பாகிஸ்தானின் முஸ்லீம் படையினர், பழங்குடியினர் தாக்குதல் என்ற போர்வையில், பாகிஸ்தானின் அபோட்டாபாத் பகுதியிலிருந்து காஷ்மீரை நோக்கி வேகமாக முன்னேறி வந்தனர்.
மூன்று நாட்களுக்குள்ளாக அவர்கள் முசாஃபர்பாத் மற்றும் டோமல் பகுதிகளை கைப்பற்றினர். யுரி நகரத்திற்குள் புகுந்து கொள்ளை அடித்தனர். பின் நகரத்தை தீக்கிரையாக்கினர்.
1947 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 26ந் தேதி, ஸ்ரீநகரிலிருந்து 35 மைல்கள் தொலைவிலிருந்த பரமுலா பகுதியைச் சென்றடைந்தனர். பரமுலா ஒரு ரம்மியமான பகுதி.ஆங்கிலேயர்களின் மனதைக் கவர்ந்த நகரம். ஆங்கிலேய அதிகாரிகள் தங்கள் மனைவிமார்களுடன் தேன் நிலவிற்கும்,ஓய்வெடுக்கவும் செல்லும் இடம்.
அக்டோபர் 26ந்தேதி வரை அழகான பூந்தோட்டங்களுடன்,நிழற்சாலைகளுடன் காட்சி அளித்த நகரம், அடுத்த நாள் மாலைக்குள் பாகிஸ்தானின் முஸ்லீம் படைகளால் சர்வ நாசம் செய்யப்பட்டது.
14,000 ஜனத்தொகை கொண்ட நகரத்தில் 3000 பேர் மட்டுமே உயிர் தப்பினர். மீதம் 11,000 பேரும் கொடூரமாக சித்திரவதைச் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
அங்கிருந்த ஒரு சர்ச் எரிக்கப்பட்டது.கிறிஸ்துவ மிஷினரி ஆஸ்பத்திரி,கான்வென்ட் தீக்கிரையாயின. ஹிந்து தாய்மார்கள்,கிறிஸ்துவ சன்யாசினிகள் ( NUNS ) எண்ணற்றோர் வெட்டவெளியில் வைத்து கற்பழிக்கப்பட்டனர்.
ஒரு ஆங்கிலேய அதிகாரியின் கண் முன்னேயே அவருடைய மனைவி வெறி பிடித்த பாகிஸ்தானிய ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டார்.பின்னர் அந்த அதிகாரியும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
நகரத்தின் மையப் பகுதியில் வைத்து இன்னொரு காஷ்மீர் வாசி சிலுவையில் அறையப்பட்டார். அக்டோபர் 26 ந் தேதி பாரதத்துடன் இணைவதாக மஹாராஜா ஹரிசிங் அறிவித்தார்.
பாகிஸ்தானின் முஸ்லீம் படைகள் இத்தகைய மோசமான வன்முறையை கையாளும் என்று அறிந்திருந்தால் முன்னமேயே காஷ்மீரை பாரதத்துடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் ஹரிசிங் கையெழுத்திட்டிருப்பார்.
அடுத்த நாள் காலையில்,பாரதப் படைகள் விமானம் மூலம் ஸ்ரீநகர் பள்ளத்தாக்கில் வந்திறங்கின. மாலையில் பாகிஸ்தானின் முஸ்லீம் படைகளுடன்,பாரதத்தின் ஹிந்து படைகள் கடுமையாக மோதத் துவங்கின.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஹிந்துக்களின் வேத பூமியாக விளங்கிய காஷ்மீரைக் காக்க போர் மூண்டது.
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்



