
“சர், வி ஹேவ் டன் இட்”
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர் – கலைமகள்
இந்திய விஞ்ஞானிகள் ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் ஆகியோர் இந்தியாவில் அணுசக்தி சோதனைக்கு அடித்தளம் அமைத்த ஜாம்பவான்கள் ஆவார்கள்.
பிரதமர் இந்திரா காந்தி அணு ஆயுதச் சோதனைகளில் எதிர்மறையான பார்வையைக்கொண்டிருக்வில்லை! எனவே அவரது ஆட்சி காலத்தில் முதன்முறையாக அணு சோதனை நடத்தப்பட்டது! P-5 நடைமுறையில் இருந்த ஒப்பந்தங்களைக் கருத்தில் கொண்டு, இந்தியா தனது சோதனைகளை எந்த முன் தகவலும் உலகிற்கு வெளியிடாமல் நடத்த முடிவு செய்தது!இந்த முயற்சியின் மூளையாகச் செயல்பட்டவர் ராஜா ராமண்ணா.
மே 18, 1974 இல், 12 கிலோ டன் அணுசக்தி சாதனம் வெடிக்கப்பட்டது. இதற்காக ராஜஸ்தானின் பாலைவனத்தில் அமைந்துள்ள இராணுவ சோதனைத் தளமான பொக்ரான் தேர்ந்தெடுக்கப்பட்டது. வெற்றிகரமாக அணுசோதனை நடந்தது உலகம் வியந்தது!!
இந்தச் சோதனையில் 75 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஈடுபட்டது. கௌதம புத்தரின் பிறந்த தேதியான புத்த ஜெயந்தி நாளில் சோதனை தேதி இருந்ததால் தான் “புத்தர் சிரித்தார்” எனப் பெயரிடப்பட்டது.
இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் நடைபெற்ற அணுகுண்டு சோதனைக்குப் பிறகு 1998-ல் மீண்டும் ஒரு அணுகுண்டு சோதனையை நடத்த வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு முடிவு செய்தது. ஆனால் இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அணுகுண்டு சோதனைக்கு நரசிம்மராவ் தலைமையிலான அரசு தயாரானது. ஆனால், பொக்ரானில் அணுகுண்டு சோதனைக்கானத் தயாரிப்புகள் நடந்துகொண்டிருந்த பொழுது அமெரிக்க செயற்கைக் கோள்கள் துல்லியமாக இனம் கண்டு கொண்டதால் இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது!
எனவே அமெரிக்க செயற்கைக் கோள்களின் பார்வையில் படாத வகையில் ஏற்பாடுகளை இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) வாஜ்பாயின் ஆட்சி காலத்தில் மேற்கொண்டது.
சுழன்றுகொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் பூமியில் பொக்ரான் பகுதியிலிருந்து வேறு திசைக்குத் திரும்பியிருந்த கால இடைவெளியில் அணுகுண்டு சோதனையைச் சத்தமின்றி முடித்துவிட்டது இந்தியா.
மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் டைரக்டர்-ஜெனரலாக அப்துல் கலாம் இருந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. சோதனைக்கான தேதியையும் நேரத்தையும் குறித்தது அவர் தான்! யாருக்கும் தெரியாமல் இருக்க பல உபாயங்களைக் கையாண்டார்கள்.
அமெரிக்க உளவாளிகளிடமிருந்து தப்பிக்க, இந்திய விஞ்ஞானிகள் தங்கள் தொலைபேசி உரையாடலில் கூட பல்வேறு code வேர்ட்டுகளைப் பயன்படுத்தினார்கள். ‘தாஜ்மஹால்’, ‘கும்பகர்ணன்’ ‘சியரா’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி கருத்துக்களைப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
அமெரிக்க செயற்கைகோள் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்காக, அப்துல் கலாம் உள்ளிட்ட விஞ்ஞானிகள்கூட ராணுவத்தினர் அணியும் சீருடை அணிந்துதான் போக்ரான் பகுதிக்குச் சென்று வந்தனர். பெரும்பாலான பணிகள் இரவில்தான் மேற்கொள்ளப்பட்டன.
