அரசியல் சாசனப்படி சபரிமலை கோவிலுக்குள் செல்ல பெண்களுக்கு உரிமை உள்ளது என்று அரசியல் சாசனத்தை நடைமுறைப் படுத்தக் கூடிய, நீதி பரிபாலனம் செய்யக் கூடிய உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பெண்களை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று சபரிமலை தேவஸம் போர்டு கருத்து தெரிவித்துள்ளது.
ஆனால், சபரிமலை விவகாரத்தில் எது அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது, எது மத உரிமைக்கு உட்பட்டது என்ற வேறுபாடுகளைப் பிரித்தறியும் பகுத்தறிவு கூடவா நீதிமன்றத்துக்கு இல்லை?!
சபரிமலையை வணிக ரீதியாக நிர்வகிக்கக் கூடிய தேவஸம் போர்ட் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் நீதி பரிபாலனம் செய்யலாம். வேண்டியர், வேண்டாதவர், அரசியல் ரீதியான பணி இட நியமனம், பக்தர்களின் வசதிகளை செய்து கொடுப்பதில் அல்லது நிர்வகிப்பதில் முறைகேடுகள் போன்ற உலகியல் விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, தனது நீதி மேட்டிமையை நிலைநாட்ட முழு உரிமையும் உள்ளது.
ஆனால், மத நம்பிக்கையின் பாற்பட்டு, ஒரு தலத்தின் சிறப்பு இது என்று வழிவழியாக நிறுவி வரும் ஒரு விஷயத்தில் தலையிடுவது தமக்குத் தகாதது என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதி உணர்ந்திருக்க வேண்டும். இபிகோ.,வின் எந்த சட்டப் பிரிவில், சபரிமலை தர்மசாஸ்தாவின் பிரம்மச்சரிய தத்துவமும் வேண்டுகோளும் விருப்பமும் அடங்கியிருக்கிறது என்பதையும், அதை மீறி அவரது விருப்பத்துக்கு மாறாக தீர்ப்பு சொல்லத் தகுந்த சட்டப் பிரிவை தாம் படித்திருக்கிறோம் என்பதையும் நீதிபதி உணர்ந்திருப்பாரா என்பது சந்தேகமே!
அப்படிப் பார்த்தால், ஒரு வீட்டின் உரிமையாளர் தனது விருப்பத்துக்கு மாறாக தான் விரும்பாத ஒருவரை தன் வீட்டுக்குள் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்றால், நான் அப்படித்தான் அவர் விருப்பத்தை மீறி அவர் வீட்டுக்குள் போவேன் என்று அடம் பிடிக்கும் ஒருவருக்கு அவர் தரப்பில் சார்ந்து சாய்ந்து ஒரு தீர்ப்பை நீதிபதி கொடுக்கலாம்! அது நீதிபதியின் சூழ்நிலைக்குத் தக்க முடிவாக இருக்கக் கூடும்! ஆனால், இது இரு நபர்களுக்கு இடையிலான கருத்து மோதலோ, விவகாரமோ அல்ல! சாட்சிக்கு அழைத்தால் நேரடியாக வர இயலாத ஒரு கடவுள் என்ற நம்பிக்கையின் சாட்சிக்கும், அந்த நம்பிக்கையைக் கேலிக் கூத்தாக்கக் கூடிய ஒரு வறட்டு கௌரவத்தின் அடையாளத்துக்குமான வழக்கு! இதில் எப்படி தாம் தீர்ப்புக்குள் வர முடியும் என்பதையே முதலில் பரிசீலித்து நீதிபதி முடிவு செய்திருக்க வேண்டும்!
ஆயிரத்தெட்டு கோளாறுகள் உள்ள அரசியல் சாசனத்தை மத வழிபாட்டு நம்பிக்கையில் கோத்துவிட்டுள்ள நீதிமன்றம், இதில் தலையிடுவது நல்லதல்ல என்றே நாம் கருதுகிறோம்!
அரசியல் சாசனப்படி அனைத்துப் பணிகளிலும் நடப்பிலும் ஆணும் பெண்ணும் சமம். ஆனால், மதக் கோட்பாடுகளும் நம்பிக்கைகளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இதுதான் கடமை, இதுதான் உரிமை என தனித்தனியே வகுத்து வைத்திருக்கிறது. இந்த வழக்கில் தீர்ப்பு கூற வேண்டுமானால், மத சட்டப் புத்தகமான தர்ம சாஸ்திரத்தை கரைத்துக் குடித்திருக்கிற ஒரு மதப் பழக்கவழங்கங்களை முறையாகக் கடைப்பிடிக்கும் உயர் ஸ்தானத்தில் உள்ள மதத் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும்!
