
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்
சனாதன தர்மம், எல்லா உயிரினங்களின் நலனையும் கோரும் இயல்பு கொண்டது. அனைத்து உயிர்களிடமும் கருணையோடு இருக்கவேண்டும் என்று எல்லா நூல்களிலும் உபதேசிக்கிறது. எந்த ஒரு பிராணியையும் துன்புறுத்தக் கூடாது என்பது சனாதன தர்மத்தின் கொள்கை.
ஆனால் அண்மைக் காலமாக இமயம் முதல் குமரி வரை இதுவரை என்றுமே காணாத அளவில் ஒவ்வொரு தெருவிலும், பார்க்கிலும் நாய்களின் தொல்லை அளவுக்கு மீறிப் பெருகியுள்ளது. கடந்த காலத்தில் அவற்றுக்குக் கட்டுப்பாடு இருந்தது. ஆனால் ஜீவகாருண்ய சங்கங்களின் அழுத்தம் காரணமாகத் தெருநாய்களை இஷ்டத்திற்குத் திரியவிடுவது நடக்கிறது.
கார்களில் பயணிப்பவர்களைத் தவிர பிறர் அனைவருமே தெரு நாய்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடிவதில்லை. பிறர் துன்பம் அறியாமல் கார்களில் சுற்றும் பணக்காரர்களே போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு இந்தத் தொல்லையின் அனுபவம் இல்லை. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நீதி மன்றத்தின் மீதும் அரசாங்கத்தின் மீதும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த சம்பவங்கள் சிறிது காலத்திற்கு முன் தலைநகர் டெல்லியில் நடந்தது.
நாய் ஆர்வலர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவரவர் விருப்பம் அவரவருடையது. அவை சரியா தவறா என்று வாதிடுவது அனாவசியம். அவர்கள் தத்தம் வீடுகளில் எல்லாவித நாய் இனங்களையும் வளர்த்துக் கொண்டும், ‘டாக் பேரெண்டிங், டாக் லவிங்’ போன்ற வார்த்தை ஜாலங்களைப் பயன்படுத்தியும் அவற்றின் மீது பாசத்தை வளர்த்துக் கொள்ளலாம். அவை அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். வெளியில் வந்தாலும் அவர்களின் கைக் கயிற்றுக்குக் கட்டுப்பட்டு இருக்கும்.
ஆனால் தெருநாய்களின் விஷயத்தில் அவர்களுடைய தலையீடு தேவையில்லாதது. அனாவசியமானது. அவை தாக்குவதால் பலர் உயிரிழந்துள்ளனர். வெளியில் நடைப்பயிற்சி செல்வதற்குக் கூட அஞ்ச வேண்டி உள்ளது.
காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை தீர்த்தங்களிலும், க்ஷேத்திரங்களிலும் தெருக்களிலும் வீடுகளின் முன்னாலும் கூட்டம் கூட்டமாக நாய்கள் சூழ்ந்து வளைய வருகின்றன. பாதசாரிகள் மட்டுமின்றி, இரு சக்கர வாகன ஓட்டிகளும் இவற்றின் தாக்குதலில் இருந்து தப்ப முடியாமல் திண்டாடுகிறார்கள்.
அவற்றைத் துன்புறுத்தாமல், கொல்லாமல் தகுந்த கட்டுப்பாட்டோடு மக்கள் இருப்பிடங்களுக்கு தொலைவாக இருத்தும் வழிவகைகள் உள்ளன. அவற்றை அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்.
நாய் ஆர்வலர்கள் அதிகமாக வழிபடும் வெளிநாடுகளை ஒருமுறை நன்றாக கவனித்தால் புரியும். அங்கு எங்குமே தெருநாய்களின் தொல்லை இல்லை. வளர்ப்பு நாய்களுக்கும் சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கிறார்கள். தெருக்களில், பார்க்குகளில் அவற்றை அழைத்துச் செல்லும்போது அவற்றைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள். அவற்றின் கழிவுகளைத் தம் கைகளால் அள்ளி அவற்றுக்கென்று உள்ள குப்பைத்தொட்டிகளில் போடுவார்கள். நாய் ஆர்வலர்கள் தாம் அதிகம் போற்றும் வெளிநாட்டு கலாசாரத்தில் இருந்து இந்த ஒழுக்க நெறிகளைக் கற்றுக் கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யம். அவர்கள் வளர்க்கும் நாய்களின் மீது ஏதாவது தடைகளோ, கட்டுப்பாடுகளோ விதிக்கும் பட்சத்தில் போராட்டம் செய்தால் அதில் பொருள் இருக்கும். ஆனால் அவர்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத தெருநாய்களின் விஷயத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தடுப்பது அர்த்தமற்ற செயல்.
சனாதன தர்மத்தில் எல்லா உயிரினங்களிடமும் அஹிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நியதி. அதே நேரத்தில் அவற்றை எந்த எல்லையில் வைத்து, எப்படிக் காக்க வேண்டும் என்றும் நியமங்கள் உள்ளன.
“ஸ்வப்யஸ்ச ஸ்வபதிப்யஸ்ச வோ நம:” – “நாய்களின் வடிவிலும், நாய் வளர்ப்பவர்களின் வடிவிலும் இருக்கும் ஈஸ்வரனின் விபூதி (மகிமை)யை வணங்குகிறேன்” என்று வழிபடும் பண்பாடு நமக்குள்ளது.
