நாராயண் ஆப்தே…. ஏதாவது ஒரு விஷயத்தைச் சொன்னால்… சட்டென்று புரிந்து கொண்டு,அதற்கு பளிச்சென்று ஒரு பதிலை சொல்லக் கூடிய திறமை பெற்றவர்.
எப்போது உற்சாகம் மிகுந்து காணப்படுபவர், மற்றவர்களுக்கு உற்சாகமூட்டக் கூடியவர்… புத்திசாலி,நன்கு படித்தவர்,நன்கு படித்த அங்கத்தினர்கள் நிறைந்த குடும்பப் பின்னணிக் கொண்டவர்…
புகை பிடிக்கும் பழக்கம் உண்டு,அவ்வப்போது சிறிது மது அருந்தும் பழக்கமும் உண்டு… உயர்ந்த,தரமிக்க ஆடைகளை அணிவதில் விருப்பம் அதிகம்…
வாழ்க்கையின் எல்லா நல்ல விஷயங்களும் தனக்கு கிடைக்க வேண்டும் எனும் எண்ணம் மிக்கவர்…
நாதுராம் போன்றே ஆப்தேயும் நடுத்தர பிராமண பின்னணியிலிருந்து வந்த போதும், பிராமண சாதிக்குரிய சமூக ரீதியான தயக்கங்களையோ சம்பிரதாயங்களையோ பின்பற்றுபவர் இல்லை. மாறாக அவற்றை கிண்டலடித்து பேசக் கூடியவர்.
பார்ப்பதற்கு, சற்றே பெண்மைச் சாயல் கொண்ட அழகர். பெண்களுக்கு தன்னிடம் இருக்கும் ஈர்ப்பு பற்றி புளகாங்கிதம் அடைபவர்.
ஏதாவது ஒரு நாள், ஆப்தே பெண்கள் விஷயத்தில் மாட்டிக் கொள்ளப் போகிறார் என்று யாரேனும் எண்ணியிருந்தால் அதில் நியாயம் இருந்திருக்கக் கூடும்.
ஆனால்….. அவர் கொலையாளியாக குற்றஞ் சுமத்தப்பட்டு நிற்பார் என்று யாரும் கிஞ்சித்தும் கருதியிருக்க மாட்டார்கள்.
ஒரு சமயம்…. ஒரு தபால் கவர் வந்தது… அதில்.. தபால் தலை மீது, அலுவலக முத்திரை சரியாக பதியவில்லை. கோட்ஸே நினைத்திருந்தால் அந்த தபால் தலையை எச்சரிக்கையாக எடுத்து, மீண்டும் பயன்படுத்தி இருக்க முடியும்.
ஆனால் அது தவறு என்று கோட்ஸே பயன்படுத்த மறுத்து விட்டார். கோட்ஸே இப்படி, ஆப்தே அப்படி..
இத்தகைய முற்றிலும் வெவ்வேறான குணாதிசயங்கள் கொண்ட இருவர் ஒன்றிணைந்தது எப்படி….?
‘ஹிந்து ஒருங்கிணைப்பு‘ எனும் உயரிய லட்சியம் அவர்களை ஒன்றிணைத்தது என்று கூறினால் அது மிகையாகாது. நாராயண் ஆப்தே 1911 ஆம் ஆண்டு பிறந்தவர், ஒரு வருடம் கோட்ஸேக்கு இளையவர். அவருடைய குடும்பம் பூனாவில் வசித்து வந்தது.
அவருடைய தந்தை அந்தக் காலத்தில் பிரபலமாக விளங்கிய சரித்திராசிரியர் மற்றும் சமஸ்கிருத பண்டிதர். மூன்று சகோதரிகள், நான்கு சகோதர்கள் கொண்ட குடும்பத்தில் ஆப்தே மூத்தவர்.
ஆப்தே பூனாவில் பள்ளி படிப்பை முடித்த பின் 1932 ஆம் ஆண்டில் பம்பாய் பல்கலைக்கழகத்திலிருந்து, B.Sc. பட்டம் பெற்றார். அந்தக் காலக்கட்டத்தில் வேலை கிடைப்பது கடினமாக இருந்தது.
மூன்று வருடங்கள் காத்திருப்பிற்கு பின், Miss.Bruce எனும் பெண்மணி நடத்தி வந்த அமெரிக்கன் மிஷன் ஹை ஸ்கூலில் ஆசிரியராக வேலை கிடைத்தது.
(தொடரும்)
#காந்திகொலையும்பின்னணியும்
– எழுத்து: யா.சு.கண்ணன்