இந்துமத நம்பிக்கை உள்ள பெண்களை, நம்பிக்கையுள்ள ஆண்கள் பார்த்துக் கொள்வார்கள். நம்பிக்கையே இல்லாதவர்களுக்கு சபரிமலை கோவில் மீது அக்கறை என்ன வந்தது?
இந்து மத வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருந்தால், சபரிமலை ஐயப்பன் குறித்த புராணக் கதையிலும், சரித்திரப் பின்னணியிலும் நம்பிக்கை இருந்தாக வேண்டும். நம்பிக்கை என்ற ஒன்று இருந்துவிட்டால், மதக் கோட்பாடுகளுக்கும் கோயில் குறித்த உள ரீதியான நம்பிக்கையிலும் நம்பிக்கை இருந்தாக வேண்டும்!
அப்படி என்றால், ஐயப்பன் பேரில் நம்பிக்கை உள்ள பெண்கள், நிச்சயம் சபரிமலை சுவாமி ஐயப்பன் சொன்னதாகச் சொன்ன புராணத்திலும், ஐயப்பனின் சொற்களிலும் நம்பிக்கை கொண்டவராகத்தான் இருப்பர். அப்படி நம்பிக்கை உள்ள எந்தப் பெண்ணும், ஐயப்பனின் விரதத்தை முறிக்க விருப்பம் கொள்ள மாட்டார்கள். அவ்வாறாக இல்லாமல், இதிலென்ன இருக்கிறது, இது ஒரு பெரிய விஷயமா, அது வெறும் ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் தானே… என்றெல்லாம் எண்ணும் பின் நவீனத்துவ வாதியாக இருந்தால், ஐயப்பன் கோவிலுக்கும் அவர்களுக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது. அவர்கள் ஐயப்பன் சந்நிதி அல்ல, பம்பையைக் கடந்து மலை வாசலை மிதிப்பதற்கே அருகதை அற்றவர்கள்.
ஒரு மதத்தின் நம்பிக்கையின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு உரிமைகள் எங்கிருந்து வந்தது? இந்த ஆலயத்துக்குள் நான் சென்றே ஆக வேண்டும் என்று கருதுவது, மத நம்பிக்கையின் பாற்பட்டு வருவதல்ல…! ஆணவத்தின் பாற்பட்டு வருவது. அதை மதம் ஏற்காது!
மதம் ஏற்காத ஒன்றை சம உரிமை என்று சொல்லி சட்டம் தலையிட்டு உரிமை பெற்றுத்தர இயலாது!
முதலில், சட்டமும் நீதித்துறையும் எதற்கு இருக்கிறது என்ற வரைமுறையை வகுத்துக் கொண்டு செயல்படுதல் நல்லது. ஒரு சாமானியன், ஏதோ ஒரு வழக்கு விஷயமாக நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் நின்றிருப்பவன், அவசரத்துக்கு இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டும் என்று நீதிபதியின் தனிப்பட்ட அறையுடன் இணைந்த கழிப்பறைக்கு செல்ல அனுமதி உண்டா? அல்லது பசியின் காரணத்தால் கையில் உள்ள உணவுப் பொட்டலத்தை நீதிபதி அமர்ந்து உண்ணும் மேசையில் அமர்ந்து உண்ண அனுமதி உண்டா?
நடைமுறைகளை உணர்ந்து பார்த்து, நீதிபதிகள் தலையிட வேண்டும்! வெறும் ஓர் தனிப்பட்ட ஆலயத்தில் போய் வழிபடுவதில்தான் ஆண் பெண் சமத்துவம் வந்துவிட்டது என்று நீதிமன்றம் கருதுகிறதா?
இன்னும் இங்கே சபரிமலையைப் போல் அச்சங்கோவில், ஆரியங்காவு, குழத்துப்புழை என ஐயப்பனின் பிரசித்தி பெற்ற கோயில்களும் உண்டு. இங்கெல்லாம் பெண்கள் அனுமதிக்கப் படுகிறார்கள். ஆனால், கருவறை சந்நிதியின் ஓர் எல்லை வரைதான்! இங்கும் தங்களுக்கு ஆண்களைப் போல் உரிமை வேண்டும் என்று பெண்கள் கூக்குரலிடவில்லை போலும்! அந்த ஓர் எல்லையைக் கடந்து, ஆண்கள் மேல்சட்டையின்றி ஐயப்பனைத் தரிசிக்க வருகின்றனரே! இதையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டு, ஆண் பெண் சமத்துவம் வேண்டும் என்று தீர்ப்பு கூறுமா?