காலபைரவரின் சந்நிதியில் (குர்க்குர) நாய்களின் கணங்கள் உள்ளன. வேதங்களே வேட்டை நாய்களாக, ‘அதி கிராத’ வடிவத்தில் இருக்கும் சிவனிடமும், தத்தாத்ரேயரிடமும் இருப்பதாக சாஸ்திரம் தெரிவிக்கிறது. மகாபாரதம் தேவ ஜாதியைச் சேர்ந்த ‘சாரமேயம்’ என்ற நாயோடுதான் தொடங்குகிறது. இறுதியில் தர்மதேவதை நாய் வடிவத்தில் தர்மபுத்திரனைத் தொடர்ந்து செல்கிறது. தன்னைத் தொடர்ந்து வரும் நாய்க்கும் சுவர்க்கத்தில் நுழைய அனுமதி வேண்டும் என்று யுதிஷ்டிரன் வேண்டுகிறான்.
தேவ ஜாதி நாய்களுடைய தாயின் பெயர் ‘சரமா”. அவளுடைய புதல்வர்கள் என்பதால் நாய்களுக்கு ‘சாரமேயம்’ என்று பெயர். அப்படிப்பட்ட நாய்களில் பல இனங்கள் உள்ளன. நாய்கள் விசுவாசத்திற்கும், பாதுகாப்புக்கும் குறியீடாக விளங்குகின்றன. தேசப் பாதுகாப்பு அமைப்பில் தனிப்பட்ட பயிற்சி பெற்ற நாய்கள் உள்ளன.
ஆனால் எந்த விலங்கானாலும் அதற்கென்று குறிப்பிட்ட எல்லையும், முறையான கட்டுப்பாடும் தேவை. சரணாலயங்களில் புலிகளையும் சிங்கங்களையும் வைத்துக் காப்பாற்றலாம். ஆனால் ஜீவகாருண்யம் என்ற பெயரில் தெருக்களில் திரிய விடமாட்டோம் அல்லவா? பாம்பைக் கண்டவுடன் தடியால் அடித்துக் கொல்கிறீர்களே, அப்போது உங்கள் ஜீவகாருண்யம் எங்கே போனது? மனிதர்களின் நடமாட்டத்திற்குத் தடை ஏற்படுத்தி, உயிரைப் பறிப்பதற்குத் துணிந்த நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதும், அவற்றைத் தொலைவாக எங்காவது விடுத்து வருவதும் செய்யலாம் அல்லவா?
இன்னொருபுறம் தினமும் லட்சக்கணக்கான பசுமாடுகளை வதைமுகாம்களுக்கு விரட்டுகிறார்களே, இந்த ஜீவகாருண்ய முழக்கங்கள் என்னவாயின? சத்தத்தையே காணோமே. உங்கள் இரக்கம் எங்கே போனது?
சில இடங்களில் அநாதைகளைப் போல சாலைகளின் திரியும் பசுக்கள் யாருக்கும் எந்தவித ஆபத்தும் விளைவிப்பதில்லை. அதோடு அவை குப்பைத்தொட்டிகளில் பிளாஸ்டிக் பேப்பர்களைத் தின்று அவஸ்தைக்கு ஆளாகின்றன. அவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு பசுக்களை சாலையின் விடும் பசு உரிமையாளர்களை எச்சரித்துத் தண்டிக்க வேண்டும். ஆதரவற்ற பசுக்களை கோசாலைகளுக்கு அனுப்ப வேண்டும்.
சாலைகளில் குப்பைகளை அகற்றுவது, விலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றைச் செய்யாவிட்டால் இனி உள்ளூர் நிர்வாக அமைப்புகள் இருந்து என்ன பயன்? ஒரு இடத்தில் பன்றிகளின் தாக்குதலால் சிலர் மரணித்தனர். அங்கு வந்த அதிகாரிகள் அவற்றின் உரிமையாளர்களைக் கண்டித்து, எச்சரித்த போது அவர்கள் அதை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினார்கள். அதற்கு பதிலாக வேண்டுமென்றே முள்ளம்பன்றிகளை சாலைகளில் விடுத்தார்கள் என்று ஒரு செய்தி வந்தது.
இவ்வாறு நாய்களோடும் பன்றிகளோடும் துன்புறும் பொதுமக்கள் எதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ளார்கள். மேலும் பெரிய வாகனங்களிலும் கார்களிலும் அடிபட்டு பல நாய்கள் இறப்பதும் நேர்கிறது.
சிலருடைய விவேகமற்ற போராட்டங்களுக்கு தலை குனியும் மாநில அரசுகளும் நீதிமன்றங்களும் துணிந்து கட்டப்பாடு விதிக்காவிட்டால் சமுதாயத்தில் சாமானிய வாழ்க்கை கொடுமையாக முடியும். ஒவ்வொரு மாநில அசாங்கமும் உள்ளூர் அமைப்புகளின் மூலம் சரியான விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கக் வேண்டிய தேவை உள்ளது.
சாக்கடைகள், அழுக்கு நீர்ப் பள்ளங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை நகரங்கள் முதல் கிராமங்கள் வரை தென்படுகின்றன. அவற்றோடு கூட தெரு நாய்களின் நடமாட்டம் வேறு. இவை அரசாங்கத்தின் அலட்சியத்திற்கும், பொதுமக்களின் எதிர்வினையாற்றாத தன்மைக்கும் சான்றுகள்.
(தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், அக்டோபர் 2025)





