்துறை அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு அளவே இல்லை. பக்தர்களின் போராட்டங்களுக்கும் பஞ்சமில்லை!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், சரியாக ஆய்வும் செய்யாமல், திருப்பணிகளையும் முழுமையாக செய்து முடிக்காமல், கும்பாபிஷேக தேதி அறிவித்ததை பக்தர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். இது குறித்து இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர், திருப்பணிகளை முழுமையாக முடித்து திருவிழா சிறப்பாக நடக்கவும், ஆடித்தபசுக்கு வரும் பக்தர்களுக்கு குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகளை கோவிலுக்கு உட்பகுதியில் செய்து கொடுக்கவும் வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.
இதே அமைப்பின் கீழ் நெல்லை மாவட்டத்தின் பல இடங்களில் உழவாரப்பணிகள் நடப்பதுண்டு. இதற்காக ஆலயங்களில் சிறிய இடம் ஒதுக்கி, உழவாரப்பணிக்குத் தேவையான கருவிகளை சேமித்து வைப்பதுண்டு. பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் தொடங்கி பல ஆலயங்களில் இந்த இடங்களை காலி செய்யுமாறு இப்போது கெடு விதித்து வருகின்றனர். அதற்கு, செங்கல் வைத்து கட்டப்பட்ட நவீன கட்டட அமைப்புகளை புராதன ஆலயத்துக்குள் அனுமதிக்க முடியாது என்கின்றனர் அதிகாரிகள். ஆனால் அவர்கள் கோயில்களுக்குள் தங்கும் குளுகுளு ஏசி அறைகள் நவீன கட்டடங்கள் தானே என்பதை சுட்டிக் காட்டினால், அதைக் கேட்பதற்கு அவர்களுக்கு காதுகள் இல்லை!
ஒருபுறம், ஆலயங்களின் பணத்தில் அதிகாரிகள் சொகுசு கார்கள் வாங்குவதற்கு செலவிடுவதை நீதிமன்றம் கண்டிக்கிறது! ஆனால் அவற்றின் பார்வைக்கு அறநிலையத்துறையின் எத்தனையோ ஓட்டைகளை எடுத்துச் சென்றாலும் ஓட்டைகள் இன்னமும் பெரிதாகிக் கொண்டுதான் உள்ளன!