சாவர்க்கரின் செயலாளராகப் பணி புரியத் துவங்கிய நாதுராம் கோட்ஸே, ஆங்கிலத்தில் சிறந்த முறையில் எழுதக் கற்றார். எந்த ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெறாததால், மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற முடியாது போனதோ,அது இப்போது நன்கு கை வரப்பெற்றது.
சிந்தனைகளை நன்குத் திரட்டி சொற்பொழிவாற்றவும் கற்றார். நாட்கள் நகர நகர சாவர்க்கரின் அன்பிற்கும்,நம்பிக்கைக்கும் உரிய சீடர் ஆகி விட்டார் நாதுராம்.
1931ல், நாதுராமின் தந்தை பணியிலிருந்து ஓய்வு பெற்றார். குடும்பம், ரத்தினகிரியிலிருந்து சங்கிலி என்னும் ஊருக்கு குடிபெயர்ந்தது. வாழ்க்கைக்கான செலவு குறைவு என்பதால்தான் சங்கிலியை தேர்வு செய்தனர்.
குடும்பத் தேவைகளுக்கு வருமானம் போதவில்லை எனும் நிலையிலே, நாதுராம் தையற் கலையைக் கற்று, தையற் கலைஞராகப் பணிபுரியத் துவங்கினார். கூடவே ஒரு சிறு பழக்கடையையும் நடத்தி வந்தார்.
இந்தக் காலக்கட்டத்தில், நாக்பூரில், அந்த நகரத்து முக்கிய ஹிந்து பிரமுகர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, ’ஹிந்து சங்கடன் ‘அதாவது ஹிந்து ஒருங்கிணைப்பு எனும் பெயரில் ஒரு அமைப்பை தொடங்கினார்கள்.
இந்த அமைப்பின் நோக்கம், ஹிந்துக்களை ஒன்றிணைத்து, அவர்களுடைய அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பது. ஏனென்றால், ஒரு புறம் சற்றும் விட்டுக் கொடுக்காத பிடிவாதமிக்க, மற்ற சமுதாயத்தினருடன் இணக்கமாக வாழாத, வாழத் தெரியாத, வாழ விரும்பாத சுயநலமிக்க சமுதாயமாக முஸ்லீம்கள் இருந்ததும்,
மறுபுறம். பெரும்பான்மை ஹிந்து சமுதாயத்தின் நலன்களைப் பற்றி சற்றும் கவலைப் படாது, அவர்களின் நலன்களுக்கு பாதகம் ஏற்படும் விதமாக, வெட்கமற்று, மானம், சூடு சொரணையற்று எல்லா விதத்திலும் முஸ்லீம்களை தாஜா செய்வதிலேயே காலம் கடத்திய காந்தி, நேரு போன்ற காங்கிரஸ் தலைவர்கள் இருந்ததும்..!
இவர்களால் ஹிந்துக்களின் நலன்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பிற்குள்ளாகி சொந்த நாட்டிலேயே பாதுகாப்பற்ற அனாதைகளாக மாறி வருவதை உணர்ந்த காரணத்தால்… ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர், அந்த நாக்பூர் நகரத்து ஹிந்து பிரமுகர்கள்.
காந்தியின் ‘அகிம்ஸை’ கொள்கையை தூக்கியெறியச் சொல்லி அந்த அமைப்பு வலியுறுத்தியது. ஏனென்றால், அகிம்ஸை கொள்கையை ஹிந்துக்கள் மட்டுமே பின்பற்றி அவர்கள் கோழைகளாக உருவாகி வருவதாக, அந்த அமைப்பு குற்றம் சாட்டியது.
தங்கள் உரிமைகளுக்காக ஹிந்துக்கள் வீறு கொண்டெழுந்து போராட வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியது. ‘ஹிந்து சங்கடன்‘ அமைப்பு சாவர்க்கரின் சிந்தனையின் குழந்தை.. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான அவரது புரட்சிக்கர இயக்கத்தின் சகோதரன்.!
ரத்தினகிரியில் சாவர்க்கருடனான கலந்துரையாடல்கள் போது இதை நாதுராம் புரிந்து கொண்டார். அந்த அமைப்பு,சாவர்க்கரின் முழு ஆசீர்வாதத்தோடும், மறைமுகமான வழிகாட்டுதலுடனும் நடைபெறுவதை உணர்ந்தார்.
ஒரு வருடம் கழித்து,’ஹிந்து சங்கடன்‘ அமைப்பின் கிளை, சங்கிலியில் துவங்கப்பட்ட போது, அதில் இணைந்து பணியாற்ற முன் வந்தார். அந்தக் கிளையின் செயலாளர் ஆனார்.
அப்போது நாதுராம் அவருடைய இருபது வயதுகளில் இருந்தார். ஓரளவிற்கு வருமானமும் வந்து கொண்டிருந்தது. அவர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டுமென்று அவருடைய பெற்றோர்கள் விரும்பினர்.
ஆனால் தனக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லையென கோட்ஸே மறுத்து கூறி விட்டார். தன்னுடைய வாழ்க்கை இந்த தேசத்திற்கானது என்று முடிவு செய்தார்.
எளிமையான ஆடைகளை அணிந்தார். புகை பிடிக்கும் பழக்கமோ, குடிப் பழக்கமோ இல்லை.. அரசியல், சரித்திரம் மற்றும் ஹிந்து மதம் தொடர்பான புத்தகங்களை நிறையப் படித்தார்..
எல்லாவற்றிற்கும் மேலாக.. கடுமையாக உழைத்தார்.
( தொடரும் )
– எழுத்து : யா.சு.கண்ணன்




