
இந்தியா- மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளின் முதல் டெஸ்ட் – இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய கிரிக்கெட் அணியுடன் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.
இந்த சுற்றுப்பயணம் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் 2025–2027 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும்.
ஏப்ரல் 2025 இல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2025–26 உள்நாட்டு சர்வதேச சீசனின் ஒரு பகுதியாக, சுற்றுப்பயணத்திற்கான போட்டி அட்டவணையை உறுதிப்படுத்தியது.
முதல் டெஸ்ட், அகமதாபாத்தில், 02 அக்டோபர் முதல் 6 அக்டோபர் வரை நடக்க உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் அக்டோபர் 10 முதல் 14 வரை நடக்க உள்ளது.
இரண்டாவது டெஸ்ட் முதலில் கொல்கொத்தாவில் நடக்கவிருந்தது. ஆனால் பின்னர் அது டெல்லிக்கு மாற்றியமைக்கப்பட்டது.
இந்திய அணியில் ஷுப்மன் கில் அணித் தலைவராக இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா துணை அணித் தலைவராக இருக்கிறார். அணியில் இடம்பெறும் மற்ற வீரர்கள் – (1) ஜஸ்பிரித் பும்ரா, (2) யஷஸ்வி ஜெய்ஸ்வால், (3) நாராயண் ஜெகதீசன் (விக்கட் கீப்பர்), (4) துருவ் ஜூரல் (விக்கட் கீப்பர்), (5) பிரசித் கிருஷ்ணா, (6) நிதிஷ் குமார் ரெட்டி, (7) தேவ்தட் படிக்கல், (8) அக்சர் படேல், (9) கேஎல் ராகுல், (10) முகமது சிராஜ், (11) சாய் சுதர்சன் (12) வாஷிங்டன் சுந்தர், (13) குல்தீப் யாதவ்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அணித்தலைவராக ரோஸ்டன் சேஸ் இருக்கிறார். அணியின் துணைத்தலைவராக ஜோமல் வாரிக்கன் இருக்கிறார். அணியின் பிற வீரர்கள் – (1) கெவ்லான் ஆண்டர்சன், (2) அலிக் அதனேஸ், (3) ஜெடியா பிளேட்ஸ், (4) ஜான் கேம்பல், (5) டகேனரைன் சந்தர்பால் (6) ஜஸ்டின் கிரீவ்ஸ் (7) ஷாய் ஹோப் (விக்கட் கீப்பர்), (8) டெவின் இம்லாக் (விக்கட் கீப்பர்), (9) அல்சாரி ஜோசப் (இவர் வரவில்லை; இவருக்குப் பதிலாக ஜேதையா பிளேட்ஸ் வந்திருக்கிறார்) (10) ஷமர் ஜோசப் (இவரும் வரவில்லை; இவருக்குப் பதிலாக ஜொஹன் லைனே வந்திருக்கிறார்), (11) பிராண்டன் கிங், (12) ஜோஹான் லேன், (13) ஆண்டர்சன் பிலிப், (14) காரி பியர், (15) ஜெய்டன் சீல்ஸ்.
இரு தினங்களுக்கு முன் தொடங்கிய முதல் டெஸ்டில் பூவா-தலையா வென்ற மே.இ. தீவுகள் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. அனுபவமில்லாத அணி என்பதால் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களை அந்த அணியின் மட்டையாளர்களால் சமாளிக்க முடியவில்லை.
முதல் பத்து ஓவர்களுக்குள் அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜான் கேம்ப்பல் (8 ரன்), அணித்தலைவர் தேஜ்நாரயண் சந்த்ரபால் (பூஜ்யம் ரன்), ப்ராண்டன் கிங் (12 ரன்), அலிக் அதான்சே (13 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்து அணி 4 விக்கட் இழப்பிற்கு 42 ரன் எடுத்திருந்தது.
அதன் பின்னர் ரோஸ்டன் சேஸ் (24 ரன்), ஷாய் ஹோப் (26 ரன்), ஜஸ்டின் கிரீவ்ஸ் (32 ரன்) அணிக்கு குறிப்பிடத்தக்க அளவில் ரன் சேர்த்தார்கள். அதன் பின்னர் கறி பியரி (11 ரன்), ஜோமல் வாரிகன் (1 ரன்), ஜேய்டன் சீல்ஸ் (ஆட்டமிழக்காமல் 6 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார்கள். அதனால் மே.இ. தீவுகள் அணி 44.1 ஓவர்களில் 162 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியில் சிராஜ் 4 விக்கட்டுகளையும் பும்ரா 3 விக்கட்டுகளையும் குல்தீப் யாதவ் 2 விக்கட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி 38 ஓவர்கள் விளையாடியது 2 விக்கட் இழப்பிற்கு 121 ரன் எடுத்தது. ஜெய்ஸ்வால் 36 ரன்களிலும் சாய் சுதர்ஷன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கே.ஏல் ராகுல் 52 ரன்னிலும் கில் 18 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பிறகு நேற்று இரண்டாவது நாள். இந்திய அணியின் மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினர். ஷுப்மன் கில் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் கே.எல். ராகுல் தனது சதத்தைப் பூர்த்தி செய்த பின் 100 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆடவந்த துருவ் ஜுரல் 125 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆட்டநேர இறுதியில் ஜதேஜா 104 ரன்னிலும் வாஷிங்டன் சுந்தர் 9 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 286 ரன்கள் அதிகமாகப் பெற்றிருந்தது. இந்திய அணியில் மூன்று வீரர்கள் சதமடித்திருந்தனர்.
5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் சேர்த்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸ்சை முடித்துக் கொள்வதாக இந்திய அணி தெரிவித்தது. இதைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிசை ஆடத் தொடங்கியது.
இரண்டாவது இன்னிங்க்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் தொடக்கம் முதலே விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்து வந்தன. அனுபவ வீரர்களான சந்திர பால், காம்பல் ஆகியோர் இரட்டை இலக்கங்களை தாண்டும் முன்பே ஆட்டம் இழந்தனர். கிங், சேஸ் ஆகியோர் அவர்களின் வழியில் உடனே ஆட்டம் இழந்து வெளியேறினர். அதனால் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 38 ரன். சேர்த்தார்.
நடு வரிசையில் கிரீவ்ஸ் 25 ரன்கள் சேர்த்து சற்று நம்பிக்கை கொடுத்தார். டெயில் என்டர்கள் ஓரளவு விளையாடி ரன்கள் சேர்த்ததால் அந்த அணி 100 ரன்கள் கடந்தது. இறுதியில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி தோல்வியை தழுவியது.
இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட், சிராஜ் 3 ஜாதவ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்
இதனால் இந்திய அணி இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றது.





