புளித்துப்போன சமாச்சாரங்கள் என்ற வகையில் வருபவையே, அமைச்சர்கள் அதிகாரிகள் வீடுகளில் நடைபெறும் ‘ரெய்டு’கள். இவற்றை எந்தத் துறை நடத்தினாலும் அது வெறும் கண்துடைப்போ என்ற சந்தேகம் வருகிறது. ரெய்டு வரும் என்பதை மோப்பம் பிடிப்பவர்கள் தடயங்களை முன்னதாகவே அழித்துவிடுகிறார்கள்.
ஏதோ டைரி சிக்கியது என்று பல ரெய்டுகளில் சொல்லப்படுகிறது. எல்லோரும் டைரியில் எழுதி வைத்துதான் பணம் கொடுக்கிறார்களா? அந்த டைரிகள் நீதிமன்றங்களில் நிரூபண ஆவணங்களாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றனவா என்பதும் தெரியவில்லை.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டிலும் அலுவலகத்திலும் ரெய்டு நடந்ததே, அதன் முடிவு என்ன? இதே போல் நாடெங்கிலும் பல வீடுகளில் நடந்த ரெய்டுகளின் பயன் என்ன? ரெய்டுகளின் போது சிக்கிய பணம் எங்கே? ஆவணங்களில் புதைந்துள்ள பணம் என்னவாயிற்று? புகார்களில் சிக்கி ரெய்டுகளுக்கு இலக்கான நபர்களில் எத்தனை பேர் தண்டனைப் பெற்றார்கள், பறிமுதல் செய்யப்பட்ட பணம் அரசு கஜானாவில் சேர்ந்ததா? அல்லது வழியிலேயே ஒழுகி விட்டதா? ஒரு மாநிலத்தில் ஒரு காலக்கட்டத்தில் சுமார் பத்து அதிகாரிகளும் அமைச்சர்களும் ரெய்டில் சிக்கினார்கள் என்பதனால், அடுத்த காலக்கட்டத்தில் அங்கே ஊழல் குறைந்ததா? பிடிபட்ட பத்து பேரில் ஐந்து பேர் தண்டனைப் பெற்றவர்கள் என்பதனால், அடுத்தக் காலக்கட்டத்தில் ஊழல் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததா? போன்ற கேள்விகள் எல்லாம் விக்கிரமாதித்தனைப் பார்த்து வேதாளங்கள் கேட்ட கேள்விகளை விடச் சிக்கலானவை.
தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தினாலும் மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்களைப் பெற முடியாது. இவை ரகசிய காப்பு பிரமாணத்தின் கீழ் வருவதாக அரசாங்கம் சொல்லி விடலாம். சரி, ஜனங்கள் கேட்க முடியாத இந்தக் கேள்விகளை ஜனாதிபதி கேட்கலாமா என்று கேட்கத் தோன்றுகிறது. ஜனாதிபதிகள் இரண்டு வகை, ஒன்று இதே அரசியல் குட்டையில் ஊறிய மட்டைகள், மற்றது அரசியல், அராசங்கம், பொது நிர்வாக நடைமுறைப் பற்றித் தெரியாத வகை. இந்த இரண்டு வகைக்கும் பதவிப் பிரமாணத்தின்போதே வாய்ப்பூட்டு போடப்பட்டு விடுகிறது. எனவே இந்த கேள்விகளுக்கான விடைகளை ஜனாதிபதிக்கு மனு செய்தும் பெற முடியாது. ஜனாதிபதிக்கு தகவல்களை கொடுக்கும் அமைப்பே எல்லாவற்றையும் மூடி மறைக்கும் அரசாங்கம்தான்.
எல்லா ரெய்டுகளும் ஆள்பவர்களின் ஆயுதங்களே. மத்தியில் ஆளும் ஆட்சியே மாநிலத்தில் இருந்தால் அங்கு ரெய்டு ஆயுதம் பாய்வது அபூர்வம். ரெய்டு என்ற அரசியல் ஆயுதம் கட்சி அபிமானமிக்கது. அதற்கு கூட்டணி தாட்சண்யமும் உண்டு. எந்த அரசியல் கட்சியும் தாமும் பிற கட்சிகளும் ஊழல் செய்யாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. அளவு வித்தியாசம் தான் இருக்கிறதே ஒழிய மற்றபடி எல்லாக் கட்சியும் ஊழல் செய்பவை தான். தாம் ஊழல் செய்வது போல் பிற கட்சிகளும் ஊழல் செய்ய வேண்டும் என்றுதான் ஆளுங்கட்சியும் எதிர்பார்க்கிறது. அப்போதுதான் அந்தக் கட்சியை மிரட்டி சில விஷயங்களில் ஒத்துழைப்பை பெற முடிகிறது. அல்லது அரசியல் ஆதாயத்திற்காகக் கூட்டணிக்கு இழுக்க முடிகிறது.
ஒரு மாநிலத்தில் சில மந்திரிகள் மீதான ஊழல் புகார்கள் மீது ரெய்டு நடந்தால் அந்த மந்திரி பதவி நீக்கப்படுவார் என்றோ, அதிகாரி பணி நீக்கம் செய்யப்படுவார் என்றோ எதிர்பார்க்க முடியாது. இப்போதுள்ள நிலையில் முதல்வர் மந்திரி சபையைக் கூட்டி இப்படி அறிவிக்கலாம், “நம்மிடம் உள்ள 27 மந்திரிகளில் 25 பேர் ஒழுங்காக தம் கடமைகளை செய்திருப்பதால் அவர்கள் மீது ஊழல் புகார்கள் வந்திருக்கிறது, ரெய்டும் நடந்திருக்கிறது. 2 பேர் மீது எந்தப் புகாரும் இல்லை. எனவே அந்த இருவரையும் உடனடியாக கட்சியில் இருந்தும் மந்திரிப் பதவியில் இருந்தும் நீக்குகிறேன்.” நாளை இப்படி நடக்காது என்று சொல்ல முடியுமா?
கட்டுரை: ஆர். நடராஜன்
(நன்றி: துக்ளக் இதழ்)




