By Dr. ப. ஜஸ்டின் ஆண்டனி,
சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை
இவ்வருடம் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் பயணத்தை உலகின் கண்கள் அனைத்தும் உற்றுநோக்கின. இது 45 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமர் போலந்துக்கு மேற்கொண்ட முதல் பயணம் என்பது மட்டுமல்லாது, 1991 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் உக்ரைனுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்பதுமாகும்.
இந்த பயணத்தால் உருவாகியிருப்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் புதியதோர் மைல்கல். மத்திய ஐரோப்பாவுடனான ஆழமான ஈடுபாட்டை மையமாகக் கொண்டு, ஒரு மூலோபாய மாற்றத்தைக் குறித்துள்ளது.
இப்பாரினில் தனித்தன்மை கொண்டது நம் பாரத தேசம். இத்தகைய தேசத்தின் பிரதமரின் பயணம், குண்டு மழைக்கிடையே வெள்ளைப்புறாவை பறக்க விட ஆயத்தமாகிறது என்ற நம்பிக்கை அவனியில் பறக்கிறது.
1954 – ல் தொடங்கிய இராஜதந்திர உறவுகளின் 70 – வது ஆண்டு நிறைவை இந்தியாவும் போலந்தும் கொண்டாடுகின்றன. சமீப காலமாக இவற்றின் வர்த்தகம் மூன்று பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்பது இவ்விரு நாடுகளுக்கி டையேயான இருதரப்பு வர்த்தகம் மிகவும் சீராக வளர்ந்துள்ளது என்பதை காட்டுகிறது. மத்திய ஐரோப்பாவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு பங்காளியாக போலந்து தொடர்கிறது.
பாரத பிரதமரின் போலந்து பயணத்தின் முக்கிய அம்சம் இரு நாடுகளின் இருதரப்பு உறவை ‘நீண்டகால திட்டங்களின்’ பங்காளிகளாக’ உயர்த்துவதற்கான ஒப்பந்தம் ஆகும். மட்டுமல்லாது, ஆழமாக வேரூன்றிய உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பரஸ்பர அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் எடுத்துக்காட்டுகிறது.
அரசியல் உரையாடல், பாதுகாப்பு, வர்த்தகம், காலநிலை, தொழில்நுட்பம், இணைந்து செயல்படுதல் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்தல் போன்ற முன்னுரிமைப் பகுதிகளில் கவனம் செலுத்தி, 2024-2028க்கான ஐந்தாண்டு செயல் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம், போரினால் பாதிக்கப்பட்ட தேசத்துடனான இந்தியாவின் உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இரு தரப்பும் இந்திய-உக்ரேனிய அரசுகளுக்கிடையேயான ஆணையத்தை (ஐஜிசி) உருவாக்க ஒப்புக்கொண்டன. இது இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மீட்டெடுப்பதற்கான அனைத்து வழிகளையும் ஆராயும்.
எரிவாயு விசையாழிகள் மற்றும் விமானங்கள் போன்ற பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் உக்ரைனின் நிபுணத்துவம் காரணமாக, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு உற்பத்திக்கான பரந்த அளவிலான வாய்ப்புகளை இந்தியா வழங்குகிறது. மேலும், உலகின் பெரும் விவசாய சக்திகளில் ஒன்றான உக்ரைன், போருக்கு முந்தைய ஆண்டுகளில் இந்தியாவிற்கு சூரிய மலர் எண்ணெயை அளிக்கும் மிகப்பெரிய சப்ளையர்களில் ஒன்றாக இருந்தது.
இந்தப் பயணத்தின் மிக முக்கியமான அம்சமாக, பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ள பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியதோடு, இந்தியா நடுநிலை வகிக்கவில்லை, ஆனால் அமைதிக்கு ஆதரவாக உள்ளது என்பதை வலியுறுத்தியுள்ளார். அவசர மருத்துவ சேவையை வழங்கும் நடமாடும் மருத்துவமனையான ‘பாரத் ஹெல்த் இனிஷியேட்டிவ் ஃபார் சாஹ்யோக் ஹிதா & மைத்ரி (Bharat Health Initiative for Sahyog Hita & Maitri – BHISHM) என்பதை உக்ரைனுக்கு வழங்கினார்.
இந்தப் பயணத்தின் போது, விவசாயம், மருத்துவம், கலாச்சாரம் மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான நான்கு முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியாவும் உக்ரைனும் கையெழுத்திட்டன. சுருக்கமாக, இந்த மூன்று நாள் பயணம் போலந்து, உக்ரைன் மற்றும் மத்திய ஐரோப்பாவுடன் நிலையான நீண்ட கால ஈடுபாட்டின் விதிமுறைகளை அமைத்தது. மத்திய ஐரோப்பா உலகளாவிய புவிசார் அரசியலில், குறிப்பாக உக்ரைனில் நடந்து வரும் போரின் காரணமாக, இந்தியாவின் ஐரோப்பிய கொள்கையில் ஒரு முக்கிய இடைவெளியை இந்த பயணம் நிவர்த்தி செய்கிறது.
பல ஆண்டுகளாக, இந்தியாவின் செயல்பாடுகள் ஐரோப்பாவின் பெரிய நான்கு நாடுகளான ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடன் மட்டுமே இருந்தது. எவ்வாறாயினும், கடந்த பத்தாணாடுகளில், இந்தியா தனது எல்லையை ஐரோப்பாவில் பன்முகப்படுத்த முயன்றுள்ளது. டென்மார்க், நார்வே, ஸ்வீடன், க்ரீன்லாந்து உள்ளிட்ட நார்டிக் நாடுகள் மற்றும் எஸ்டோனியா, லாட்வியா, லிதுனியா உள்ளிட்ட பால்டிக் நாடுகள் உட்பட ஐரோப்பாவின் பல துணைப் பகுதிகளுடன் கூட்டு இராஜதந்திரத்தை தொடங்கியுள்ளது.
எதிர்காலத்தில் உலகின் தலைசிறந்த தேசமாக மாற, நீண்ட கால திட்டங்களுடன் மத்திய ஐரோப்பாவுடன் இணைக்கிறது.
பிரதமரின் இந்த மூன்று நாள் பயணமானது, இந்தியாவின் முந்தைய அணிசேராக் கொள்கை, பரந்த அளவிலான நாடுகளுடன் நெருக்கமான உறவைப் பேணுவதை நோக்கி மெதுவாக நகர்கிறது என்பதை நிரூபிக்கிறது. உலக அளவில் அமைதியை ஏற்படுத்துவதில் தலைசிறந்து விளங்கும் நம் பாரத தேசத்தின் பிரதமர் மோடி இந்த அணுகுமுறையை ‘விஸ்வபந்து’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வளர்ந்து வரும் கொள்கையானது இந்தியாவிற்கு பொருளாதார மற்றும் நீண்டகால நன்மைகளை வழங்குகிறது.
“முப்பதுகோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் செப்புமொழி பதினெட்டுடையாள், எனில் சிந்தனை ஒன்றுடையாள்” என்று அன்றே சுதந்திர தாகம் பாடிய பாரதியின் கூற்றுப்படி, நம் பாரத தேசம் உலக அரங்கின் வல்லரசாக பவனி வரவேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் புறப்படுவோம். நம் தேசம் ஜொலிக்கட்டும், நாமும்.