
ராம பிரான், சிவ பெருமானை (மணல் லிங்கத்தை) பூஜை செய்தார்.
விஷ்ணுவின் பரம பக்தர் (முதலாவது பக்தர்) சிவபெருமானே.
இந்த இரண்டும் சைவ, வைணவ தரப்புகளின் பரஸ்பர மதிப்பு மரியாதை, நல்லிணக்கம் ஆகியவற்றின் உதாரணமாகக் கொள்ளப்படவேண்டியது. மோதலுக்கான விஷயமாக அல்ல.
ஆனால், ஸ்ரீ ராம பிரான் பிரதான தெய்வமாக இருக்கும் ஆலயத்தில் சிவபெருமானை அவர் பூஜை செய்த சிலை இருப்பது சரியல்ல. அதுபோல் சிவன் பிரதானமாக இருக்கும் ஆலயத்தில் அவர் ஸ்ரீராமரின் பக்தர் என்ற சிலை இருக்கக்கூடாது.
இரு தெய்வங்களுக்கும் சம முக்கியத்துவத்துடன் சன்னதிகள் இருக்கும் ஆலயங்களில் (உதா : சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயம்) அப்படியான சிலைகள் இடம்பெறலாம். அதுவும் அங்கு முன்பே இருந்தால் மட்டுமே. புதிய பிரதிஷ்டைகள் புதிய ஆலயங்களில்தான் நடக்கவேண்டும்.
திருவள்ளுவர் அரசாட்சியின் பெருமையைப் பேசும்போது அதுவே உலகில் ஆகச் சிறந்தது என்று 10 குறள்களிலும் சொல்வார். துறவின் பெருமையைச் சொல்லும்போது அதுவே ஆகச் சிறந்த அறம் என்று அந்தப் பத்து குறள்களிலும் சொல்வார். இரண்டுமே ஒரே திருக்குறள் நூலில் இருக்கும். ஆனால் ஒரே அத்தியாயத்தில் இரண்டும் கலந்து இருக்காது. இருக்கக்கூடாது.
உலகில் ஒரே தெய்வத்தை வணங்குபவர்களுக்கிடையேகூட இந்த இடைவெளி இருப்பது மிகவும் இயல்பானதுதான்.
சைவ மரபுக்குள்ளும் அம்மையா, அப்பனா என்ற இடைவெளி உண்டு. சிதம்பரமா… திருவண்ணாமலையா என்று கூட இருக்கக்கூடும்.
வைணவத்தில் தென்கலை, வடகலை என்று இரண்டு சம்பிரதாயங்கள் உண்டு.
இஸ்லாமில் அபூபக்கர் வழியிலான ஒரு பிரிவு, ஷியாகத் அலி வழியிலான ஒரு பிரிவு என்று இரண்டு உண்டு. இரண்டுக்கும் அல்லாவே ஏக இறைவன். என்றாலும் இந்த இரு பிரிவினரும் தமக்குள் பெண் கொடுத்து பெண் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஒரே மசூதியில் தொழமாட்டார்கள். இன்னொருவரை இருவரும் பரஸ்பரம் காஃபிர் என்று வெறுக்கும் அளவுக்கு இன்னொருவரின் மசூதியில் வெடிகுண்டு வைத்துக் கொல்லும் அளவுக்கு வெறியுடன் நடந்துகொண்டிருக்கிறார்கள். இன்றும் அப்படி நடக்கின்றன. ஈரான் –ஈராக் என இரு தேசங்களுடைய மோதல் என்றில்லை; பாகிஸ்தானுக்குள்ளேயே ஷியா – சன்னி மோதல் மிக மோசமாகக் கொடூரமாக இன்றும் நடந்துவருகின்றன.
