ஹரியானா தேர்தலில் பெண்களுக்குப் பண வாக்குறுதி – காங்கிரஸ் 2,000! பாஜக 2,100!
— ஆர். வி. ஆர்
தேர்தல் வாக்குறுதிப் போட்டா போட்டிகளில், காங்கிரஸ் கட்சியும் பாஜக-வும் ஹரியானாவில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன.
ஹரியானா மாநிலத்தில் பாஜக இப்போது ஆட்சி செய்து வருகிறது. மாநில சட்டசபைக்கான அடுத்த தேர்தல், வரும் அக்டோபர் 5-ம் தேதி நடக்கவிருக்கிறது. பெண் வாக்காளர்களை ஈர்ப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியும் பாஜக-வும் இப்போது மல்லுக் கட்டுகின்றன.
18 முதல் 60 வயதுள்ள ஹரியானா பெண்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித் தொகை அளிப்போம் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் சொன்னது. அடுத்த நாள் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த மகளிருக்கு மாதம் இரண்டாயிரத்து நூறு ரூபாய் உதவித் தொகை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தது. மற்ற பல வாக்குறுதிகளையும் அந்த இரண்டு கட்சிகள் கொடுத்திருக்கின்றன.
‘நாங்கள் தொழில்வளத்தைப் பெருக்குவோம், வேலை வாய்ப்பை அதிகரிப்போம், கேஸ் சிலிண்டர்கள் குறைந்த விலையில் தருவோம், மருத்துவ சிகிச்சை வசதிகள் லட்சக் கணக்கில் தருவோம்’, என்று ஒரு கட்சி என்ன வாக்குறுதி அளித்தாலும், சுமாரான வருமானம் கிடைக்கும் அல்லது ஏழ்மையில் இருக்கும் மக்களுக்கு அவை பெரிய பொருட்டல்ல. சில வாக்குறுதிகள் மிக நிச்சயம் அல்ல என்பதும் அந்த மக்களுக்குத் தெரியும்.
ஒரு அரசியல் கட்சி, ‘எங்கள் அரசு மாதா மாதம் பண உதவி செய்யும்’ என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தால் அது சாதாரண மக்களால் கேள்வியின்றி வரவேற்கப் படும். ஏனென்றால் ஆட்சிக்கு வரும் கட்சி அந்த வாக்குறுதிப்படி பாவமான மக்களின் கைகளில் அந்தப் பணம் உடனே கிடைக்கச் செய்யமுடியும். அதற்காகக் காலமெடுக்கும் தயார் நடவடிக்கைகள் அவசியமில்லை.
இப்படியான பண விநியோக வாக்குறுதியைப் பொறுப்பற்ற முறையில் ஒரு அரசு செயல்படுத்தினால், என்ன ஆகும்? அரசு கஜானா சுகவீனம் ஆகும். ஆக்க பூர்வமான பல திட்டங்கள் படுக்கும். ரோடுகள் பாடாவதியாகப் பல்லிளிக்கும். அரசுப் பேருந்துகள் டப்பாவாக ஓடும். அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய அளவு டாக்டர்கள், நர்சுகள் இருக்க மாட்டார்கள். நடைமுறையில் இந்த விளைவுகளைப் பெரிதளவு அரசின் மாதா மாதப் பண விநியோகம் சரிசெய்யும். அப்படித்தான் நமது மக்கள் அவலமாக வைக்கப் பட்டிருக்கிறார்கள் – சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும்.
நமது சாதாரண மக்களின் பரிதாப நிலையை நன்றாக உணர்ந்த காங்கிரஸ், இப்படி அரசுப் பணத்தை விநியோகம் செய்யும் வாக்குறுதியை அளித்து ஹரியானாவில் ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சி மக்கள் நலனில் பெரிதாக ஒன்றும் செய்யாது. அரசாங்கப் பணத்தில் அது ‘என்னவெல்லாம்’ செய்ய நினைக்குமோ, அதைச் செய்யும். இப்படியான காங்கிரஸ் கட்சியைத் தேர்தலில் எதிர்க்கும் பாஜக, தேர்தல் களத்தைச் சரியாகக் கையாள வேண்டும்.
