
பத்மன்
“பூக்களில் இருந்து தேனீக்கள் தேனை உறிஞ்சுவதைப் போல மிக மென்மையாகவும், மகரந்தச் சேர்க்கைக்கு உதவுதல் என்பதைப் போல் வளத்தைப் பகிர்தல் என்ற உப பயன்பாட்டுக்காகவும் வரி வசூலிப்பு இருக்க வேண்டும்” என்று, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவுறுத்தியுள்ளார் பொருளாதார மாமேதை சாணக்கியர்.
ஆனால் அவர் பிறந்த நாட்டில் வாழும் எல் அண்ட் டி சேர்மன் எஸ்.என். சுப்ரமணியன் போன்ற முதலாளி வர்க்கத்தினருக்கு, முட்டைப்பூச்சியை விட மோசமாக தொழிலாளர் உழைப்புத்திறனை உறிஞ்ச வேண்டும் என்ற ஆவல் பிறந்திருப்பது ஆச்சரியத்தை அல்ல, “அடடா! விநாஸ காலே விபரீத புத்தி” என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாரத்துக்கு 90 மணி நேரம் தொழிலாளர்கள் உழைக்க வேண்டும் என்ற அவரது வாதம் விதண்டாவாதம் அல்ல, அதைவிட மோசமான வக்கிரவாதம்.
ஒருவேளை எங்களது லாபத்தில் இருந்து வசூலிக்கப்படும் வரிக்கு வேண்டுமானால் சாணக்கியரின் தேனீ உதாரணம் பொருந்தும். ஆனால் எங்களுக்குத் தேவையான தொழிலாளர் ரத்தத்தை உறிஞ்ச இது சரிவராது என்று அவரையொத்த முதலாளிகள் எல்லாம் கருதுகிறார்களோ?
அப்படியல்ல! ஆர்பிஜி சேர்மன் ஹர்ஷ் கோயங்கா, மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் போன்றோர் இந்த மடத்தனமான யோசனையை மறுதலித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
எல் அண்ட் டி சேர்மன் சுப்ரமண்யன், தனது நிறுவன ஊழியர்களுடன் கலந்துரையாடியது தொடர்பாக, அண்மையில் சமூக வளைதலத்தில் வெளியான ஒரு வீடியோவே இத்தனைப் பரபரப்புக்கும் காரணம். அந்த வீடீயோவில், சனிக்கிழமையும் வேலை பார்க்க வேண்டுமா என்று ஒருவர் கேட்டதற்கு, ஞாயிற்றுக்கிழமையும் வேலை பார்க்கச் செய்ய முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது என்று பதிலளித்துள்ளார் சுப்ரமண்யன்.
தொழிலாளர்கள் குறைந்தபட்சம் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளிய அவர், “வீட்டில் உட்கார்ந்து கொண்டு மனைவியின் முகத்தையே எத்தனை மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பது?” என்ற அற்புதமான கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
அவர் சொன்னபடி வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை பார்த்தால், வேலையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்க முடியுமே தவிர, ஒழுங்காகச் செய்ய முடியாது. ஞாயிற்றுக்கிழமை போக, வாரத்துக்கு 90 மணி நேரம் என்றால், தினசரி 15 மணி நேரம் அலுவலகத்திலோ தொழிற்சாலையிலோ உழைக்க வேண்டும். உடல் அசதியை, மன அழுத்தத்தைப் போக்கும் உறக்கத்துக்கு 6 முதல் 8 மணி நேரம் தேவை. குறைவான 6 மணி நேரத்தையே இதற்கென ஒதுக்கினாலும்கூட மீதி 3 மணி நேரம் மட்டுமே, குளிக்க, சாப்பிட, அலுவலகம் வந்துபோக ஆகியவற்றுக்குக் கிடைக்கும். தொலைவில் உள்ளவர்கள் அலுவலகமே கதி என்று தங்கிவிட வேண்டியதுதான்.
ஞாயிற்றுக்கிழமையும் வேலைக்கு வர வேண்டுமென்றால் தினசரி 13 மணி நேரத்துக்கும் மேல் உழைக்க வேண்டும். விடுப்புக்கு விடுப்புக் கொடுத்துவிட்டு, புதுவிதமான கொத்தடிமைத்தனத்துக்குள் புகுந்து கொள்ள வேண்டுமா?
அதுசரி, மனிதர்கள் உழைப்பதன், வேலை செய்வதன் அடிப்படை நோக்கம் என்பது யாரோ முதலாளிக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதற்காகவா? அல்ல. தங்களது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, கிடைக்கும் வருமானத்தைக் கண்டு குடும்பத்தினரோடு மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காக. அந்த வாழ்வியல் நோக்கத்தைக் காவு கொடுத்துவிட்டு எதற்காக உழைக்க வேண்டும்?
