
தெலுங்கில்: பி.எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
“Organised way of acting is unknown to Indians- ஒருங்கிணைந்து ஒற்றுமையாகப் பணி புரிவது இந்தியர்களுக்குத் தெரியாது”
ஆங்கிலேயர்கள் தங்களைத் தாமே புகழ்ந்து கொண்டு இவ்வாறு கூறுவர்…
“ஒரு ஆங்கிலேயன் தனியாக இருந்தால் அவன் ஒரு போக்கிரி.
இருவர் சேர்ந்தால் வியாபாரி. மூவர் சேர்ந்தால் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குவான்”.
ஒன்றிணைந்து பணிபுரிவது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்ற அகந்தையோடு இந்தியர்களுக்கு ஒற்றுமையாகப் பணி புரியும் கலை தெரியாதென்று கூறி பிரசாரம் செய்தனர். நம் மீது பல கேலி கிண்டல்களை அள்ளி வீசினர்…
“ஹிந்து ஒருவன் தனியாக இருந்தால வேதாந்தம் பேசுவான்.
இருவர் இருந்தால் வாதம் செய்துக் கொண்டு வீதிக்கு வருவார்கள்.
மூவர் சேர்ந்தால் பிறரைக் குழப்புவார்கள்.
நான்கு பேர் ஹிந்துக்கள் ஒரே வழியில் நடப்பது எப்போது? அவர்கள் தோளின் மேல் சவத்தை சுமக்கும் போதுதான்! மயானத்திற்குச் செல்லும் போதுதான் இந்தியர்கள் நான்கு பேர் சேர்ந்து ஒரே வழியில் நடப்பார்கள்” என்று நம்மை ஏளனம் செய்வார்கள்
ஒற்றுமை நம்மில் இல்லை என்று அவர்கள் கூறும் மற்றுமொரு நகைச்சுவை கூட மிகப் பிரபலம்.

ஒரு வேட்டைக்காரன் கடலில் நண்டு பிடித்தான். பிடித்தவற்றை ஒரு கூடையில் போட்டான். இந்திய நண்டுகள் இருந்த கூடைக்கு மூடி தேவை இல்லை. ஏனென்றால் மேலே செல்லும் நண்டை மற்ற நண்டுகள் காலைப் பிடித்து கீழே இழுக்கும். அதற்கு ‘இந்தியன் க்ராப் மென்டாலிட்டி’ என்று பெயர் வைத்தனர். இந்தியர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தும் இது போன்ற அசத்திய பிரசாரங்கள் பல செய்தார்கள்.
உலகின் பண்டைய நாகரிகங்கள் பல பெயரோ உருவமோ இன்றி அழிந்து போயின. ஆனால் பாரதிய நாகரிகம் நிலைத்திருக்கக் காரணம் நம் ஹிந்து அரசர்கள் ஒன்றிணைந்து எதிர்த்து நின்றதால்தான். ஹூனர்கள், சகலர்கள், இஸ்லாம் தீவிரவாதிகள் எல்லோரையும் ஹிந்து சமூகம் துரத்தியடித்தது. அப்படிப்பட்ட ஹிந்து அரசர்களுக்கு ஒற்றுமை இல்லை என்பது உண்மைக்குப் புறம்பானது.
ஸ்ரீகிருஷ்ண தேவராயர், சத்ரபதி சிவாஜி போன்ற வீர சக்ரவர்த்திகள் கடைபிடித்த அரசாட்சி தர்மங்கள் ஒன்றிணைந்த நிர்வாகத்திற்கு உதாரணமாக நின்றன.
ஹிந்து அரசர்கள் ஒற்றுமையால் வெற்றி சாதித்த வரலாற்று சம்பவங்களை இப்போது அறிந்து கொள்வோம்:-
*650- 870 வரை 22 ஆண்டுகாலம் ரணபல் போன்ற ஹிந்து அரசர்கள் அரேபிய (இஸ்லாம்) ஆக்கிரமிப்பாளர்களை வெற்றிகரமாக துரத்தியடித்தார்கள்.