நமது சாதாரண மக்கள் அப்பாவிகள், பொதுவாக நல்லவர்கள். மாதா மாதம் பண விநியோகம் செய்வதாக ஒரு கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தால், அந்தப் பணம் தங்கள் வாழ்க்கைக்கு அவசியம் என்று கருதி, அவர்கள் அந்தக் கட்சிக்கே நல்லதனமாக, விசுவாச எண்ணத்துடன், வாக்களிக்கலாம்.
நமது பெரும்பாலான அரசியல்வாதிகள் குயுக்தியானவர்கள். நாட்டுக்கு, மக்களுக்கு, எது தொலைநோக்கில் நல்லது என்பது அவர்களுக்குப் பொருட்டல்ல. தங்களுக்கு, தங்களின் வம்சப் பரம்பரைக்கு, எது நல்லது என்பது பற்றியே அவர்கள் சிந்திப்பார்கள். சாதாரண மக்களின் நல்லதனத்தை அந்த அரசியல்வாதிகள் நன்றாக அறிந்தவர்கள். ஆனால் அந்த அரசியல்வாதிகளின் கெட்ட நோக்கத்தை அந்த மக்கள் அறியாதவர்கள்.
இந்த நிலையில், பாஜக மாதிரி தேச நலனை சிந்திக்கும் ஒரு கட்சி, இப்படி யோசிப்பதைத் தவிர்க்க முடியாது. எப்படியென்றால்:
‘மக்களுக்குப் பெரிதாக நல்லது செய்ய, மக்களின் ஓட்டுக்களைப் பெற்று ஆட்சிக்கு வந்தால்தான் முடியும். ஹரியானா தேர்தலுக்காக, பெண்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் தருவதாகக் காங்கிரஸ் கட்சி நல்லெண்ணம் இல்லாமல் வாக்குறுதி அளித்தால், நாம் நல்லெண்ணத்துடன் இரண்டாயிரத்து நூறு தருவதாகத் தேர்தல் வாக்குறுதி அளிப்போம். மக்களின் ஓட்டுக்களைப் பெற்று, தேர்தலில் வென்று, நல்லாட்சி செய்து, நிர்வாகத்தைச் செம்மையாக நடத்தி, மாநிலத்தில் தொழில்வளம் பெருக்கி, மக்களுக்கு நாம் உண்மையிலேயே நன்மை செய்யவேண்டும்.’
ஹரியானா தேர்தல் நேரத்தில் பாஜக இப்படித்தான் நினைத்திருக்க முடியும். அது புரிந்து கொள்ளக் கூடியது.
இன்றைய காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்திலோ மத்தியிலோ ஆட்சிக்கு வாராமல் பார்த்துக் கொள்வதும் நாட்டு நலனுக்கு உகந்தது. அதற்காக அந்தக் கட்சியின் ஒரு சில வாக்குறுதிகளைச் செயலிழக்கச் செய்யும் விதமாக பாஜக-வும் தேர்தல் வாக்குறுதிகள் தந்து பின்னர் தனது அனைத்து வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதும் பாஜக-வின் நல்ல நோக்கம் அல்லவா?
பாஜக இன்றைய தேதியில் இதைச் செய்யாமல், சாதாரண மக்களின் ஓட்டுக்களைக் காங்கிரஸ் கட்சி எளிதாகவும் குயுக்தியாகவும் ஈர்க்க அனுமதித்து, பின்னர் ‘காங்கிரஸ் கவர்ச்சியான வாக்குறுதிகளை அளித்து சாதாரண மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டது’, என்று பாஜக அலுத்துக் கொண்டால் யாருக்கு என்ன லாபம்?
ஹரியானவில் பாஜக காண்பித்திருக்கும் நல்லெண்ணத்தை, நல் முயற்சியை, வாழ்த்தலாம்.
Author: R Veera Raghavan, Advocate, Chennai
([email protected])
https://rvr-india.blogspot.com