
— டாக்டர் விஜய் தார்தா
–தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்
ஆச்சரியப்படத்தக்க ஒரு தற்செயல் நிகழ்வு . இந்த மாதம் முதல் மற்றும் இரண்டாம் வாரத்தில் வயதின் அடிப்படையிலான மூப்பு பற்றி இரண்டு அறிக்கைகள் வெளிவந்து , பொதுவெளியில் , ஒரு பெரிய விவாதத்தை கிளப்பின !
ஒரு அறிக்கையை வெளியிட்டவர் திபெத்திய ஆன்மீக தலைவரான தலாய் லாமா. மற்றதை கதை வடிவில் சொன்னவர் ஆர் எஸ் எஸ் ஸின் தலைவரான டாக்டர் மோகன் பாகவத்.
இருவருடைய ஆளுமைகளும் , வகிக்கும் பொறுப்புகளும் அவர்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு சேர்த்து விடுகின்றன என்பது இயல்பானதே. எனவே விவாதம் கிளம்பியதும் இயல்பானதே. மோகன் பாகவத்தின் பேச்சு விரைவில் அரசியல் ஆரவாரத்தை கிளப்பி விட்டது. முதலில் இரண்டு பேர்களும் என்ன சொன்னார்கள் என்பதை பார்ப்போம்.
தலாய் லாமா அறிக்கை
ஜூலை 6 தேதி தலாய்லாமா தனது 90 வயதை கொண்டாடினார். அதை ஒட்டி அவருக்கு அடுத்தது யார் என்று ஊகங்கள் கிளம்பின. ஆனால் தலாய்லாமா வயது தொடர்பான கேள்விக்கு , இப்போதைக்கு , முற்றுப்புள்ளி வைத்தார். இன்னும் 30 , 40 ஆண்டுகள் தொடர்ந்து சேவை செய்ய வேண்டுமென அவலோகிதேஸ்வரர் (கருணையே வடிவெடுத்த போதிசத்துவர்) தனக்கு சமிக்கை அளித்ததாக கூறினார். அவலோகிதேஸ்வரர் தீபெத்தில் சென்ரெசிக் என்றும் சீனாவில் குன் யின் என்றும் அறியப்படுகிறார்.
தலாய் லாமாவின் இந்த அறிக்கை அவரது சீடர்கள், ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சீனாவுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை என்பதும் இயல்பானதே. சீனாவுக்கு உறுத்தலாக இருப்பவர் (14 வது) தலாய் லாமா. அவர் இன்னும் நீண்ட காலம் வாழ்வார் என்பது அவர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.
மோகன் பாகவத் சொன்னது
வயது பற்றிய இரண்டாவது சம்பவம் சுவாரஸ்யமானது. ஆர்எஸ்எஸ் ஸின் தலைவர்களில் ஒருவரான மோரோபந்த் பிங்களே வின் வாழ்க்கையை பற்றிய நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் ஒரு சம்பவத்தை விவரித்தார். ‘ பிருந்தாவனத்தில் அகில பாரத பைடக் (கூட்டம்) நடந்தது. அதில் 75 வயதை அடைந்த மோரோபந்த் பிங்களேவுக்கு மரியாதை செய்யும் விதமாக பொன்னாடை போர்த்தப்பட்டது. ‘
‘ மரியாதையை ஏற்றுக்கொண்ட பிறகு பிங்களே ஜி எனக்கு 75 வயதானதற்காக பொன்னாடை அளித்து கௌரவித்துள்ளீர்கள். இதற்கு பொருள் என்ன என்று எனக்குத் தெரியும். உங்களுக்கு வயசாகிவிட்டது ஒதுங்கி நின்று மற்றவர்கள் பணி செய்ய வழி விடுங்கள் என்பதை உங்களுக்கே உரிய பாணியில் சொல்கிறீர்கள்”, என்று சொன்னார்.’