ஏற்கனவே செயற்கைகோள்கள் இயங்கும் விதம் குறித்த ஆராய்ச்சிகளில் கலாம் ஈடுபட்டு இருந்ததால் , செயற்கைகோள் பொக்ரான் பகுதிக்கு மேலே பறக்காத கால நேரத்தைக் கணக்கிட்டு கூறினார் .
இரவு நேரங்களில் கடுமையாக உழைத்து அணுகுண்டு சோதனைக்குத் தேவையான வேலைகளைச் செய்தனர் நம் விஞ்ஞானிகள்.மீண்டும் செயற்கைகோள் பொக்ரான் பகுதிக்கு வரும் நேரத்திற்கு முன்பாக வேலைகளை முடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வெற்றிகரமாக அதைக்ண கடைப்பிடித்தனர்.
உளவு பார்க்கும் அமைப்புகளிடம் இருந்தும் தப்பிக்க கலாம் உள்ளிட்ட அவரது குழுவில் இடம்பெற்ற விஞ்ஞானிகள் அனைவரது பெயர்களும் மாற்றப்பட்டன . ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளும்போது கூட புனைப் பெயர்களைக் கொண்டே அழைத்துக்கொண்டனர் . ” கலோனல் பிருதிவிராஜ் ” என்ற புனைப்பெயரை வைத்துக் கொண்டார் அப்துல் கலாம்.
அணு வெடிப்பு சோதனை(மே 11-1998) வெற்றிகரமாக முடிந்ததும், அணுசக்தி ஆணையர் சிதம்பரம்(இவரை நான் மும்பையில் சந்தித்து கலைமகளுக்காக ஒரு பேட்டியும் எடுத்து இருக்கிறேன்) கலாமுடன் கைகுலுக்கி, “24 ஆண்டுகளுக்குப் பிறகும் இதை மீண்டும் நம்மால் செய்யமுடியும் என்று நான் உங்களிடம் சொன்னேன். செய்து காட்டி விட்டோம்! வெற்றி பெற்று விட்டோம்!!”என்றார்.
“உலகின் அணுசக்தி வல்லரசுகளின் மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம். நூறு கோடி மக்கள் வாழும் நமது நாட்டிடம் என்ன செய்யவேண்டும் என்று வெளிநாட்டினர் சொல்ல முடியாது. என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது நாம் முடிவு செய்து வெற்றி கண்டுள்ளோம்” என்றார் கலாம். சரி பிரதமருக்கு சொல்வோம் என்றபடி தொலைபேசியை எடுத்தார் அப்துல் கலாம்.
பிரதமர் இல்லத்தில் தொலைபேசியின் அருகில் அடல் பிஹாரி வாஜ்பாயின் முதன்மைச் செயலாளராகவும் பாதுகாப்புத்துறை ஆலோசகராகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த பிரஜேஷ் மிஸ்ரா, முதல் ரிங்கிலே போனை எடுத்தார். ஆனந்தத்தில் சரியாகப் பேச முடியாமல் நடுங்கும் குரலில், “சர், வி ஹேவ் டன் இட்,” என்றார் கலாம்.
‘கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’ என்று மிஷ்ரா போனில் கத்தினார். உலகமே வியந்து பார்த்தது இந்தியாவை !!
பத்திரிகையாளர்களிடம் வெற்றியை பகிர்ந்து கொண்ட பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ” இந்திய அணு உலைகள் பத்திரமாக இருக்கின்றன. ஆக்கபூர்வமான வேலைகளுக்கு மட்டும் தான் அணுவை இந்தியா பயன்படுத்தும்! எந்த ஒரு சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் செயல்படும் இந்திய ராணுவம் மற்றும் இந்திய அரசாங்கம் உலகின் நல்லெண்ணத்தோடு அவ்வப்பொழுது வெற்றி கொடி நாட்டும்” என்றார் !!
( அந்தக் காலகட்டத்தில் வெளியான பத்திரிகைகளில் இருந்து நான் திரட்டிய தகவல்கள். பழைய டைரியில் நான் எழுதியவை. இப்போது கிடைத்தது! பகிர்ந்திருக்கிறேன். வேறொன்றும் அறியேன் பராபரமே!!)





