பெங்களூரு:
கர்நாடக மாநிலத்திற்கு என சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்திலான கொடியை முதல்வர் சித்தராமையா இன்று அறிமுகப்படுத்தி வைத்தார். இந்தக் கொடிக்கு ஒப்புதல் பெறுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது கர்நாடக காங்கிரஸ் அரசு. ஆனால், மத்திய அரசு இந்த விஷயத்தை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
தேசியக் கட்சி என்ற பெயர் எடுத்து நாட்டின் பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, அண்மைக் காலமாக நாலைந்து மாநிலங்களுக்குள் சுருங்கிப் போயுள்ளது. இதனால், இருக்கும் ஆட்சியைத் தக்க வைக்க, கர்நாடகத்தில் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக மாநில அரசு, வழக்கம் போல், காவிரியையும் மொழி வெறியையும் கையில் எடுத்துள்ளது.
காவிரி விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் வழங்கப் பட்ட தீர்ப்பில், தனக்கு சாதகமான -தண்ணீர் பகிர்வு- என்ற ஒரு அம்சத்தைக் கொண்டாடும் கர்நாடக அரசு, இன்னொரு அம்சமான காவிரி மேலாண்மை வாரியத்தை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்ட அம்சத்தை எதிர்க்கிறது. அதற்காக, மத்திய அரசை வலியுறுத்தி, அடுத்து வரும் தேர்தலில் அரசியல் ரீதியாக பயனடையும் போக்கைக் கையில் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில், பாஜக.,வும், தனக்கு சாதகமான நிலையை யோசித்து வருகிறது.
இந்நிலையில், வழக்கம்போல் கர்நாடகத்தில் மொழி உணர்வையும், தனித்த கர்நாடக உணர்வையும் தூண்டிவிட்டு வரும் இயக்கங்களுக்குப் போட்டியாக, தேசியக் கட்சியான காங்கிஸும் களத்தில் இறங்கியுள்ளது. அதன் ஒரு படியாக, மாநிலத்திற்கு என தனிக்கொடி ஒன்றை ஏற்படுத்த கடந்த 2017ல் 9 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்தக் குழு ஆலோசனை நடத்தி கொடியை வடிவமைத்து மாநில அரசிடம் கடந்த பிப்ரவரியில் ஒப்படைத்தது. அந்தக் கொடியை பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் சித்தராமையா இன்று அறிமுகப்படுத்தி வைத்தார்.
மேல் புறத்தில் மஞ்சள் நிறம், நடுவில் வெள்ளை நிறம், கீழே சிவப்பு நிறத்தில் இந்தக் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுவில் கர்நாடக அரசின் சின்னம் இடம்பெற்றுள்ளது. தற்போது, இந்தக் கொடி மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்திற்கு அடுத்து தனிக்கொடி பெற்ற 2வது மாநிலம் கர்நாடகா என்ற பெயரைப் பெறுவதற்கான ஒரு முயற்சியாக இது கருதப் படுகிறது. ஒரு மாநிலம் இப்படி தனிக்கொடி கொண்டு வருவதை மத்திய அரசு விரும்பவில்லை. ஒவ்வொரு மாநிலமும் இப்படி தங்களுக்கென தனிக் கொடியைக் கொண்டு வந்தால், அது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைப்பதாக அமையும். எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு, அதற்கு எத்தகைய பலனை வரும் தேர்தலில் கொடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
காரணம், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்தக் கொடியை வைத்தே பாஜக.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்த சித்தராமையா முயன்று வருகிறார். கொடிக்கு அனுமதி கொடுப்பதை பாஜக., விரும்பவில்லை. எனவே, இதை வைத்து கன்னடர்களிடம் பாஜக.,வுக்கு எதிரான மொழி வெறி பிரசாரத்தை மேற்கொள்ள சித்தராமையா திட்டமிட்டுள்ளதாக கர்நாடக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.