அரசியல்
பாகவத்தின் பேச்சில் இருந்த இந்த விஷயத்தை எதிரணியில் இருப்பவர்கள் உடனே பயன்படுத்திக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் வயதுடன் முடிச்சு போட்டனர். 2025 செப்டம்பர் 17 ல் மோடிக்கு 75 வயதாகும். சுவாரஸ்யம் என்னவென்றால், பிங்களே சம்பவத்தைச் சொன்ன பாகவத்திற்கும் இந்த ஆண்டு செப்டம்பர் 11 தேதி 75 வயதாகிறது.
எந்த விஷயத்தையும் முழுமையாக புரிந்து கொள்ளாதவர்கள் கூட அரசியலில் எதைப்பற்றியும் கருத்து கூறவும், அலசவும், விளக்கம் அளிக்கவும் முடிகிறது. மோரோபந்த் பிங்களேவைப் பற்றி பாகவத் கூறியது நிஜத்தில் நடந்த சிறிய சம்பவம். அது , நூல் வெளியீட்டு விழா சூழ்நிலையில் பொருத்தத்திற்காக சொல்லப்பட்டது. அதற்கும் மோடியின் வயதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மோடி சொன்னது
ஏனெனில் மோடி , பாகவத் இருவருமே மிகவும் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார்கள். இளைஞர்கள் கூட போட்டியிட முடியாத அளவுக்கு அவர்களது ஈடுபாடும் செயலூக்கமும் உள்ளது. அதுமட்டுமல்ல , நான் ஒரு பக்கிரி (துறவி) . நேரம் வரும்போது என்னுடைய பையை மாட்டிக் கொண்டு கிளம்பி விடுவேன் ! என்று , மோடி ஏற்கனவே கூறியுள்ளார்.
புகழ் பெற்ற உருது கவிதையின் வரி இப்படி சொல்கிறது.
‘ உமர் கா பந்தன் தோ தஸ்தூர் ஏ ஜஹான் ஹே ,
மெகசூஸ் நா காரேன் தோ படுத்தி கஹான் ஹேய் ? ‘
( வயது என்பது ஒரு தளை என்பதை புரிந்து கொண்டால் சரி. உணரவில்லை என்றால் , அதனால் என்ன ? – மொழிபெயர்ப்பாளர் )
வாழ்நாள் : அன்றும் இன்றும்
இப்போது நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. கடந்த 75 ஆண்டு காலத்தில் இந்தியர்களின் வாழ்நாள் இரண்டு மடங்காகி உள்ளது. 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியர்களின் சராசரி வயது 32 ஆண்டுகள். சிலர் நீண்ட காலம் வாழ்ந்திருக்கலாம். ஆனால் பெருவாரியான இந்தியர்கள் இளம் வயதிலேயே இறந்து விட்டனர். இந்தியா முழுவதும் பரவலாக இருந்த வறுமை , பசி , நோய் ஆகியவற்றால் அப்போது சராசரி வயது 32 ஆக இருந்தது.
இன்று இந்தியர்களின் சராசரி வயது 72. இன்றும் கூட ஒரு முழுமையான உணவுக்காக போராடும் நிலையில் இருப்பவர்கள் பலர் இந்தியாவில் இருக்கிறார்கள். நான் அவர்களைப் பற்றி பேசவில்லை. நான் சொல்ல வந்தது பெரும்பாலோருக்கு இன்று வாழ்க்கை தரம் உயர்ந்து விட்டது. நல்ல உணவு, பழங்கள், ஆரோக்கியம் , மருந்துகள் கிடைக்கின்றன.
சாதனையாளர்கள் வயது
அதேபோல் , நடப்பதற்கே பிறர் உதவி தேவைப்படுபவர்களை பற்றி நான் சொல்லவில்லை. 75 அல்லது 80 வயதானாலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாக இருப்பவர்களை பற்றி பேசுகிறேன். சரத் பவார் அதற்கு சரியான உதாரணம். அவருக்கு வயது 84 க்கு மேலாகிறது. ஆனாலும் இளைஞரை போல் சுறுசுறுப்பாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறார்.
