செம்மரம் : குருதியில் கரைந்த பேராசை

semmaramஇன்று காலை, ஆந்திரக் காடுகளில் ‘கடும் தடையை’ மீறி செம்மரம் வெட்டச் சென்ற பலர் வனத்துறையால் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் தமிழர். அதிலும் குறிப்பாக, பலர் எனது பகுதியைச் சேர்ந்தவர்கள். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்தவன் என்ற முறையில், இந்த செம்மரங்கள் வெட்டப்படுவதைக் குறித்து, நான் அறிந்த சில விவரங்களை தர விழைகிறேன். செம்மரங்களின் மதிப்பும், காடுகளில் அதன் இருப்பின் அவசியம் குறித்தும் இப்போதெல்லாம் நீங்கள் அறிவீர்கள் என்பதால் நேரடியாக விஷயத்துக்குள் செல்கிறேன். முப்பது வருடங்களுக்கு முன்னர், நான் பள்ளி மாணவனாக இருந்த போதும், இதே போன்றதொரு சூழல்! செம்மரத்துக்குப் பதிலாக சந்தன மரங்கள். எங்கள் ஜவ்வாது மலைத் தொடர் முழுக்க நிறைந்து கிடந்த சந்த்ன மரங்களை இப்படித்தான் வெட்டிக் கடத்தினார்கள். இப்படி மரங்களை வெட்டி, மலையில் இருந்து வெளியே கொண்டு வந்து தர, வெளிநாட்டிலிருந்து ஆட்கள் வருவதில்லை. அதே மலைக்கிராம மக்களுக்கு ஆசைகளைத் தூண்டி இதை செய்ய வைப்பார்கள். வனத்துக்குப் பாதுகாவலனாக இருக்க வேண்டிய வனவாசிகளே, பெரும்பணத்துக்காகவும், மது புட்டிகளுக்காக அதைச் செய்தனர் இப்போது, அடையாளம் காட்டக்கூட ஒரு சந்தன மரம் இல்லாமல், ஜவ்வாது மலைத்தொடரே மொட்டையடிக்கப் பட்டு விட்டப் பின்னர், வியாபாரிகளின் கவனம், அடுத்ததாக செம்மரத்தின் மீது திரும்பியுள்ளது. செம்மரம், தற்போது ஆந்திரக் காடுகளில் மட்டுமே வெட்டக்கூடிய அளவில் பெரிதாகவும், மறைவாகவும் இருக்கிறது. சரி! அந்த மரங்களை வெட்ட ஆட்கள் தேவையாச்சே?! ஏற்கனவே பல ஆண்டுகள் வெற்றிகரமாக மரம் வெட்டிய அனுபவம் கொண்ட ஜவ்வாது இமலைவாசிகளைப் பிடித்தனர். சந்தன மரங்களை வெட்டிப் பெரும் பணம் ஈட்டி, அதை செலவு செய்து விட்டு மீண்டும் பழைய ஏழ்மை நிலைக்கு வந்து நிற்கும் அந்தத் தலைமுறை ஆட்களுக்கு இது பெரிய வாய்ப்பாகப் பட்டது. பெரும் குழுவினராகப் புறப்பட்டனர். ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு 6000 ரூபாய் கூலி. தொடர்ந்து பத்து நாட்கள் வேலை. இரவில் சராயம், ஆடு மற்றும் இன்னும் பல சப்ளைகள். முன்பு வெறும் கோடலி, கை ரம்பம் வைத்து மரம் வெட்டியவர்கள் கைகளில் ஹிட்டாச்சி, யமஹா கம்பனிகளின் மின் அறுப்பான் தரப்பட்டது. ஜவ்வாது மலைகளை அடுத்து, ஆந்திர சமவெளிக்காடுகள் கற்பழிக்கப் பட்டது. முப்பது வருடத்துக்கு முன்னர் போலில்லாமல், வனம், மரங்கள் குறித்த விழிப்புணர்வு பெரிதாக வந்திருக்கும் காலக்கட்டமாச்சே இது. ஆந்திர மற்றும் மத்திய வனத்துறையினர் இந்த செம்மரக் கடத்தலை தடை செய்து, கடுமையான காவலும் இட்டனர். சென்ற வருடத்தில், முன்னூறுக்கும் மேலான கூலித் தொழிலாளர்கள் அடர்ந்த காட்டுக்குள் மரங்களை வெட்டிக் கொண்டிருக்கும் போது, அங்கே ஒரு ஜீப்பில் தனியாக மாவட்ட வன அதிகாரி சென்று மாட்டிக் கொள்ள, அவரை மரத்தில் கட்டி வைத்து அடித்தேக் கொன்றனர், நாம் அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் எனக் குறிப்பிடும் இந்த வனவாசிகள். அதில் தமிழர்களே எண்ணிக்கையில் அதிகம். அந்தச் சம்பவம், மரக் கடத்தலின் மொத்த தட்ப வெப்ப நிலையையும் மாற்றி விட்டது. ஆந்திர அரசு, செம்மரக் கடத்தலுக்கு எதிராக அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து, ஜனாதிபதி ஒப்புதலைப் பெற்றது. அதன்படி, காடுகளுக்குள் மனிதர்கள் நடமாட்டமே மொத்தமாகத் தடைச் செய்யப் பாட்டது. மீறினால், அவர்களை