அந்தக் காலத்தில், தரைவழியாக பிரான்ஸ் நாட்டிற்குள் சென்று விட்டு, அதன் பின் கடல் மார்க்கமாக இந்தியா வருவது வழக்கமாக இருந்தது. பாரிஸிலிருந்த சாவர்க்கரின் செல்வாக்கு மிக்க நண்பர்கள் யாரேனும்,பிரெஞ்ச் நீதிமன்றம் எதிலாவது, ‘ஆட் கொணர்வு‘ ( HABEAS CORPUS ) மனு தாக்கல் செய்து, சாவர்க்கரை விடுதலை செய்ய முயற்சிப்பார்களோ என ஆங்கிலேய அரசு அஞ்சியது.
ஆகவே வழக்கமான பாதையில் செல்லாமல்… இந்தியா செல்லும் SS MAUREA எனும் பயணிகள் கப்பலில், பலத்த பாதுகாப்போடு சாவர்க்கர் ஏற்றப்பட்டு, இரவும் பகலும் கண்காணிக்கப்பட்டார்.
அவர் கழிவறைக்குச் செல்லும் போது கூட இரண்டு காவலர்கள், கழிவறைக்கு வெளியே காவலுக்கு உட்கார்ந்து இருந்தனர். கழிவறை கதவில் சிறு துவாரம் செய்யப்பட்டு இருந்தது.
கழிவறைக்குள், உட்கூரையில் (CEILING) ஒரு கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. கதவு துவாரம் வழியாக உட்கூரையில் பொருத்தப்பட்ட கண்ணாடி வழியாக, சாவர்க்கர் கண்காணிக்கப்பட்டார்.
விளக்கப்படாத எதோ காரணத்தால் கப்பல் பிரெஞ்ச் நகரான மார்ஸேய்லுக்கு (MARSEILLE) வந்தது. இரவு முழுவதும் கண் விழித்திருந்த சாவர்க்கர் எப்படியாகிலும் தப்பித்து விட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
விடியற்காலையில் கழிவறைக்குப் போக வேண்டுமென்று காவலர்களிடம் கூறினார். வழக்கமான பாதுகாப்போடு கழிவறைக்குள் சென்றவர் உள்பக்கமாக கதவை தாளிட்டுக் கொண்டு, கதவின் துவாரத்தை மறைக்கும்படியாக தன் அங்கியை மாட்டினார்.
கழிவறையிலிருந்த சிறிய கண்ணாடி ஜன்னலை உடைத்து, அந்த சிறு வழியாக கடலில் குதித்தார். சத்தம் கேட்ட காவலர்கள் கழிவறை கதவை உடைக்க முயன்றனர்.
காவலர்கள், கப்பலிலிருந்து படகுகளை இறக்கி அவரை பிடிக்கத் துரத்தத் தொடங்கினர். சாவர்க்கர் வேகமாக நீந்தக் கூடியவர்.
காவலர்கள் தன்னை நெருங்குவதற்கு முன்பாக பிரெஞ்ச் கரையைத் தொட்டு விட்டார். இப்போது அவர் பிரான்ஸ் நாட்டில் இருந்தார். அவர் செய்ய வேண்டியது ஒன்று மட்டும்தான் இருந்தது.
பிரெஞ்ச் காவலர் ஒருவரைக் கண்டு பிடித்து, அவரிடம் அரசியல் அடைக்கலம் கோருவதுதான். மார்ஸேய்ல் நகரத்து கப்பல் துறை பக்கமிருந்த தெருக்களில் ஓடத் தொடங்கினார்.
அந்த காலை நேரத்திலேயே, நகரத்தில் ட்ராம் வண்டிகள் ஓடத் தொடங்கியிருந்தன. நகரம் பரபரப்பாக இயங்கத் துவங்கியிருந்தது.
ஈரமான பைஜாமாவோடு, வெறுங்காலில் இருந்தவர், யாரேனும் ஒரு பிரெஞ்ச் போலீஸ்காரர் கண்ணில் பட மாட்டாரா என இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருந்தார்.
‘ பிடியுங்கள்,பிடியுங்கள் திருடன் திருடன் ‘ என கத்தியவாறு, இந்திய மற்றும் ஆங்கிலேய காவலர்கள் அவரை பின் தொடர்ந்து ஓடினர். இதைக் கேட்ட பிரெஞ்ச் மக்கள் சிலரும் சாவர்க்கரை பிடிக்க ஓடினர்.
அதற்குள்ளாக ஒரு காவல்துறை அதிகாரியை கண்டு பிடித்து விட்டார். அவர் கைகளைப் பற்றிக் கொண்டு அரைக்குறை பிரெஞ்ச் மொழியில் தன்னை ஒரு மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் செல்லும்படியாக கேட்டார்.
அவருடைய உடையையும் தோற்றத்தையும் பார்த்த காவல் அதிகாரி, அவர் கப்பலில் பணி புரிந்து வரும் ஏதோ சிறு நிலை வேலைக்காரர் என்று எண்ணி ,கப்பல் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார்.
மார்ஸேய்லில் தப்பிக்க சாவர்க்கர் மேற்கொண்ட முயற்சி அவருடைய வாழ்க்கையின் கடைசி மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வாகி விட்டது. அதன் பிறகு அவரது வாழ்க்கை, ஆங்கிலேய அரசின் சட்டத்தின்படி, கொடுக்கப்பட்ட துன்பங்களை ஏற்கும் ஒன்றாகி போனது.
( தொடரும் )
– எழுத்து: யா.சு.கண்ணன்