*921ல் பீமதேவர் 40 ஆண்டுகள் காபூலைத் தலைநகராகக் கொண்டு நல்லாட்சி செய்தார். “கதாஹஸ்த பரம பட்டாரக மஹா ராஜாதிராஜ ராஜபரமேஸ்வர சாஹிஸ்ரீ பீமதேவ” என்று இவரைப் புகழும் ஒரு சமஸ்கிருத கல்வெட்டு கிடைத்துள்ளது. அதன் பின் அரசாண்ட ராஜா ஜெயபாலரும் துருக்கிய முஸ்லீம்களை எதிர்த்துப் போராடினார்.

*கஜனி முகம்மதுவை எதிர்த்த மூன்றாவது தலைமுறை அரசர் திரிலோசனபாலர் நடத்திய வீரதீரப் போராட்டம் (1013-1021) பற்றிக் குறிப்பிடும் ராஜதரங்கிணி நூலில் இவரை ‘பிரளயகால த்ரிநேத்ரனாக’ வர்ணித்துள்ளார். இவருடைய புதல்வர் பீமபாலன் காஷ்மீரை ஆண்ட சங்க்ராம அரசர்களோடு சேர்ந்து 1021-1026 வரை கஜினி முகம்மதுவை எதிர்த்து ஓடஓட விரட்டினார்.
*1043ல் தில்லி அரசர் மகிபாலர், ஹிந்து அரசர்கள் அனைவரையும் எச்சரிக்கை செய்தார். துருக்கர்களை திருப்பி அடிப்பதற்கு ஹிந்து அரசர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். பல அரச வம்சங்களின் ராஜாக்கள் முன் வந்தார்கள். பாரமார வம்சத்தைச் சேர்ந்த அரசர் போஜர், கலசுரி வம்ச அரசர் கர்ணன், சாஹமான வம்ச அரசர் அணஹில்லர் முதலான ஹிந்து அரசர்கள் ஒன்றிணைந்து போராடி துருக்கப் படைகளை விரட்டியடித்து அவர்கள் துவம்சம் செய்த கோவில்களை புனரமைப்பு செய்தார்கள்.
*கதிவால் ஹிந்து அரச வம்சத்தைச் சேர்ந்த அரசர் சந்திரதேவர் அயோத்தியா, காசி, வட கோசல பிரதேசங்களை முஸ்லீம் ஆட்சியிலிருந்து காத்தனர்.
*1911ல் நடந்த முதல் ஸ்தானேஸ்வரப் போர் ஹிந்துக்களின் ஒற்றுமை வலிமையை எடுத்துக் காட்டியது. இவர்களின் கையில் கோரி கோரமான தோல்வியைச் சந்தித்தான்.
*இரண்டாவது ஸ்தானேஸ்வரப் போரில் அரசர் ப்ரித்விராஜோடு சுமார் 150 பேர் சிறிய மற்றும் பெரிய அரசர்கள் துணையாக நின்றனர்.
*குலப் போர்கள், ஹிந்து ஒற்றுமையைப் பிரிக்கும் முயற்சிகள், ஜெயச்சந்திரன் போன்றோரின் முதுகில் குத்தும் கோழைச் செயல்கள் போன்றவை நம்மை வீழ்த்தின. மீண்டும் ஒற்றுமைக்காக முயற்சி செய்த சத்ரபதி சிவாஜியும் ஸ்ரீகிருஷ்ண தேவராயரும் வரலாற்றில் நிலைத்துவிட்டனர்.
இயல்பாகவே ஹிந்து சமூகம் ஒற்றுமையின் வலிமைக்குப் பெயர் போனது. இதற்கு நம் குடும்ப அமைப்பையே உதாரணமாகக் கூறலாம். மேலாதிக்கம் செலுத்தும் நாடுகளில் மோசமான நிலையில் உள்ள அவர்களின் குடும்ப அமைப்பு பற்றி எத்தனை குறைவாகப் பேசினால் அத்தனை நல்லது.
“உன் பிள்ளைகள், என் பிள்ளைகள் சேர்ந்து நம் பிள்ளைகளோடு சண்டையிடுகிறார்கள்” என்ற கலாசாரம் அவர்களுடையது.
தனிமனித முன்னேற்றத்திற்கு அவரவர் வயதைப் பொறுத்து ஏற்பாடு செய்த நான்கு ஆசிரம தர்மங்கள் பாரதிய சமுதாய அமைப்பின் சிறப்புக்கு உதாரணங்கள். பிரம்மச்சரியம், இல்லறம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் என்று ஏற்பாடு செய்த அமைப்புகள், மனிதனுக்கு உத்தேசித்த நியமங்கள், பொறுப்புகள் வேறு எந்த நாகரிகத்திலும் தென்படாது.

