பிரிட்டிஷ் அரசாங்கம், சாவர்க்கரை கைது செய்து பாரதத்திற்கு கொண்டு செல்லும் நிகழ்வை மிகவும் இரகசியமாக வைத்திருந்தாலும், சாவர்க்கர் ‘ மொரியா ‘ கப்பலில் அழைத்துச் செல்லப்படுகிறார் என்ற தகவல் அப்போது பாரிஸிலிருந்த பெண் புரட்சியாளர் மேடம் காமா அவர்களுக்கும் அவருடைய இயக்கச் சகாக்களுக்கும் தெரிந்து விட்டது.
கப்பல் ‘ மார்செய்ல்ஸ்’ ஸை அடைந்து விட்டதை அறிந்து,சாவர்க்கரை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்பதற்காக ,வா.வே.சு. அய்யர் மற்றும் வேறு சிலரை அழைத்துக் கொண்டு காரில் பாரிஸிலிருந்து ‘ மார்செய்ல்ஸ் ‘ விரைந்தார் காமா.
அவர் மார்செய்ல்ஸ் சென்றடைவதற்குள்ளாக எல்லாம் கை மீறி போய் விட்டிருந்தது. அதற்குள்ளாக சாவர்க்கர் கைது செய்யப்பட்டு மீண்டும் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு 10,15 நிமிடங்கள் ஆகி விட்டிருந்தது.
உள்ளூர் வாசிகளிடமிருந்து நிகழ்ந்தேறிய பரபரப்பைப் பற்றிக் கேட்டறிந்த மேடம் காமா, கப்பலிலிருந்து கடலுக்குள் குதித்து தப்ப முயன்ற சாவர்க்கரின் சரித்திர புகழ்மிக்க சாகசத்தைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனார்.
சாவர்க்கரை நேரத்திற்கு வந்து காப்பாற்ற முடியாது போனதற்காக மிகவும் வருந்தினார். மார்ஸெய்ல்ஸ் மேயர் எம்.ஜாரஸிடம் நடந்தவைகளைப் பற்றி புகார் கொடுத்தார்.
பிரான்ஸ் மண்ணில் பிரிட்டிஷ் போலீசாரால் சாவர்க்கர் கைது செய்யப்பட்டது அத்துமீறல் மட்டுமல்லாது, பிரான்ஸ் நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் என்று கூறினார்.
இந்த செய்தியை,பிரான்ஸ் நாட்டு முக்கிய தினசரியான ‘ லி டெம்ஸ்’ க்கு அவரே நேரிடையாக தெரிவித்தார். சட்டவிதிகளை மீறி சாவர்க்கர் கைது செய்யப்பட்ட விஷயம் ‘ லி டெம்ஸ்’ ஸில் வெளியாகி காட்டுத் தீ போல் உலகெங்கும் பரவி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
பிரிட்டிஷ் அரசாங்கம், பாரபட்சமாக வழக்கை ஜோடிக்கும் என்றுணர்ந்த மேடம் காமா, சாவர்க்கரை சந்தித்து ஆவன செய்யும்படியாக, பாரிஸ்டர் ஜோசப் பாப்டிஸிடாவிற்கு தந்தி மூலம் செய்தி அனுப்பினார்.
சாவர்க்கருக்கு எப்படியாவது விடுதலை கிடைக்கச் செய்ய வேண்டுமென் மேடம் காமா துடித்தார். பாரிஸிலிருந்த பிரிட்டிஷ் தூதரகத்திற்கு சென்று இது தொடர்பான ஒரு மனுவையும் கொடுத்தார்.
அதில்,’’ இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட துப்பாக்கிகள் சாவர்க்கர் அனுப்பியது அல்ல, அதற்கு பொறுப்பு தான் தான் ‘’ என அதில் தெரிவித்திருந்தார்.
இந்த செயல் மூலம், மேடம் காமாவின் துணிவு, செயல் திறன், தேச பக்தி தெரிய வருகிறது அல்லவா !!
அத்தோடு நில்லாமல், உலகெங்கும் உள்ள அனைத்து நாட்டின் பத்திரிகை களிலும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சட்ட விரோத செயல்பாட்டை வெளியே கொண்டு வந்தார்.
மேடம் காமாவின் புரட்சிகர செயல்பாடுகளைப் பற்றி இன்னும் கூறிக் கொண்டு போகலாம்,ஆனால் தொடரில் அதற்கு வாய்ப்பு இல்லாதது வருத்தமாகத்தான் இருக்கிறது.
ஆனால் ஒரு காரியத்தை நாம் செய்யலாம்… இன்று காந்தி ஜெயந்தி ஆதலால், ஓங்கி உரக்க காந்தியின் பக்தர்கள் மனம் மகிழ்ந்து போக ..பாடலாம்…
‘ காந்தி தாத்தா வந்தாரு சுதந்திரம் வாங்கித் தந்தார், நேரு மாமா வந்தாரு மிட்டாய் தந்தாரு…. ‘
(தொடரும்)
- எழுத்து: யா.சு.கண்ணன்