சுட்டுக் கொல்வதற்கு சட்டரீதியான ஒப்புதல் கிடைத்தது. வனக்காவலர்கள் கூடுதலாக நியமிக்கப் பட்டு, அவர்களுக்கு நாட்டு எல்லைப் பாதுகாவலர்களுக்கு வழங்குவதைப் போன்ற, முழு ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் வழங்கப் பட்டது. அது மட்டுமல்லாமல், பல்வேறு அரசு சாரா குழுக்களை அமைத்து, அவர்களை தமிழகத்தில் உள்ள ஜவ்வாவது மலைத் தொடர் கிராமங்களில் வந்து விழிப்புணர்வு முகாம்களை நடத்தினர். நாடகங்களை நடத்தினர். காசுக்கு ஆசைப்பட்டு, மரம் வெட்ட ஆந்திரா வந்தால் அவர்கள் வீட்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப் படுவார்கள் என்பதை மிகத் தெளிவாக ஒவ்வொரு பெண்ணுக்கும் நாடங்கள் மூலம் விளக்கிச் சொன்னர். தமிழ்க அரசும் கூட இதில் கவனம் எடுத்து, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். உதாரணத்துக்கு, பெரும் குழுவாக பேருந்தில் சித்தூர்,திருப்பதி சென்றால் வனக் காவலர்கள் செய்தி அறிந்து, அங்கே சென்று அவர்களை மீண்டும் திருப்பி அனுப்பியதெல்லாம் உண்டு. இத்தனையையும் மீறி, இன்று ஆந்திரக் காட்டுக்குள் செம்மரம் வெட்டும் கும்பல் ஒன்று சுடப்பட்டு இருபது பேர் கொல்லப்பட்டுள்ளனர். இயற்கை நியதிப்படி, செத்தவர்களில் பெரும்பாலானோர் எங்கள் திருவண்ணாமலை மாவட்டக் கூலித் தொழிலாளர்கள்தாம். ஆனால், அவர்களை ‘அப்பாவித் தொழிலாளர்கள்’ என்று நான் சொல்ல விரும்ப வில்லை. செம்மரம் வெட்டச் சென்றவர்கள், அதில் இருந்த அபாயத்தை முழுதாக அறிந்திருந்தார்கள். அதற்கேற்றார் படி அவர்களுக்கு விலையும் மிக அதிகமாக நிர்ணயக்கப் பட்டிருந்துள்ளது. முழுக்க, முழுக்க தங்கள் பேராசையின் காரணமாகவே இந்த சட்டவிரோதமான காரியத்துக்கு அவர்கள் சென்றிப்பார்கள். இனி, இந்த மரணங்கள் அரசியலாக்கப்பட்டு விடும். ஆந்திர மிருகங்கள், அப்பாவித் தமிழர்களை வேட்டையாடிக் கொன்று விட்டது என (தற்போது வேலையில்லாமல்) இருக்கும் தமிழின போராளித் தலைவர்களும் ஆவேசமாக பேட்டியளிப்பர். போராடுவார்கள். எங்கோ சொகுசாக அமர்ந்தபடி, இவர்களை எய்த பெரும் பண முதலாளிகள் என்ற வில்லை விடுத்து, அப்பாவி அம்புகளுக்கா தண்டனை? என்ற பெரிய சோஷியலிஸ தர்க்கத்தை முன்வைத்து, பிரச்சனையை முடிவே இல்லாத வேறு தளத்துக்குத் தள்ளி விட பல துடிப்பான இளம் நெஞ்சங்கள் துடிக்கும். மனித உரிமைக் குழுக்கள் வேறு உள்ளனவே! பரிதாபமாக நிர்கதியற்று நிற்கும் காடுகளின் நியாயங்கள் புறக்கணிக்கப்படும். அதைப் பாதுகாக்க, பலமுறை தனது உயிரைத் தந்த வனப் பாதுகாவலர்களின் குடும்பங்கள் மறக்கப் படும். சட்டப்படியான தடையை மீறி, கடுமையான எச்சரிக்கையை மீறி, மாநிலம் விட்டு மாநிலத்துக்கு, மரம் வெட்டும் (சமயத்தில் மனிதனையும்) ஆயுதங்களை எடுத்துச் சென்றவர்கள் பக்கம் நின்று மனித உரிமைக்காகக் கதறும். திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகளும் கூட உண்மையைப் பேச முடியாத ஒரு உணர்வுப்பூர்வமானச் சூழல் இங்கு உருவாக்கப்படும். இத்தகைய வீர,தீர செயல் புரிந்து நாட்டுக்காக தன்னுயிரை விட்ட, இந்தத் தமிழர்களுக்கு ஐந்து லட்சம், பத்து லட்சம் என நிவாரண உதவிகள் வழங்கப் படும். படுகொலைச் செய்யப்பட்ட இந்த மாவீரர்கள் அவரவர் கைகளில் கோடாரியைப் பிடித்தபடியான சிலைகளை, அவரவர் கிராமங்களின் நுழைவாயில்களில் நிறுவி, அதை அமைச்சர்களும், ஆட்சித் தலைவர்களும் திறந்து வைக்காதவரை, இந்த நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நியாயம் என்று ஒன்று ஒளிந்து கொண்டாவது இருக்கும். ஜெய்ஹிந்த். கட்டுரை: – எஸ்கேபி. கருணா facebook