கிறிஸ்தவத்திலும் இந்த முரண் உண்டு. ரோமன் கத்தோலிக்கர் அதிகமாக இருந்தால் ப்ராட்டஸ்டண்ட்களைக் கொன்று குவிப்பார்கள். ப்ராட்டஸ்டன்ட்கள் அதிகமாக இருந்தால் ரோமன் கத்தோலிக்கர்களைக் கொன்று குவிப்பார்கள். உலகின் மிக மிகக் கொடிய மத வன்முறையான இன்க்யிஷிஷனில் யூதர்கள், இந்துக்கள் போன்ற பிற மதத்தினர் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட அதே வெறியுடன் சக கிறிஸ்தவ பிரிவினர் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட்களில்கூட இந்த பிரிவுகள் உண்டு. அதிகாரத்தில் இருக்கும் கும்பல் பிற கம்யூனிஸ்ட்களை பூர்ஷ்வா என்றும் எதிர் புரட்சியாளர்கள் என்றும் ஜனநாயகத் தொழுவத்து எருமைகள் என்றும் எதிர்த்தும் ஒடுக்கியும் கொன்றும் வந்திருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் (லூசு), கம்யூனிஸ்ட் (மெண்டல்) என்ற இரண்டு குழுக்கள் இன்றும் தோளோடு தோள் சேர்ந்து உண்டியல் குலுக்கமாட்டார்கள்.
திராவிட இயக்கக் குழுக்களுக்குள்ளும் எம்.ஜி.ஆர் – கருணாநிதி காலத்தில் இரு தரப்புக்கும் ஒரே அண்ணாவே தலைவர் என்ற போதிலும் இருவருமே கீரியும் பாம்புமாகவே இருந்தனர். ஒரு நாள் இந்தக் கழகம் மேடைபோட்டு அவர்களை வண்டை வண்டையாகத் திட்டினால் மறுநாள் அந்தக் கழகம் அதே இடத்தில் இன்னொரு மேடை போட்டு இவர்களை அசிங்க அசிங்கமாகத் திட்டுவார்கள்.
அம்மாவின் விசுவாசிகளுக்குள் கூட இன்று எத்தனை முரண்கள், மோதல்கள்.
ஜாதியை எடுத்துக்கொண்டால் முக்குலத்தோரில் மூன்று குலத்தினர்… 300 கிளையினர். ஹரிஜனங்களில் 100 குலத்தினர்… ஆயிரம் கிளையினர். நாட்டுக்கோட்டை நகரத்தாருக்குள்ளேயே பல பிரிவுகள்.
தமிழக மன்னர்களில் மூவேந்தர் தொடங்கி 100க்கு மேற்பட்ட குறு நில மன்னர்கள். ஒரே மொழி பேசுபவர் என்ற உணர்வு நம் மகத்தான மன்னர் பரம்பரைகளுக்கு இருந்ததே இல்லை.
ஈழப் போரில்கூட இருபதுக்கு மேற்பட்ட குழுக்கள். எல்லாம் கைவசம் இருக்கும் ஆயுதங்களைக் கொண்டு எதிரியைத் தாக்காமல் தமக்குள்ளே வெட்டிக் கொண்ட கும்பல்கள். அனைவரின் இலக்கும் தமிழர் நலனே.
ஐரோப்பாவில் ஆற்றைத் தாண்டினால் வெட்டு… மலையைத் தாண்டினால் குத்து. ஒரே மதம் என்பது ஒரு உயிரைக்கூடக் காப்பாற்றியிருக்கவில்லை.
ஆஃப்ரிக்க கருமை நிறக் கண்ணன்களுக்கிடையே ஆயிரம் மோதல்கள்.
மானுட அறம், காலத்தைக் கடந்து நிற்கும் காவியங்கள் என்றெல்லாம் பேசும் இலக்கிய உலகிலும் வாள் சண்டைகள் உண்டு. அவருடன் பேசினால் என்னுடன் பேசாதே என்று அறச்சீற்றம் கொள்வார்கள்.
இரண்டு பேர் இருந்தால் நான்கு பார்வைகள் இருக்கும். மனித இயல்பு. எனவே குழுக்கள், அமைப்புகளின் இயல்பும் அதுவாகவே இருக்கும்.
இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் எந்த ஒரு தாய் மக்கள், எந்த இரு சம்பிரதாயங்கள், எந்த இரு தரிசனங்கள் தமக்குள்ளான ஒற்றுமை வேற்றுமைகளை எந்த அளவுக்குப் புரிந்துகொண்டு பரஸ்பரம் தத்தமது எல்லைகளுக்குள் சுமுகமாக வாழ்ந்துவருகிறார்கள் என்று பார்க்கவேண்டும்.
