
புதிய தொடர்… அறிமுகம்:
காந்தியை கொன்றது கோட்ஸே என்பது நமக்குத் தெரியும். சமூகத் தளங்களில் பலரும் கூட,பல்வேறு சந்தர்ப்பங்களில்,கோட்ஸே நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தை பதிவாக வெளியிட்டிருக்கிறார்கள். கோட்ஸேயுடன் நாராயண் ஆப்தேயும் தூக்கிலிடப்பட்டார். விஷ்ணு கார்கரே, மதன்லால் பஹ்வா, கோபால் கோட்ஸே ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சங்கர் கிஸ்டய்யா,தத்தாத்ரேய பர்சுரே ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை அப்பீலில் ரத்து செய்யப்பட்டது. திகம்பர் பாட்கே அப்ரூவர் ஆனார்.
வீர் சாவர்க்கர் விடுதலை செய்யப்பட்டார். மேற்கூறிய அனைவரும் காந்தியை கொல்ல சதி திட்டம் தீட்டினர் என்பது குற்றச்சாட்டு. சதித்திட்டம் ஏதும் இல்லை தான் மட்டுமே காந்தியை கொல்ல முடிவு செய்ததாக கோட்ஸே முன் வைத்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. இவர்களெல்லாம் காந்தி கொலையில் எப்படி சம்பந்தப்பட்டார்கள் எனும் விவரங்களை யோசித்த போதுதான், ‘ காந்தி கொலையும் பின்னணியும் ‘ என்ற தலைப்பிலான இந்தத் தொடருக்கான சிந்தனை உதயமானது!
அன்றைய காலக்கட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களின் கையாலாகாதத்தனம், முஸ்லீம் லீகின் தேசத் துரோக செயல்பாடுகள் ஆகியவற்றை துகில் உரிய நேரிடலாம்… உங்கள் நல்லாதரவை கோருகிறேன்… – யா.சு.கண்ணன்
அம்பாலா நகர மத்திய சிறை.. 1949 ஆம் வருடம் நவம்பர் மாதம் 15ந்தேதி..
அந்த இரு கைதிகள் அன்றுதான் தூக்கிலிடப்பட இருந்தனர்.. ஒருவர் பெயர் நாதுராம் வினாயக் கோட்ஸே இன்னொருவர் நாராயண் தத்தாத்ரேய ஆப்தே.
முந்தைய நாள் அவர்கள் இருவரையும் சந்திக்க அவர்களுடைய உறவினர்களும், நண்பர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஆப்தே, தன்னுடைய மனைவியை தனியே சந்திக்க அரை மணி நேரம் கொடுக்கப்பட்டிருந்தது.ஆப்தேயின் மனைவி தாங்கொணா துயரத்தில் தேம்பித் தேம்பி அழுத வண்ணம் இருந்தார்.
ஆப்தே மனைவியை கண்டித்தார். ‘’ அழுவதற்கு உனக்கு மீதம் வாழ்க்கை முழுவதும் இருக்கிறது.நடைமுறை வாழ்க்கை ஏற்பாடுகளைப் பற்றி பேச அரை மணி நேரம்தான் இருக்கிறது ‘’
அழுகையை நிறுத்தி விட்டு ஆப்தே சொன்னதை கவனமாகக் கேட்கத் தொடங்கினார் அவர் மனைவி.
உறவினர்கள் உண்பதற்காக தின்பண்டங்கள் கொண்டு வந்திருந்தனர்.அந்த இரு கைதிகளின் கடைசி உணவின் பகுதியாக அவை அமைந்தன.
இரவு உணவிற்கு பிறகு,அவர்களோடு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த கோபால் கோட்ஸே,மதன்லால் பாவா,விஷ்ணு கார்கரே ஆகியோர் சந்தித்து பேச அனுமதிக்கப் பட்டனர்.
கோட்ஸே,ஆப்தே அடைக்கப்பட்டிருந்த தனிச் சிறைக்குள் சென்று, அவர்கள் இருவருடனும் பேசிக் கொண்டிருந்தனர்.
அனைவரும் ஒன்றாக பகவத் கீதையின் இரண்டாம்,பதினொன்றாம்,மற்றும் பதினெட்டாம் அத்தியாயங்களின் ஸ்லோகங்களை உரக்கப் படித்தனர்..
இரவு 10 மணியாகி விட்டது. மூவரும் தத்தம் சிறைகளுக்கு திரும்பிச் சென்றனர்.
