சாவர்க்கரை மீட்க அவருடைய நண்பர்கள் மேற்கொண்ட எந்த சட்ட நடவடிக்கையும் வெற்றி பெறவில்லை. பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் எனும் வாக்கிற்கு ஏற்ப, சாவர்க்கருக்கு எதிராக சட்டத்தை வளைத்தான் வெள்ளையன்.
லண்டனில் தான் மேற்கொண்ட புரட்சிக்கர நடவடிக்கைகளுக்கு அதிகபட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்த்தார் சாவர்க்கர். ஆனால் பிரிட்டிஷ் அரசு 1911ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ந் தேதி இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. அவர் ஐம்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் .
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் ஒரு நபருக்கு இரண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது சாவர்க்கருக்கு மட்டுமே. சாவர்க்கர் தண்டனையை தைரியமாக எதிர் கொண்டார்..
பிரிட்டிஷ் அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர், சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர், பிறவிப் போராளி, பயம் என்ற வார்த்தையையே அறியாதவர், அந்தமான் செல்லுலர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் சாவர்க்கரின் கழுத்தில் ஒரு இரும்புத் தகடு மாட்டப்பட்டது. அதில் கைதிகள் விடுதலையாகும் ஆண்டு எழுதப்பட்டிருக்கும். அதில் ’1960’ என்று எழுதியிருந்தது.இன்னும் ஐம்பது ஆண்டுகள் அதைச் சுமக்க வேண்டும்.உடன் இருந்தவர்கள் கண்கலங்கி நின்றார்கள்.
அப்போது பிரிட்டிஷ் சிறை அதிகாரி அங்கு வந்தான்.சாவர்க்கரைப் பார்த்து கிண்டலாக பேசினான். ‘ சாவர்க்கர், நீங்கள் பயப்படத் தேவையில்லை. காருண்ய மிக்க பிரிட்டிஷ் அரசு உங்களை 1960ல் வெளியே விட்டு விடுவார்கள். அதாவது ஐம்பது ஆண்டுகள் கழித்து’ என்றான் கிண்டலாக.
‘பிரிட்டிஷ் அரசை விட காருண்யம் மிக்கது சாவு. அது அதற்கு முன்பே என்னை வெளியே விட்டு விடலாம் அல்லவா?’ என்று சொல்லி விட்டு சிரித்தார் சாவர்க்கர்.
பதில் பேச முடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் அதிகாரி. குழந்தைப் பருவம் முதல், உயிர் பிரியும் தருவாய் வரை போராடியவர் சாவர்க்கர். தன்னுடைய உழைப்பை பிறர் அபகரித்த போதும் அதைக் கண்டு வருத்தப்படாதவர்.
சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்ததில் பெரும் பங்கு சாவர்க்கருக்கு உண்டு. ஆனால் பதவியையும்,பெருமையையும் காங்கிரஸ் வளைத்து போட்டுக் கொண்டது.
அந்தமான் செல்லுலார் சிறையில் சாவர்க்கருக்கு அளிக்கப்பட்ட தண்டனை, சிறையின் சரித்திரத்தில் எந்த ஒரு கைதிக்கும் அளிக்கப் பட்டிருக்காது. மனிதாபிமானமற்ற கொடுமைகள் அவை.
* தொடர்ந்து ஆறு மாதங்கள் இருட்டு அறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
* நான்கு மாதங்கள் யாரும் பார்க்க முடியாதபடி சிறையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார்.
* கைகளும்,கால்களும் கட்டப்பட்டு தொடர்ந்து ஏழு நாட்கள் நிற்க வைக்கப்பட்டார்.இது போல் இரண்டு முறை அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. மொத்தம் 14 நாட்கள்.
* கிராஸ் பார் என்று சொல்லப்பட்ட பலகையில்,கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் தொடர்ந்து பத்து நாட்கள் நிறுத்தப்பட்டார்.இது சிலுவையில் அறையப்பட்டது போன்ற நிலை.
* கை,கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு தொடர்ந்து நான்கு மாதங்கள்,கனத்த இரும்பு சங்கிலியுடன் இருந்தார்.
இன்னும் செக்கிழுத்தது, அடிபட்டது, கயிறு திரிப்பது என்று அனுபவித்த தண்டனைகள் பட்டியல் வளர்ந்து கொண்டே போகும்.
சுதந்திரம் பெற்றுத் தந்ததாக மார்த்தட்டிக் கொள்ளும் தேசிய தலைவர்களில் யாராவது ஒருவர், இத்தகைய சோதனைகளை கடந்து வந்திருப்பாரா ?
( தொடரும் )
எழுத்து: யா.சு.கண்ணன்