தனித்தன்மை என்றோ இடைவெளி என்றோ எதுவும் இருக்கக்கூடாது… ஒற்றுமை வேண்டும். ஒரே அடையாளம் வேண்டும் என்பதெல்லாம் சரியல்ல.
இந்த தரிசன வேறுபாடுகளினால் முரண்கள், மோதல்கள் வரத்தான் செய்யும்.
நோய்வாய்ப்படாத உடம்பே இருக்க முடியாது. வருமுன் காக்கும் வழிமுறைகள் என்னென்ன இருக்கின்றன. வந்த பின் சீராக்கும் வழிமுறைகள் என்னென்ன இருக்கின்றன..? எத்தனை சீக்கிரம் இயல்பு நிலை திரும்புகிறது. எவ்வளவு மீட்கப்படுகிறது. எவ்வளவு இழக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்த்துத்தான் ஒருமுடிவுக்கு வரமுடியும்.
புயல், மழை, வெள்ளம், வறட்சி இல்லாத வருடம் இருக்கமுடியாது. இவற்றுக்கான தற்காப்பு நடவடிக்கைகள் எவ்வளவு எடுக்கப்பட்டிருக்கிறது. அடைக்கலம் முகாம்கள் எப்படி இருக்கின்றன? நிவாரண வசதிகள் எப்படி இருக்கிறது. இயல்பு நிலை எவ்வளவு சீக்கிரம் திரும்புகிறது. இவற்றைத்தான் கணக்கில் கொள்ளவேண்டும்.
அந்த வகையில் இந்து தர்மமும் அதன் உட்பிரிவுகளும்தான் உலகுக்கு மானுடப் பொதுமையையும் பன்மைத்துவத்தையும் எப்படிப் பராமரிக்கவேண்டும் என்று கற்றுத் தருகிறது.
இந்துக்களுக்குள் மோதலே கூடாது. இந்து என்பதே முதலும் இறுதியும் என்பது உண்மையே. ஆனால் எது இந்துத்தன்மை… யார் இந்து..?
இந்து என்பதே மையம் அழிந்த அமைப்பு. ஒற்றப்படைக்கு எதிரானது. பன்மைத்துவத்தை மதிப்பதே இந்துத்துவத்தின் ஆன்மா. இந்து மதம் ஒரு ஜாதி மரங்கள் வளர்க்கப்படும் தோப்பு அல்ல. தானாக வளர்ந்த, வளரும், தனித்தன்மைகள் நிறைந்த பெரும் காடு.
காட்டுக்குள் மாந்தோப்பு தன்னியல்பாக வளர்ந்து செழித்து நிற்கும். அங்கு சென்று தென்னையை ஊடுபயிராக நடவேண்டாம். கூடாது.
இந்தியாவில் வாழும் தமிழன்… இந்து தர்மத்தில் இருக்கும் இன்ன ஜாதி. இதுவே நம் அடையாளம்.
இந்து மட்டுமே போதும் என்பது இந்தியனாக மட்டுமே இரு என்பது போன்றது. நல்ல தமிழராக இருந்தால்தான் நல்ல இந்தியராக முடியும். நல்ல ஸ்வஜாதிக்காரராக இருந்தால்தான் நல்ல இந்துவாக முடியும்.
துளசிதாசருடைய ராமாயணம் வட இந்தியாவில் புகழ் பெற்றது. ராமேஸ்வரம் வட இந்தியர்களுக்கு மிக மிக முக்கியமான புண்ய ஸ்தலம். இருந்தும் வால்மீகி ராமாயணமே ஸ்ரீராமபிரானின் அயோத்தி ஆலயத்தின் ஆகமங்களுக்கும் அழகுபடுத்தல்களுக்கும் அடிப்படையாக இருக்கவேண்டும்.
நான் தனியாக இருக்க முடிந்தால்தான் நாம் ஒற்றுமையாக இருக்க முடியும்.
- பி.ஆர். மஹாதேவன்





