
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர் கலைமகள்
கொஞ்சம் சட்டம் சம்பந்தமான விஷயங்களைச் சிந்திப்போம்!
அரசியலமைப்பு தினம் ‘சம்விதான் நிவாஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், நமது நாட்டில் ஆண்டுதோறும் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 அன்று இந்திய அரசியல் நிர்ணய சபை இந்திய அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்டது. இது 26 ஜனவரி 1950 முதல் நடைமுறைக்கு வந்தது.
உலகில் நீண்ட அரசியல் சாசனமான இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்ற இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் ஆயிற்று. இதற்கு செலவான மொத்த தொகை ரூபாய் 64 லட்சமாகும்.
அரசியலமைப்பு சட்ட சாசனக் குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கார் நியமிக்கப்படார். சிறந்த அரசியலமைப்பு நிபுணரான டாக்டர் அம்பேத்கர், சுமார் 60 நாடுகளின் அரசியலமைப்புகளை ஆய்வு செய்த பின்னர் அரசியல் நிர்ணயச் சட்டத்தை உருவாக்கினுர். “இந்திய அரசியலமைப்பின் தந்தை” என்று இவர் அழைக்கப்படுகிறார்.
1949-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை கௌரவிக்கும் வகையில், 2015-ஆம் ஆண்டு, நவம்பர் 26 ஆம் நாளை அரசியலமைப்பு தினமாக (சம்விதான் திவாஸ்) கொண்டாட வேண்டும் என்று பாரதப் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு முறைப்படி அறிவித்ததை ஒட்டி இந்த நாளைக் கொண்டாடி வருகிறோம்!
அரசியலமைப்புச் சட்டம் என்பது ஒரு நாட்டின் மிக உயர்ந்த சட்டமாகும். இது அரசாங்கம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான விதிகள், கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை வரையறுக்கிறது. இது குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் கடமைகளையும் நிறுவுகிறது மற்றும் அரசாங்கத்திற்கும் அதன் குடிமக்களுக்கும் இடையிலான உறவை நிர்வகிக்கிறது. இந்திய அரசியல் சட்ட சாசனத்தை திறமை மிகுந்த சட்ட வல்லுனர்கள் கொண்ட குழு தயாரித்தது!
சட்டத்தை உருவாக்கிய குழுவின் முக்கிய உறுப்பினர்கள்:
ராஜேந்திர பிரசாத் -அரசியலமைப்பு சபையின் தலைவர்
பெனகல் நர்சிங் ராவ் – அரசியலமைப்பு ஆலோசகர்
பண்டிட் ஜவஹர்லால் நேரு – அரசியலமைப்பை ஆய்வு செய்வதற்கான சிறப்புக் குழுவின் தலைவர்
வல்லபாய் படேல் -அடிப்படை உரிமைகள் ஆலோசனைக் குழுவின் தலைவர்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் – வரைவுக் குழுவின் தலைவர்
சில முக்கிய உறுப்பினர்கள்:
அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
மைசூர் திவான் சர் என். மாதவ ராவ்
பதீப் நாராயண் சிங்.
கோபிநாத் போர்டோலாய்
சியாமா பிரசாத் முகர்ஜி
முகமது சாதுல்லா
பி. சுப்பராயன்
கைலாஷ் நாத் கட்ஜு
என். கோபாலசாமி அய்யங்கார்
திருவெள்ளூர் தட்டாய் கிருஷ்ணமாச்சாரி
ராமேஷ்வர் பிரசாத் சின்ஹா
துர்காபாய் தேஷ்முக்
கே.எம். முன்ஷி
எம். முகமது இஸ்மாயில்
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
ஜான் மத்தாய்
பிரதாப் சிங் கைரோன்
சிதம்பரம் சுப்பிரமணியம்
ஜெய்பால் சிங் முண்டா மற்றும் பலர்
சட்ட மேதை அம்பேத்கார் தயாரித்த அரசியல் நிர்ணயச் சட்டத்தை கைப்பட எழுதியவர் பிரேம் பிஹாரி நரேன் ரைசாடா.அவர் சட்டத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் அழகாக கையால் ஆங்கிலத்தில் எழுதினார் எழுதினார். இதற்காக அவர் எந்தவிதமான சன்மானத் தொகையையும் பெற்றுக் கொள்ளவில்லை!
பிரேம் பெஹாரி நரேன் ரைசாடா ஆறு மாதத்தில் 395 கட்டுரைகள், 8 அட்டவணைகள் மற்றும் ஒரு முன்னுரையைக் கொண்ட ஆவணத்தைத் தனது தனித்துவமான சாய்ந்த எழுத்துப் பாணியில் எழுதினார்.
அரசியலமைப்பை கையால் எழுத பிரேம் பெஹாரி பயன்படுத்தியது உயர்தர தாள் ஆகும். அரசியலமைப்பின் அசல் கையெழுத்துப் பிரதி ஆயிரம் ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட 16X22 அங்குல அளவுள்ள காகிதத் தாள்களில் எழுதப்பட்டது. முடிக்கப்பட்ட கையெழுத்துப் பிரதி 251 பக்கங்களைக் கொண்டிருந்தது மற்றும் 3.75 கிலோ எடை கொண்டது. 1,45,000 வார்த்தைகள் கொண்டது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்!!





