வேலூர் கிருஸ்துவ மருத்துவ கல்லூரி, சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் மருத்துவ படிப்பிற்கான (MBBS) அனுமதியை மறுக்கும் எனத் தெரிகிறது.
நீட் தேர்வு முறையால் தங்களின் கல்லூரியின் குறிக்கோள் மற்றும் கொள்கைகளை அமல்படுத்த முடியாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது நாள் வரை சிறுபான்மை கல்வி நிறுவனம் என்ற அந்தஸ்தில், தகுதி வேண்டும் என்பதோடு தங்கள் கல்லூரியில் பயில்வதற்கு ஏற்ற ‘பொருத்தமும்’ (!) வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையை ‘நீட்’ தேர்வு தகர்ப்பதாக கூறி அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. அந்தப் பொருத்தம் என்பது கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது கண்கூடு.
மிக சாமர்த்தியமாக நீட் தேர்வை வரவேற்பதாக சொல்லும் இந்த கல்லூரி, அதற்கு மேல் தங்கள் கல்லூரியின் சட்ட திட்டங்களுக்கிணங்க, தகுதி மற்றும் பொருத்தத்தின் அடிப்படையில் அனுமதி அளிப்போம் என்று கூறுவது மதவாதத்தின் அப்பட்டமான கோர முகம்.
இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தக் கல்லூரியில் இது நாள் வரை 100 எம் .பி .பி.எஸ். இடங்களில் 85 இடங்கள் கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர்களுக்கே ஒதுக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசு ஒதுக்கீடு இந்த கல்லூரிக்கு இல்லை என்பதும், இந்த கல்லூரியின் தேர்வு முறைக்கேற்பவே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள் என்பதும் கவனிக்கப்படவேண்டிய விவகாரம். இது குறித்த வழக்கில் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டால், மற்ற தனியார் கல்லூரிகளும் தங்களின் விருப்பத்திற்கேற்ப, பொருத்தத்திற்கேற்ப அனுமதி முறையை பின்பற்றுவோம் என்ற நிலை உறுதியாக எழும்.
நீட் தேர்வின் அடிப்படையே கடையனுக்கும் மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே. மேலும், இந்த கல்லூரியில் இது வரை அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் பெரும்பாலோனோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கில மொழி பாடத்திட்டத்தில் படித்தவர்களே அனுமதிக்கப்படுவார்கள் என்பது விதி. அதாவது தமிழ் மொழி பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு இந்த கல்லூரியில் அனுமதியில்லை என்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் என்று, தமிழ், தமிழர்கள் உரிமை, தமிழின பாதுகாவலர்கள், தமிழ் மண்ணின் மைந்தர்கள், முற்போக்குகள், தமிழுக்காக, தமிழனுக்காக உயிரையும் கொடுப்போம் என்று கூக்குரலிட்டு கொண்டிருக்கின்றவர்கள், திராவிட அடைமொழி கொண்ட அரசியல்வாதிகள் பொங்கியெழாது இருப்பது ஏன்?
சி எம்.சி கல்லூரியின் இந்த முடிவிற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
நீட் தேர்வு தர வரிசைப்பட்டியலின் படி, சமூக நீதியின் படி தமிழ் மாணவர்களுக்கு அனுமதி கொடுக்க முடியாத அந்த கல்லூரிக்கு தமிழர்கள் மீது உள்ள வெறுப்பு என்ன?
கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே இடம்; மற்றவர்களுக்கு இல்லை என்ற இந்த கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பார்களா தமிழ் பாதுகாவலர்கள்? எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று அறைகூவல் விடும் தமிழக அரசியல்வாதிகள், ஓட்டுக்காக தமிழர்களுக்கு வேட்டு வைப்பது முறையா?
நாராயணன் திருப்பதி,
ஊடக ஒருங்கிணைப்பாளர் (பாஜக.,)




