ஆய்வுகள் என்ற பெயரில், திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் நடைபெற்ற ஊழல்களைத் தெரிந்து கொண்டு கிடுக்கிப் பிடி போட்டு வரும் ஆளுநரை தமிழகத்தை விட்டு விரட்டுவதற்கு, திராவிடக் கட்சிகள் கூட்டு சதியில் இறங்கியுள்ளன என்று தலைமைச் செயலக பணியாளர்கள் மட்டத்தில் பேசிக் கொள்கிறார்கள்!
ஆளுநர் மாளிகை சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் எனத் தோன்றுகிறது. சுதந்திரத்துக்குப் பின்னர், இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல், பொய்யும் புரட்டும் திருட்டும் நிறைந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் திராவிடக் கட்சியினர்.
திராவிட அரசியல் என்பது பொய்யும் புரட்டும் திருட்டும் நிறைந்த அரசியல். தமிழகத்தின் அரசுக் கட்டிலில் அமர்ந்திருப்போர், தங்கள் எண்ணம் ஈடேறும் வரை ஆளுநர் கழுத்தில் ஆளுயர மாலையைப் போட்டுவிட்டுக் காத்திருப்பார்கள். ஆளுநரால் காரியம் ஆகவில்லை என்றாலோ, தங்கள் சுதந்திரமான தில்லுமுல்லுகளுக்கு ஆளுநர் முட்டுக் கட்டை போட்டாலோ, ஊழல்களை சுதந்திரமாகச் செய்ய முடியவில்லை என்றாலோ, ஆளுநர் பதவிக்கே மாலையைப் போட்டு சங்கு ஊதி விடுவார்கள்.
இதற்கு 1991-1996 அதிமுக., ஆட்சியில் ஆரம்பத்தில் ஆளுநராக இருந்த பீஷ்ம நாராயண் சிங் சரியான உதாரணம். ஊழல் ஆட்சியின் உச்ச கட்டம் என்று பெயரெடுத்த அந்த ஐந்து ஆண்டுகளும் ஆளுநர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப்தான். அப்போது எதையும் கண்டுகொள்ளாமல் பெட்டிப் பாம்பாகக் கிடந்த பீஷ்ம நாராயண சிங்குக்குக் கிடைத்த ராஜ மரியாதையையும், அவருக்குப் பிறகு பதவிக்கு வந்த சென்னா ரெட்டிக்கு கிடைத்த அவமரியாதையையும் உதாரணமாகக் காட்டலாம்.
இந்திய முதல்வர்கள், ஆளுநர்கள் வரலாற்றில் ஒரு பெண் முதல்வர், ஒரு ஆண் ஆளுநரைப் பற்றி, மாநில சட்டமன்றத்திலேயே என்னிடம் தகாத முறையில் ஆளுநர் நடந்து கொண்டார் என்று கூறிய பெருமை தமிழ்நாட்டு திராவிட அரசியலுக்கு மட்டுமேயான தனிச்சிறப்பு!
தன் மீது வழக்குத் தொடர அனுமதி கொடுத்த ஆளுநர் சென்னா ரெட்டியை பழி வாங்க 1995இல் தமிழக சட்டமன்றத்தில் ஒரு பெண்ணான என்னிடம் ஆளுநர் தவறாக நடந்து கொண்டார் என்று கூறி தமிழ்நாட்டு திராவிட அரசியலின் புகழை நிலை நிறுத்தினார் ஜெயலலிதா.
அவரின் வழியில் அரசு நடத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் அதிமுக., அம்மா தொண்டர்கள், அவர் காட்டிய வழியிலேயே தொடர்ந்து பணியாற்றக் களமிறங்கியிருக்கிறார்கள் என்பது, தற்போதைய நடவடிக்கைகளில் இருந்து நன்றாகத் தெரிகிறது என்று தெளிவாகச் சொல்கிறார்கள் இந்த விவகாரங்களை உற்று நோக்குபவர்கள்.
ஜெயலலிதா வழியில் ஆளுநரை நேரடியாக எதிர்கொண்டு குறை கூறத் திறன் இல்லாமல், திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் மறைமுகக் கூட்டு வைத்துக் கொண்டு, ஆளும் கட்சியினரே ஆளுநர் விவகாரத்தில் நற்பெயரைக் கெடுக்கும் வேலைகளைச் செய்யக் கூடும் என்று எச்சரிக்கிறார்கள் பொது நோக்கர்கள். தொடர்ந்து அவர்களின் சுதந்திரமான அதிகாரங்களைப் பறித்து கொண்டிருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைப் பழிதீர்க்க என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள் என்றும் எச்சரிக்கிறார்கள்.
இங்கே ஆளும் கட்சிக்கு தாளம் போட்ட பீஷ்ம நாராயண் சிங்கும் பர்னாலாவும்தான் புகழோடு இருக்க முடியும். மாறாக ஆளும் கட்சிக்கு குடைச்சல் கொடுத்தால் சென்னா ரெட்டி மாதிரி பன்வாரி லாலையும் அசிங்கப்படுத்தி அனுப்பி விடுவார்கள். எந்த வித உச்சத்துக்கும் செல்லத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு உதாரணம்தான் அண்மைய சம்பவங்கள்!





