காஷ்மீர் பிரச்சனை மவுண்ட்பேட்டனை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளியது. பாரதத்தின் சார்பாகச் செயல்பட்டால்,பாரதம்,பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தராக செயல்படவில்லை,ஒரு தலைப்பட்சமாகச் செயல்படுகிறார் எனும் அவப்பெயர் ஏற்படும் என்ற தயக்கத்தால்,மவுண்ட்பேட்டன் முழு மனதுடன் பாரதத்தின் பக்கம் நிற்கவில்லை.
இரு நாடுகளுக்கிடையே பெரிய அளவில் போர் மூளக்கூடாது என்பதை உறுதிச் செய்வதிலேயே அவரது கவனம் இருந்தது.
அவருக்கிருந்த உடனடி பிரச்சனை,காஷ்மீருக்கு படைகளை அனுப்பி விட்ட காரணத்தால்,மதக்கலவரங்களை ஒடுக்க தேவையான அளவிற்கு பலமில்லாது தவித்தார்.
அழைத்தவுடன் வந்து நின்ற துருப்புக்களைப் பார்த்தே அனுபவப்பட்டவருக்கு, இப்போது வெறுமனே ஆங்காங்கே பரவிக் கொண்டிருந்த மதக்கலவரங்களைப் பற்றிய தகவல்கள்,பெருமளவில் அகதிகள் முகாம்களை நோக்கி சாரியாக வந்துக் கொண்டிருந்த மக்கள் ,அவர்கள் எதிர் கொண்டிருந்த பிரச்சனைகள் ஆகியவற்றை கேட்டுக் கொண்டு செய்வதறியாது தத்தளிப்பது மட்டுமே செய்ய முடிந்தது.
நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது. தலைநகர் டெல்லியில் உருவாகிக் கொண்டிருந்த பிரச்சனைகளின் அளவை சாதாரணமாக புரிந்துக் கொள்ள முடியாது என்பதாக இருந்தது.
பத்து லட்சம் ஜனத்தொகையைக் கொண்ட டெல்லியின் மக்கள் எண்ணிக்கை இரு மடங்காகி அரசு நிர்வாகத்திற்கு விழி பிதுங்கியது.
அதுவும் வந்த அகதிகள் சாதாரணமாக வரவில்லை.
கோபத்துடன்,சொல்லொண்ணா துயரங்களை தாங்கிய நெஞ்சினராக இருந்தனர்.செய்வதறியாது,இருண்ட எதிர்காலத்தை எதிர் நோக்கினவராக இருந்தனர். ஒரு பெரிய அலையிலே சிக்கிக் கொண்ட புழு,பூச்சிகளைப் போல் இருந்தனர்.
மனிதனுக்கு எதிராக மனிதன் நடத்திக் காட்டிய காட்டுமிராண்டித்தனமான அட்டூழியங்களை எதிர் கொண்டு திகைத்துப் போயிருந்தனர். அப்படி வந்த அகதிகளில் ஒருவன் பெயர் மதன்லால் பாஃவா.
பின்னாளில் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்றவன். வழியெங்கும் முஸ்லீம் வெறியர்கள் நிகழ்த்திய அட்டுழியங்களை அவன் விவரித்தான். அதைக் கேட்க கேட்க நம் இரத்தம் கொந்தளிக்கும்.
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்