தற்காலத்தில் அதிக அளவில் பெண்களும் வேலைக்கு வந்து உழைப்புச் சக்தியை வழங்குகிறார்கள் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல், எத்தனை மணி நேரத்துக்கு மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் எல் அண்ட் டி சேர்மன்.
அதுசரி, சுரங்கங்கள், உலைகள், ஆலைகள் போன்ற இடங்களில், ஏற்கெனவே கடினமான உழைப்பைத் தருகின்ற தொழிலாளர்களின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எத்தனை நிறுவனங்கள் எடுத்துள்ளன? எத்தனை நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பணிசார் நோய்கள், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது?
எத்தனை நிறுவனங்களில் உழைக்கும் மகளிரின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன? இதுபோன்ற கேள்விகள் எல்லாம் எல் அண்ட் டி சேர்மன் போன்றோரின் நெஞ்சைச் சுடவில்லையா?
லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்தால், உற்பத்தித் திறன் உருச்சிதைந்து போகாதா? “உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா” என்று வருந்துவதற்கு அல்லவோ அது வழிவகுக்கும்? கசக்கிப் பிழியப்பட்ட கரும்புச் சக்கையில் இருந்தா சாறு கிடைக்கும்? மனிதன் என்ன மெஷினா? இயந்திரங்கள்கூட குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் தொடர்ந்து இயங்கினால் கோளாறு ஆகுமே? உணர்வற்ற மெஷினுக்குக் கிடைக்கும் உபசரிப்புகூட உயிருள்ள, உணர்வுள்ள மனிதனுக்குக் கிடையாதா?
மனிதர்கள் பிறப்பெடுத்ததே யாருக்கோ பணிசெய்து கிடப்பதற்காகவா? வாழ்வியலின் மற்ற அம்சங்கள் என்னாவது? படிப்பது, விளையாடுவது, நண்பர்களுடன் கலந்துரையாடுவது, கலை- கேளிக்கைகளில் களிப்பது போன்ற புத்துணர்வு அம்சங்கள் எல்லாம் பொசுங்கிப் போய்விட்டால், தொடர்ந்து உழைப்பதுதான் எவ்வாறு சாத்தியம்?
மனிதர்கள் எல்லோரும் ஓய்வின்றி, விடுமுறையின்றி உழைக்கும் ‘உயிருள்ள பொம்மைகள்’ ஆகிவிட்டால், நாடே மனநோயாளிகளின் கூடாரமாக மாறிவிடதா? ஒவ்வொரு மனிதரும் பணிச்சுமை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையைப் பராமரிப்பது தவிர்க்க இயலாத அத்தியாவசியமல்லவா?
உழைப்பை உறிஞ்சுவதற்கு ஓர் வரையறை இல்லையா? தானாக விரும்பிக் கொடுத்தால் தானம், தியாகம். வன்மையாகப் பிடுங்கினால் அது கொள்ளை, கொடூரம்.
பசுவுக்குப் பால் சுரப்பது, வேறு யாரோ பருகுவதற்காக அல்ல, அதன் கன்றுக்குட்டிப் பசியாற. அதனால்தான் கன்றுக்குட்டியை முதலில் சிறிது பால் அருந்த விட்டுவிட்டு, பால் கறக்கிறார்கள். தனது கன்றுக்குட்டி இல்லையென்றால் பசுவுக்குப் பால் சுரப்பது நின்றுவிடும். ஆகையால்தான் செத்துப்போன கன்றுக்குட்டியின் தோலில் வைக்கோலைத் திணித்து, வைக்கோல் கன்றுக்குட்டியைத் தாய்ப் பசுவின் கண்களில் காட்டி ஏமாற்றி, பால் கரக்கிறார்கள். அப்படியிருக்க, ஓர் தொழிலாளி குடும்பத்தாரையே எத்தனை மணி நேரம் பார்த்துக்கொண்டிருப்பது என்று எல் அண்ட் டி சேர்மன் எழுப்பியிருக்கும் கேள்வி, மகா குரூரம் மட்டுல்ல, அடிப்படை அறிவோ, இரக்க உணர்வோ இல்லாத அடிமுட்டாள்தனம்!
ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் கொண்டாடுகிறோம். பொங்கல் திருநாளுக்கு அடுத்த மாட்டுப் பொங்கல் தினத்தன்று, அனைத்து விவசாயிகளும் தங்களது உழவுக்கு உதவிய மாடுகளைக் கடவுளாக பாவித்து வணங்குகிறார்கள், மரியாதை செலுத்துகிறார்கள்.
இவ்விதம் நன்றி பாராட்டுவது நம் பாரம்பரியம். முதலாளிமார்களே, உங்களுக்குத் தொழிலாளிகளே அத்தகைய தெய்வம். அவர்களுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும் அல்லது செய்யாமல் இருங்கள்!
🪷 பத்மன்