வீர சாவர்க்கர் ஒரு அறிஞர், சரித்திராசிரியர், கவிஞர், மத சீர்திருத்தவாதி, பயிற்சி பெற்ற பாரிஸ்டர், இவையெல்லாவற்றிற்கும் மேலாக அவர் தீப்பிழம்பாய் கொழுந்து விட்டுக் கொண்டிருந்த தேசப்பக்தர்…
‘அன்னிய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்திப் போராடுங்கள்’ என பாரத நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பிப் போராட வைத்தவர். இத்தகைய குணாதிசயங்கள் கொண்ட சாவர்க்கரின் தொடர்புதான் கோட்ஸேக்கு கிடைத்தது.
சாவர்க்கரின் தாக்கத்திற்கு உட்பட்டு விட்ட கோட்ஸே முற்றிலும் மாறிப் போனார். மெட்ரிகுலேஷன் பரிட்சையில் தோல்வி அடைந்து விட்டு,மரத்தச்சு பணியை வாழ்க்கையின் ஜீவனமாய் ஏற்கத் தயாராக இருந்த பழைய கோட்ஸேவா இது என எண்ணும்படியாக உரு மாறினார்.
வீர சாவர்க்கரின் கோட்பாடுகள் அனைத்தும் கோட்ஸேயின் உயிர் மூச்சானது. அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக, மத ரீதியாக நாட்டு மக்கள் எப்படி இருக்க வேண்டும் எனும் தெளிவான கற்பனை சாவர்க்கருக்கு இருந்தது.
அந்நிய ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து பாரத நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்கப் பாடுபடுவதாகட்டும்…
பாரத நாட்டின் மகோன்னதத்தை பாதுகாப்பதாகட்டும்,மராத்தி மொழியை தூய்மைப்படுத்துவதாகட்டும்..
சாதி முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதாகட்டும்,
தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதாகட்டும்,
முஸ்லீம், கிறிஸ்துவர்களாக மாறி விட்டவர்களை தாய் மதத்திற்கு திரும்பக் கொண்டு வர வேண்டும் என்பதாகட்டும்…
எவையெல்லாம் சாவர்க்கரின்,கனவுகளோ,அதற்கான செயல்பாடுகளோ,
அவையெல்லாம் கோட்ஸேயின் கனவுகள் செயல்பாடுகள் ஆயின.
நாதுராம், சாவர்க்கரை தன் குருவாகக் கருதினார். அவர் ஸ்பரிஸத்திற்கே ஒரு தெய்வீகத்தன்மை இருந்ததாக உணர்ந்தார். சாவர்க்கர் கூறியன யாவையும் கோட்ஸேக்கு வேத வாக்கானது. கண்ணை மூடிக் கொண்டு அவரை பின்பற்றத் தொடங்கினார்.
பாரத நாட்டில் அன்றைய சூழ்நிலையில் நடைபெற்று வந்த அனைத்துமே மோசமானதாக உள்ளது எனும் சாவர்க்கரின் பார்வை கோட்ஸேக்கு ஏற்புடையதாக இருந்தது… இரத்தம் கொந்தளித்தது…
அதன் விளைவு… காந்தியை கொல்லத் துணிந்தார்… தன் வாழ்க்கையையும் முடிவிற்குக் கொண்டு வந்து விட்டார். கோட்ஸே மீது சாவர்க்கர் ஏற்படுத்தியத் தாக்கம் அபரிமிதமானது..
அன்றைய கால கட்டத்தில், சாவர்க்கர் தொட்டிருந்த உயரத்தை கருத்தில் கொண்டால், கோட்ஸேயால் சாவர்க்கருக்கு என்ன கிடைத்திருக்கும்..?
ஒரு நல்ல தொண்டன் கிடைத்தான் என்பது மட்டுமே இருந்திருக்கும்… ஆனால் 19 வருடங்களுக்குப் பிறகு, நாதுராம் சாவர்க்கரிடம் கொண்டிருந்த தொடர் நெருக்கத்தின் காரணமாக…. இதனையே காரணங் காட்டி காந்தி கொலை வழக்கில் சாவர்க்கரை குற்றஞ்சாட்டி கைது செய்தது காவல்துறை.
வழக்கின் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல், சிறையிலிருந்த ஒரு வருட காலத்தில் சாவர்க்கரின் உடலை வெகுவாகப் பாதித்தது. இதன் காரணமாக சிறையிலிருந்து வெளியே வந்த பின் பாரத நாட்டு அரசியலின் முக்கியச் சக்தி எனும் நிலையிலிருந்து அவர் அகற்றப்பட்டு விட்டார்.
(தொடரும்)
– எழுத்து: யா.சு.கண்ணன்




