திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு பதிவாளர், தொலைதூரக் கல்வி இயக்குனர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய பதவிகளுக்கான நியமனத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தகுதிகள் மற்றும் திறமைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, வேறு காரணிகளின் அடிப்படையில் முக்கியப் பதவிகளுக்கு ஆட்களை நியமித்தது கண்டிக்கத்தக்கது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெற்ற நேர்காணலில் தான் எல்லையில்லாத அளவுக்கு அத்துமீறல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. பதிவாளர், தொலைதூரக் கல்வி இயக்குனர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்த நிலையில், அவர்களில் தகுதியானவர்கள் அவர்களின் கடந்தகால கல்விச் சாதனைகள் மற்றும் நேர்காணல் மதிப்பெண் மூலம் தேர்வு செய்யப்படனர். ஆனால், இந்தப் பதவிகளுக்கான ஆள்தேர்வில் நேர்காணலில் மட்டுமின்றி, கல்விச்சாதனைகளுக்கு மதிப்பெண் வழங்குவதிலும் மோசடிகள் நடந்துள்ளன.
உதாரணமாக புதிய பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் கோபிநாத் கல்விச் சாதனைகளுக்கு 49 பதிப்பெண்கள், நேர்காணலில் 23 மதிப்பெண்கள் என மொத்தம் நூற்றுக்கு 72 மதிப்பெண்கள் பெற்றதாகக் கூறி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் கொடுமை என்னவென்றால், பதிவாளர் பதவிக்கான விண்ணப்பத்தில்,‘எழுதி வெளியான நூல்கள் மற்றும் தாள்கள்’ என்ற பகுதியில் கோபிநாத் எதையும் குறிப்பிடவில்லை. நேர்காணலின் போதும் தாம் நூல்கள் எழுதி வெளியிட்டதற்கான ஆதாரங்களைக் காட்டவில்லை. ஆனாலும், அவருக்கு அந்தப் பிரிவுக்கான முழு மதிப்பெண்ணான 10 மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் உதவியுடன் தான் அவர் மொத்தம் 72 மதிப்பெண் பெற்று பதிவாளராக தேர்வாகியுள்ளார். அவருக்கு அந்த 10 மதிப்பெண் வழங்கப்பட்டிருக்காவிட்டால், 62.5 மதிப்பெண் பெற்ற சாமி வீரப்பா, 60 மதிப்பெண் பெற்ற எம்.செல்வம் ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டிருப்பர்.
வேண்டியவர்களுக்கு அதிக மதிப்பெண் கொடுத்து தகுதியில்லாதவர்களை முன்னுக்குக் கொண்டு வருவது ஒருபுறமிருக்க, வேண்டாதவர்களுக்கு மதிப்பெண் மறுக்கப்பட்டு தகுதியுடையோரை பின்னுக்கு தள்ளும் துரோகமும் நடந்துள்ளது. பதிவாளர் பணிக்கான தேர்வில் மூன்றாவது இடம் பிடித்த முனைவர் செல்வம் கல்விச் சாதனைகளுக்கான 75 மதிப்பெண்களில் 57 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பதிவாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் கல்விச்சாதனைகளுக்காக அதிக மதிப்பெண் பெற்றவர் அவர் தான். நேர்காணலில் அதற்கு இணையான விகிதத்தில் 19 மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தால் மொத்தம் 76 மதிப்பெண்களுடன் பதிவாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பார். ஆனால், அவர் தேர்வாகி விடக்கூடாது என்பதற்காக அவருக்கு நேர்காணலில் சிறப்பாக செயல்பட்டும் 3 மதிப்பெண்களே வழங்கப்பட்டுள்ளன. கல்வியில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு நேர்காணலில் மிகக்குறைந்த மதிப்பெண்களே கிடைத்தன.