90 வயதான பிறகும் கூட ராம் ஜெத்மலானி வழக்காட நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்தார். இறப்பதற்கு சிறிது காலம் முன்பு வரை , 92 வயதிலும் டாக்டர் மன்மோகன் சிங் செயல்பட்டுக் கொண்டிருந்தார். இ எம் எஸ் நம்பூதிரிபாட் (88) , கருணாநிதி (84), ஜே ஆர் டி டாட்டா (89), கன்ஷியாம் தாஸ் பிர்லா (89), ரத்தன் டாட்டா (86), நானி பல்கிவாலா (82), சோலி சொராப்ஜி (91) ஆகியோரை இந்த பட்டியலில் சேர்க்கலாம். ஜோதி பாசு 85 வயதாகும் வரையில் மேற்கு வங்கத்தின் முதல்வராக இருந்தார். தனக்கு வயதாகி விட்டதால் எந்த பதவியும் கொடுக்க வேண்டாமென இடதுசாரி தலைவரான ஹரிகிஷன் சிங் சொல்லிவிட்டார்.
வயதானாலும் சாதிப்பவர்கள்
ஆனால் வயது மூப்பு என்பது என்னை பொருத்த வரையில் உண்மையில் ஒரு அனுபவ சுரங்கம் என்று தான் சொல்லுவேன். எடுத்துக்காட்டாக அமிதாப்பச்சன். மகத்தான வேலைகளை அவர் செய்கிறார் !. இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் உள்ள காடுகளுக்கு புகைப்படம் எடுக்க வஹிதா ரஹ்மான் பயணிக்கிறார். ஹேமமாலினி இப்போதும் கூட மேடையில் துர்கா நடனத்தை நிகழ்த்துகிறார். சோனியா காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும் இப்போதும் காங்கிரஸ் கட்சியை வழிநடத்துகிறார்கள். டாக்டர் பாரூக் உத்வாடியா (93) – பத்மபூஷண் விருதாளர் , டாக்டர் பீம் சிங்கால் (92) – பத்மஸ்ரீ விருதாளர் இன்றும் சுறுசுறுப்பாக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் , சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பணி ஓய்வு பெறும் வயது என்பதே இல்லை. ஒன்பது ஆண்டு காலத்திற்கு அவர்கள் பணியமத்தப்படுவார்கள். அதன் பிறகு அவர்கள் வயதை பொருட்படுத்தாமல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
செயலில் இளமை
இளம் சமுதாயத்தினருக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதும் முக்கியமான விஷயம்தான். அதனால்தான், அனுபவத்தினால் வரக்கூடிய ஞானமும் புதிய சக்திமிக்க இளமையும் இணைவதுதான் வெற்றிக்கான உண்மையான வழி, என்று நான் அடிக்கடி கூறுகிறேன். வயதைப் பற்றிய இரண்டு வரிகள் என் நினைவுக்கு வருகின்றன.
உமர் கா தூ தமசா நா தோக்கா,
தகாசா டூ கூச் அவுர் ஹய்.
சான் – இ – அயினா ஹய் உமர்,
மேரி காபிலியத் அபி தேக்,
அனுபவ் மேரி குத்தாரி ஹய்.
( என்னுடைய வயதை பார்க்காதே. இனிதான் வேற கதையே இருக்கிறது. என் வயது எல்லோருக்கும் தெரிகிறது. என் திறமையை பார். செயல்களே என்னுடைய வெளிப்பாடு. – மொழிபெயர்ப்பாளர்)
நன்றி : டெய்லி கார்டியன் , 18-7-2025
*ஆசிரியர் – முன்னாள் காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர், லோக்மத் மீடியாவின் சேர்மன் ( ஆசிரியர் குழுவின் தலைவர்)





