
‘’ நாம் ஏதாவது செய்ய வேண்டும் ‘’ தன் நண்பர் ஒருவரிடம் கூறினார் விஷ்ணு கார்கரே. ’’ பலவந்தமாக மதமாற்றம் செய்யப்பட்டவர்களை ஹிந்து மதத்திற்கு திரும்பக் கொண்டு வர வேண்டும் ; கடத்தி செல்லப்பட்ட ஹிந்து பெண்களை விடுவிக்க வேண்டும் ‘’.
’’ என்ன செய்வது,என்ன செய்ய முடியும்.முதலில் அங்குச் சென்று பார்ப்போம்.பின் என்ன செய்வது என்று தீர்மானிக்கலாம் ‘’. நவ்காளிக்கு புறப்பட்டுச் செல்வது என தீர்மானித்த கார்கரேயின் மனம் அடித்துக் கொண்டது.
தனியாக எதுவும் செய்ய முடியாது ; கூட யாரையேனும் அழைத்துச் செல்ல வேண்டும் என தீர்மானித்தார் . போதிய அளவிற்கு பணமும் தேவை ; என்ன செய்யலாம் ?
’ சகோதர்கள் தினம் ‘ என அறியப்பட்ட ‘ BHAUBIJ ‘ எனும் ஹிந்து பண்டிகை அன்று,சகோதரர்கள் சகோதரிகளுக்கு அன்பளிப்புகள் அளிப்பது வழக்கம்.
அவர் அஹமத்நகர் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். ‘ நவ்காளி ‘ யில் இருக்கும் தங்கள் சகோதரிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.தன்னுடைய கடைக்கு வந்து இயன்ற நிதியை அளிக்குமாறு கூறினார்.
மாலைக்குள் 3000 ரூபாய் வசூல் ஆனது. மக்கள் எழுச்சியுடன் வந்து உதவியது அவர் கண்களை கலங்கச் செய்தது. அவரும்,ஆறு ஹிந்து மகா சபா தொண்டர்களும் நவ்காளிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
தாங்கள் ஹிந்துக்கள் என பளிச்சென்று அடையாளம் காணும்படியாக,ஹிந்து முறையிலான தலைப்பாகையும்,வேட்டியும், நெற்றியில் ஹிந்து மதச் சின்னத்தை பிரதிபலிக்கும் விதமாக குங்குமம் முதலிய அடையாளங்களை தரித்துக் கொண்டனர்.
இப்படி சென்றால் தாங்கள்,முஸ்லீம் வெறியர்களால் தாக்கப்படக் கூடும் என்று உணர்ந்தே இருந்தனர். தங்கள் பாதுகாப்பிற்காக இரும்பினாலான வலைக் கவசத்தை ( CHAIN MAIL JACKETS ) சட்டைக்குள் அணிந்துக் கொண்டனர்.
இந்த வலைக்கவசத்தை கார்கரேக்கு விற்பனை செய்தது ,கார்கரே ஏற்கெனவே அறிந்திருந்த பூனாவைச் சேர்ந்த திகம்பர் காட்கே ( DIGAMABER GADGE ) என்பவர் ஆகும். இந்த திகம்பர் காட்கே தான் பின்னாளில் காந்தி கொலை வழக்கில் அப்ரூவர் ஆனவர்.
நவ்காளி சென்றடைந்தவுடன்,கிராமம் கிராமமாகச் சென்று ‘ வீர் சாவர்க்கர் ‘ பெயரில் நிவாரண மையங்கள் அமைத்தனர். அங்கு அவர்கள் பார்த்ததும் கேட்டதும் அவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
முதலில் போலீஸ்காரர்கள் ஒரு கிராமத்திற்குள் வருவார்கள். அரசாங்கம் அனைத்து ஆயுதங்களுக்கும் தடை விதித்திருப்பதாகக் கூறி கிராமத்து மக்களிடமிருந்து சாதாரண கத்தி உள்பட அனைத்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்து செல்வர்.