அதேபோல், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராக தேர்வாகியுள்ள துரையரசன் 57.50% மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததாக கணக்குக் காட்டப்படுகிறது. இவர் கல்விச்சாதனைக்கான 75 மதிப்பெண்களில் பாதிக்கும் குறைவாக 34.5% மட்டுமே பெற்றுள்ளார். ஆனால், நேர்காணலில் அவருக்கு 25க்கு 23 மதிப்பெண் கொடுத்து தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பணிக்கான போட்டியில் முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதேபதவிக்கு போட்டியிட்ட முனைவர் அறிவொளி என்பவர் கல்விச் சாதனைகளுக்கான 75 மதிப்பெண்களில் 46 மதிப்பெண் பெற்றுள்ளார். நேர்காணலில் இதற்கு இணையான விகிதத்தில் 15 அல்லது 16 மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தால் 62% மதிப்பெண்களுடன் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராகியிருப்பார். ஆனால், அவர் அந்த பதவிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே அவருக்கு நேர்காணலில் குறைவான மதிப்பெண் கொடுத்து நிராகரித்துள்ளனர். தொலைதூரக் கல்வி இயக்குனர் முனைவர் ஆறுமுகம் மட்டுமே விண்ணப்பித்திருந்தார். ஒரு பதவிக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தால், அப்பதவிக்கு விளம்பரங்கள் மூலம் மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், அதை புறந்தள்ளிவிட்டு ஆறுமுகத்தை போட்டியில்லாமல் நியமித்துள்ளது நிர்வாகம்.
இத்தேர்வுகள் நடந்த போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. உயர்கல்விச் செயலாளர் சுனில் பாலிவால் தலைமையிலான குழு தான் பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வந்தது. அவரது தலைமையிலான குழு தான் இந்த நேர்காணலையும் நடத்தியது. நேர்காணல் குழுவில் இடம்பெற்றிருந்த அனைவரும் மதிப்பெண் வழங்கி, அவற்றின் சராசரி அடிப்படையில் தான் தகுதி கண்டறியப்பட வேண்டும். ஆனால், தேர்வுக்குழுவின் இருந்தவர்களில் சுனில்பாலிவால் தவிர வேறு எவரும் மதிப்பெண் வழங்கவில்லை. இதுவும் விதிகளுக்கு எதிரானது ஆகும். சுனில் பாலிவாலுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஆட்கள் நியமனத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் இத்தகைய மோசடிகளும், ஊழல்களும் நடப்பதாகக் கருதமுடியாது. தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இத்தகைய அத்துமீறல்கள் தான் நடக்கின்றன. பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு நேர்காணல்கள் நடக்கும் போது, தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருப்பவர்களை நிர்பந்தித்து நிரப்பப்படாத மதிப்பெண் பட்டியலை வாங்கி, அதில் துணைவேந்தரின் விருப்பப்படி மதிப்பெண்களை நிரப்பி, அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பணி வழங்குவது வாடிக்கையாகிவிட்டது. இந்த அநீதி மாற்றப்பட வேண்டும்.
பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் நியமனம் பற்றிய அனைத்து விவரங்களும் தகவல் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்டுள்ளன. நேர்காணலின் விடியோ பதிவை வழங்க பல்கலைக்கழகம் மிகவும் தாமதிப்பதாகக் கூறப்படுகிறது. அது அழிக்கப்பட்டால் ஆதாரங்கள் சிதைக்கப்பட்டுவிடும். எனவே, பல்கலைக்கழக வேந்தரான ஆளுனர் அவர்கள், நேர்காணலின் விடியோ பதிவை கைப்பற்றி பார்க்க வேண்டும். அதில் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தெரிவிக்கும் தொலைநோக்குத் திட்டங்களுக்கு ஏற்ற வகையில் புதிதாக மதிப்பெண் வழங்கி, அந்த மதிப்பெண் மற்றும் கல்விச்சாதனைகளுக்காக வழங்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பதவிகளுக்கு தகுதியான பேராசிரியர்களை ஆளுனரே தேர்வு செய்ய வேண்டும். பல்கலைக்கழக நிர்வாகம் சார்ந்த நியமனத்தில் ஊழல் செய்த உயர்கல்வி செயலாளர் சுனில் பாலிவாலை அப்பதவியிலிருந்தும், பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் சார்ந்த மற்ற பதவிகளில் இருந்தும் உடனடியாக அகற்ற ஆளுனர் ஆணையிட வேண்டும்.
– டாக்டர் ராமதாஸ்
நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி