
– பத்மன்
மன்னராட்சியை அகற்றிவிட்டு மக்களாட்சியைக் கொண்டுவருவதற்கான புரட்சி பழைய விஷயம். தற்போது வரலாறு திரும்புகிறது.
நேபாளத்தில் மக்களாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து மன்னராட்சியை மீண்டும் கொணர்வதற்கான புரட்சி வலுத்துள்ளது. நேபாளம் பழையபடி ஹிந்து ராஷ்ட்ரம் ஆக அதாவது ஹிந்து நாடாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதும் இப்புரட்சியின் அடிநாதம்.
இந்த இரண்டு கோரிக்கைகளுக்காக, மக்கள் கூட்டு நடவடிக்கைக் குழு என்ற அமைப்பால் கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி தலைநகர் காத்மாண்டில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்க்கணக்கானோர் பங்கேற்றனர். இந்தப் புரட்சியாளர்களை “கவனிக்க” நேபாள கம்யூனிஸ்ட் அரசால் 5,000 பாதுகாப்புப்படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணி செல்ல முயன்றபோது போலீஸார் நடத்திய கண்ணீர் புகை குண்டுவீச்சு, தடியடி, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை ஆகியவற்றில் 2 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
ஜனநாயகத்துக்குத் தலைமுழுக்குப் போட வேண்டும் என ஜனங்களே இவ்விதம் போராடத் தொடங்கியிருப்பதற்கு என்ன காரணம்? நேபாளத்தில் புறவாசல் வழியாகப் புகுத்தப்பட்ட மக்களாட்சி என்ற பெயரிலான அரசியல் விளையாட்டே இதற்கு மூல காரணம்.
இந்த அரசியல் விளையாட்டால் அமைதியான நாடாகவும், உலகின் ஒரே ஹிந்து நாடாகவும் இருந்த நேபாளம், தற்போது ஸ்திரமற்றதன்மையாலும், பொருளாதார நெருக்கடியாலும், பண்பாட்டுச் சீரழிவினாலும் அல்லல்படுவதோடு சீனாவின் ஆதிக்கம், இஸ்லாமிய பயங்கரவாதம், கிறிஸ்தவ மிஷனரிகளின் மதமாற்ற வெறியாட்டம் ஆகியவற்றாலும் அலங்கோலப்படுகிறது.
இந்தச் சீரழிவுக்கெல்லாம் மூல காரணம் ஒற்றை நபர். அவர்தான் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி.
கடந்த 1988-ஆம் ஆண்டில் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, தனது மனைவி சோனியா காந்தியுடன் நேபாளம் சென்றிருந்தார். அப்போது புராதனப் பெருமை வாய்ந்த பசுபதிநாத் கோவிலுக்குள் ராஜீவ் செல்லலாம், ஆனால் கிறிஸ்தவரான சோனியா செல்ல முடியாது என பூசாரிகள் அனுமதி மறுத்தனர். விஷயம் நேபாள மன்னர் பீ(வீ)ரேந்திராவிடம் சென்றபோது, மத விவகாரத்தில் மன்னர் தலையிடுவது பாரம்பரியம் அல்ல என அவர் மறுத்துவிட்டார்.
இதன் விளைவு, நேபாள அரசுக்கும் அதன் பாரம்பரியத்துக்கும் இந்தியாவின் ராஜீவ் அரசால் கிடைத்த பேரிடி. தொப்புள்கொடி உறவான இந்தியாவில் இருந்து உணவுப் பொருட்கள், மண்ணெண்ணெய், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நேபாளம் செல்வதற்கு 1989-இல் ராஜீவ் அரசு தடை விதித்தது.
21 வழித்தட்களில் 19 வழித்தடங்கள் அடைக்கப்பட்டன. இதற்குச் சொல்லப்பட்ட காரணம் இந்தியாவின் பாதுகாப்புக்காக. இத்தனைக்கும் அந்தக் காலகட்டத்தில் நிலநடுக்கத்தால் நேபாளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
ஓராண்டுக்கும் மேலான இந்தப் பொருளாதாரத் தடை காரணமாக நேபாளத்தில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தால் மன்னர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. கூடவே, ராஜீவின் உத்தரவுப்படி நேபாளத்தில் மன்னருக்கு எதிரான அரசியல் ஆர்ப்பாட்டங்களை இந்திய உளவு அமைப்பான “ரா” தூண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறான நெருக்கடியால் 1990-இல் மன்னர் பீரேந்திரா, நேபாளத்தில் நாடாளுமன்ற ஜனநாயகத்துடன் கூடிய மன்னராட்சிக்கு (கான்ஸ்டிடியூஷனல் மொனார்கி) ஒப்புக்கொண்டார். முதலில் நேபாள காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இருந்நது.
ஆனால் ஜனநாயகப் பேராளிகளான காம்ரேட்டுகள் சும்மா இருப்பார்களா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி நேபாளத்துக்குப் பயணப்பட்டார். இதனால் நேபாளத்தில் பிற அரசியல் கட்சிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே 2006-இல் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த யெச்சூரி ஃபார்முலாவின் விளைவாக 2008-இல் நேபாளத்தில் மன்னராட்சிக்கு முழுமையாக விடை கொடுக்கப்பட்டது. உலகின் ஒரே ஹிந்து நாடான நேபாளம், செக்யூலர் நாடாக அறிவிக்கப்பட்டது.
ஆஹா புரட்சி என்று புளகாங்கிதம் அடைய வேண்டாம். இந்த ஜனநாயகப் புரட்சியால் ஜனங்களின் நிம்மதி தொலைந்தது. மதச்சார்பின்மை என்ற பெயரில் மண்ணின் அடையாளத்தை அழிப்பதற்கான சதிவேலைகள் அதிகரித்தன. பொருளாதாரம் வளரவில்லை, ஆனால் ஸ்திரமற்ற நிலை பீடித்துக் கொண்டது.
ஒருபுறம் உதவிக்கரம் என்ற பெயரில் நுழைந்த சீனாவின் கடன் வலையில் சிக்கி, அதன் தலையீடு அதிகரிப்பால் என்று அது நாட்டை முழுங்குமோ என்ற அச்சம் பிடித்து வாட்டுகிறது.
நேபாள கம்யூனிஸப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, சீனப் பெண் தூதுவரின் காம வலையில் சிக்கி அவளது கைப்பம்பரமாகச் சுற்றியது 2020-இல் வெட்ட வெளிச்சமாகியது. சீனாவின் ஆதிக்கத்துக்கும், இந்திய எதிர்ப்புக்கும் நேபாள கம்யூனிஸ்ட்டுகள் இடும் தூபம், நேபாளத்தின் கண்களை மறைத்து அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
மறுபுறத்தில் இந்திய எதிர்ப்பு என்ற பெயரில் பாகிஸ்தான் ஜிஹாதிகளுக்கு அடைக்கலம் தந்ததால், நேபாளத்தின் சில பகுதிகள், குறிப்பாக எல்லைப் பகுதிகள் பயங்கரவாதிகளின் சொர்க்கபுரிகளாக மாறிவிட்டன.
நேபாளத்தில் இருந்து இந்திய கள்ள நோட்டுகளை அச்சடித்துப் புழக்கத்தில் விடும் அளவுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் கரம் ஓங்கியது. சொந்த நாட்டு மக்களுக்கு கிடைக்காத வசதிகள் மியான்மரில் இருந்து இடம் பெயர்ந்த, ஊடுருவிய ரோஹிங்கியா முஸ்லிம்களுக்குக் கிடைத்தது.
மதம் ஒரு அபின் என்று ஹிந்துக்களிடம் காம்ரேட்டுகள் செய்த தொடர் பிரசாரம், கிறிஸ்தவ மிஷினரிகளின் மத வியாபாரத்துக்கு மகத்தான துணை புரிந்தது. காம்ரேட்டுகளும் அவர்களது நேபாள அரசுகளும் ஏழ்மையைக் காப்பாற்றியதால் மிஷினரிகள் பொருளாசை காட்டி ஹிந்துக்களை மதம் மாற்றினர். 1951-இல் ஒரு கிறிஸ்தவர் கூட இல்லாத நேபாளத்தில் 2001-இல் ஒரு லட்சம் கிறிஸ்தவர்கள் உருவாகினர்.
இந்த எண்ணிக்கை 2011-இல் 3.76 லட்சமாகவும், 2021-இல் 5.50 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த 20 ஆயிரம் மெஷினரிகள் நேபாளத்தில் இயேசு ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்கக் கடுமையாகப் பாடுபடுகின்றனர்.
இவ்விதம் நேபாளத்தின் இறையாண்மையையும், இறையுணர்வையும் கூறுபோட்டு அதனை ஆட்டிப்படைக்க சீன ஆதரவு கம்யூனிஸம், பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாதம், மிஷினரிகளின் கிறிஸ்தவ மத வெறியாட்டம் ஆகியவை போட்டிப் போட்டுக்கொண்டு களத்தில் வேலை செய்கின்றன.
இவற்றுக்கு மாற்றாக எழுந்துள்ள சொரணையுள்ள மண்ணின் மைந்தர்கள் முன்னெடுத்துள்ள போராட்டமே, மீண்டும் ஹிந்து மன்னராட்சி. அதேநேரத்தில் மன்னர் தலைமையின் கீழான நாடாளுமன்ற ஜனநாயகத்துடன் கூடிய மன்னராட்சியையே அவர்கள் விரும்புகிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது.
நேபாளம் நமது அண்டை நாடு மட்டுமல்ல, அகண்ட பாரதத்தின் ஓர் அங்கம் என்பதால் அங்கே நன்மாற்றம் ஏற்படுவதற்கு இன்றைய பாரத அரசு இயன்ற அளவு உறுதுணை புரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எள் முனையளவும் தவறில்லை.
(கட்டுரையாளர் – மூத்த பத்திரிகையாளர்)