மனிதனுக்கு உள்ள உழைப்பு, நடத்தை, சாமர்த்தியம், விருப்பங்கள் ஆகியவற்றைப் பொறுத்து பாரதிய முனிவர்கள் ஏற்பாடு செய்தவையே சதுர்வர்ண அமைப்புகள். நம் பூர்வீகர்கள் வேறு வேறு பெயர்களிலும் வடிவத்திலும் போதித்த மிகச சிறப்பு வாய்ந்த நிகழ்வு அறிவியல் இது. தனி மனிதனை ஒரு குழுவாக சிந்திக்கும் திசையை நோக்கி நடத்துவிக்கும் இந்த அமைப்பு பாரதிய ருஷிகளின் அதி உன்னதமான படைப்பு.
நதிகளின் பெயரால் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா, புஷ்கரங்கள் போன்ற மிகப் பெரும் உற்சவங்களும் அங்கு வந்து கூடும் எண்ணற்ற ஜன சமூகமும் அமைப்பு நிர்வாகம் இல்லாத சமுதாயத்திற்கு சாத்தியமாகக் கூடியதா?
சாதுர்மாஸ்ய தீட்சைகள் போன்றவற்றின் போது நைமிசாரண்யம் போன்ற புனிதத் தலங்களில் நடக்கும் சமூக நல மாநாடுகள், மேதைகளான நம் முனிவர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி சமுதாயத்தில் நிலவும் பழக்க வழக்கங்களையும் ஆசார விவகாரங்களையும் ஆய்வது, உலகிற்கே சரியான மார்க்கதரிசனம் செய்வது… பாரதியர்களின் நிர்வாக அமைப்பு ஏற்பாட்டுத் திறமை… பிறர் யாருக்கும் சாத்தியமாகக் கூடியது அல்ல.
இப்படிப்பட்ட தேசத்தில் பிரித்தாளும் கொள்கை என்ற துர்புத்தியோடு நுழைந்தனர் வந்தேறிகள்.

“வயம் பஞ்சாதிகம் சதம்” என்று தர்மபுத்திரன் கூறிய ஒற்றுமையின் வலிமை, வந்தேறிகளின் வரவால்தான் நலிந்து போனது.
‘சர்’ விருதுகள், ராஜ்பஹதூர் சன்மானங்கள் போன்ற இரைகளை வீசி சிலரை கைக்குள் போட்டுக் கொண்டார்கள். 1857 வரை ஒற்றுமையாக பணி புரிந்த இந்தியர்களில் வேற்றுமை விதைகளை நட்டார்கள். சில புகழ் பெற்ற மனிதர்கள், சாமார்த்தியம் மிக்க தலைவர்கள், ராணியின் முன் முழந்தாளிட்டுப் பெற்று வந்த விருதுகளோடு அந்நிய அரசுக்கு அனுகூலவாதிகள் ஆனார்கள். ஒன்றுமையின்மை என்ற விஷ விருட்சம் பாரத தேசத்தில் நீரூற்றி வளர்க்கப்பட்டது. (சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரசார் அதனைத் தொடர்கிறார்கள்).
இவ்வாறு பிரித்தாளும் கொள்கையில் தேர்ந்தவர்களே நம் தேசத்தை ஒன்றுபடுத்தினார்கள் என்று கூறி கோடிக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தவர்களை வணங்கும் கும்பல் ஒன்று உருவானது. பல போலி மேதாவிகள் இந்தியாவை ஒன்றிணைத்தது பிரிட்டிஷாரே என்று நம்பி ஊழியர் செய்தார்கள்.
சிதைந்த ஒற்றுமையை சுவாமி விவேகானந்தர், சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றோர் மூலம் திருப்பப் பெற்றோம். அந்த மகநீயர்களின் நினைவு தரும் ஊக்கத்தோடு ஹிந்துக்களில் ஒற்றுமையை எடுத்துவருவதில் ஆரிய சமாஜம், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் போன்ற அமைப்புகளின் பங்கு போற்றத்தக்கது.
Source: ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ், மார்ச், 2019