அடுத்த நாள் விடியற்காலையில்,மீண்டும் கோட்ஸே,ஆப்தே அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்குச் மூவரும் சென்று மேலும் சில கீதை ஸ்லோகங்களைப் படித்தனர்.
அதன் பிறகு ,கோட்ஸேயும்,ஆப்தேயும் குளிக்கச் சென்றனர்.
கோபால் கோட்ஸே நாதுராமிடம் கேட்டார் ‘’ அண்ணா முகச் சவரம் செய்து கொள்கிறீர்களா? ‘’
நாதுராம் தன் தாடையை தடவியப்படி,தம்பியிடம் கூறினார் ‘’ நேற்று இரவுதான் செய்து கொண்டேன்,இப்போது நான் ஒன்றும் விருந்தினர் நிகழ்ச்சி எதற்கும் போக போவதில்லையே ‘’ லேசாகப் புன்னகைத்தார்.
கடைசி பிரிவு உபச்சாரமாக ,சிறை வார்டர்கள் நாதுராமிற்கு காபியும்,ஏனையோருக்கு தேனீரும் கொண்டு வந்தனர்.
அனைவரும் ஒன்றாக பேசியப்படி பருகினர். அதன் பின்னர் மற்றவர்கள் வெளியேறினர். கோட்ஸேயும்,ஆப்தேயும் தூக்கிலடப்பட தேவையான முன் தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்கள் அணிய வேண்டிய கறுப்பு அங்கிகளை சிறை காவலர்கள் கொண்டு வந்தனர். கறுப்பு அங்கிகளை அணிந்தபடி நாதுராமும்,ஆப்தேயும் தங்கள் சிறைகளை விட்டு வெளியே வந்தனர்.
அவர்கள் கைகளில்,அகண்ட பாரத வரைப்படமும்,ஹிந்துக்களின் எழுச்சிச் சின்னமான காவிக்கொடியும்,கீதையின் பிரதியும் இருந்தது.
பலத்த பாதுகாப்பு நிறைந்த தனிச்சிறையிலிருந்து முதன்முறையாக,அந்த விடியற்காலையில் வெளியே வந்தனர். ஆப்தே,பஞ்சாப் மாநில குளிர்கால காலைச் சூரியனை சிலாகித்து கோட்ஸேயிடம் பேசினார்.
‘’ஆம் சிம்லாவிலும் இது போன்றே இருக்கும் ‘’ என்றார் கோட்ஸே.
தூக்கிலிடப்படும் மேடையை நோக்கிச் செல்லும் போது ‘’ அகண்ட பாரத் அமர் ரஹே ‘’ ( அகண்ட பாரதம் நீடு வாழ்க ) ‘’ என்று இருவரும் சேர்ந்து முழங்கினர்.
ஒரே உத்தரத்தில் தனித்தனியாக இரு தூக்கு கயிறுகள் அவர்கள் தலைகளை நுழைக்கச் சுருக்குப் போடப்பட்டிருந்தது.
அதை நோக்கி இருவரும் சென்றனர்.இருவரும் ஒரு சேர ஒரு சமஸ்கிருத வசனத்தை கூறினார்கள். அதன் பொருள் :
‘’ நாங்கள் மரணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்திலும் ,உன்னை வணங்குகிறோம் எம்மை பிறப்பித்த தாய்நாடே ‘’
நாதுராம் கோட்ஸே,நாராயண் ஆப்தே இருவரும் தூக்கிலிடப்பட்டனர்.
சிறைச்சாலை சுவர்களுக்கு வெளியே அமைந்திருந்த திறந்த வெளியில் ஹிந்து முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு அவர்கள் தகனம் செய்யப்பட்டனர்.
எதிர்காலத்தில் அங்கே எந்த நினைவகமும் வந்து விடக் கூடாது என்று அந்த வயல்வெளி முழுவதும் உழப்பட்டு,புற்கள் நடப்பட்டன.
சம்பிரதாய முறைப்படி அவர்களின் அஸ்தி அருகிலிருந்த காகர் நதியில் கரைக்கப்பட்டாலும்,இவை அனைத்தும் மிக மிக ரகசியமாக செய்யப்பட்டன.
எந்த இடத்தில் அஸ்தி கரைக்கப்பட்டது என்பதும் ரகசியமாக வைக்கப்பட்டது.
யார் இவர்கள்..இவர்கள் செய்த குற்றம் தான் என்ன ?
(தொடரும்)
எழுத்து: யா.சு.கண்ணன்