அப்படி போலீஸ்காரர்கள் வந்துச் சென்ற பின்,ஆயுதமற்ற மக்கள் மீது ஒரு கும்பல் வந்து பாயும். ஆள்காட்டிகள் பணக்கார ஹிந்துக்களின் வீடுகளை காட்டுவார்கள்.அந்த வீடுகள் சூறையாடப்படும்.பின் அவைகொளுத்தப்படும்.
ஆண்கள் கொல்லப்படுவார்கள்.ஹிந்துப் பெண்கள் கதறக் கதற கற்பழிக்கப்படுவார்கள். ஹிந்துப் பெண்கள் முஸ்லீம் வெறியர்களின் காமப்பசிக்கு இரைப் போல் கருதப்பட்டனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட ஹிந்துப்பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாய் அழைத்துச் செல்லப்பட்ட பல புகைப்படங்களை கார்கரேயிடம் காட்டினார்கள் அங்கிருந்தவர்கள்.
கார்கரே மற்றும் அவருடன் சென்ற நண்பர்களால் சில பெண்களை அவர்களது குடும்பங்களோடு சேர்க்க முடிந்தது.சில உயிர்களை காப்பாற்ற முடிந்தது.சில குழந்தைகளுக்கு உணவளிக்க முடிந்தது,சிலரை தாய் மதம் திரும்பச் செய்ய முடிந்தது.
ஆனால் பிரச்சனை விஸ்வரூமாய் இருந்தது. அவர்கள் செய்தவை கடலில் கரைத்த பெருங்காயம் போல இருந்தது. மேலும் நிதி திரட்ட ஊர் திரும்பினார்கள்,கார்கரேயும் நண்பர்களும். அந்த பணம் தீர்ந்தப் பின் மீண்டும்..மீண்டும்..
ஒரு கட்டத்தில் செய்வதறியாது திகைத்த அவர்களுக்கு கடும் வெறுப்புணர்வு மேலோங்கியது..பழிக்குப் பழி வாங்க வேண்டும் எனும் எண்ணம் தோன்றியது. அது குறித்து யோசிக்கவும்,விவாதிக்கவும் தொடங்கினார்கள்.
தீர்வில்லாத ஒருபிரச்சனையை தாங்கள் எதிர் நோக்கி இருப்பதாக அவர்களுக்குப் பட்டது. இது போல மீண்டும் நடைபெறாத விதமாக ஏதாவது செய்ய வேண்டும்.
காந்தியின்’ அகிம்ஸை ‘ யால் ஊட்டப்பட்டிருக்காவிட்டால்,வங்காள ஹிந்துக்கள் துணிந்து திருப்பித் தாக்கி இருப்பார்கள். ஒரே தீர்வுதான்.
அகிம்ஸையாவது மண்ணாவது,திருப்பித் தாக்க வேண்டும் ;இரத்தத்திற்கு இரத்தம் என எண்ணத் தொடங்கினார்கள். ஹிந்துக்களின் இந்த நிலைமைக்குக் காரணம் ?
வேறு யார் ? காந்தி..காந்தியேதான். இவர்கள் இப்படி புலம்பிக் கொண்டிருக்கும் போது… நவ்காளி மாவட்டத்து கிராமங்களில்,காந்தி மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்று கொண்டிருந்தார்.
ஸ்விட்ச் ஆஃப் செய்தது போல் காந்தி வந்ததும் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களும் சட்டென்று நின்று போயின. தினம் ஒரு கிராமம் என்ற கணக்கில் காந்தி, நவ்காளியில் 7 வாரங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.பிரச்சனைகள் முடிவிற்கு வந்து விட்டதை உறுதிச் செய்துக் கொண்டு தன் கவனத்தை பீகார் பக்கம் திருப்பினார்.
( தொடரும் )
– எழுத்து: யா.சு.கண்ணன்



