
நவ்காளியில் மக்களை சந்தித்த பிறகு காந்தி பீகாருக்கு வந்தார். அவர் வருகையை முஸ்லீம்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தனர். காரணம், காந்தியின் உண்ணாவிரத மிரட்டலுக்குப் பிறகு,பீகாரில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை ஹிந்துக்கள் கைவிட்டாலும்,காந்தி திரும்பிப் போன பின் மீண்டும் தாக்குதல்களை தொடங்குவார்களோ என முஸ்லீம்கள் பயந்தார்கள்.
முஸ்லீம்களின் பயத்தை போக்குவதற்காக பீகார் முழுவதும் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஹிந்துக்களை கண்டித்தார்.முஸ்லீம்களுக்கு நம்பிக்கையூட்டினார்.
பீகார் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்காக நிதி வசூல் செய்து கொடுத்தார். காந்தி பீகாரில் இருந்த போதுதான் ,மவுண்ட்பேட்டன் வைஸ்ராயாக பொறுப்பேற்க இந்தியா வந்தார்.
காந்தி 1947 ஆம் வருடம் மார்ச் 30ந் தேதி டெல்லி திரும்பினார். இதற்கிடையே, பஞ்சாபில் கலவரங்கள் மூளத் துவங்கின. பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட நிலப் பரப்பிலிருந்து பாரதம் நோக்கி ஹிந்துக்களும்,பாரதத்திலிருந்து புதிதாக உருவாக இருந்த பாகிஸ்தானுக்கு முஸ்லீம்களும் பயணிக்கத் தொடங்கினர்.
நவ்காளியில் கண்ட,கேட்ட கொடூர நிகழ்வுகளை கோட்ஸே மற்றும் ஆப்தேயிடம் தெரிவிக்க அவர்களை சந்திக்க கார்கரே பூனாவிற்கு வந்தார்.
பத்திரிகைச் சட்டத்திற்கு பயப்படாமல் அவர்கள் உண்மை செய்தியை உலகிற்கு சொல்லுவார்கள் என கார்கரே நம்பினார். நாதுராமும்,ஆப்தேயும் நவ்காளி கலவரங்களை நேரில் பார்க்கவில்லையென்றாலும் அவர்கள் மனம் மிகவும் கொதித்து போயிருந்ததைக் கண்டு நெகிழ்ச்சியடைந்தார் கார்கரே.
பதில் தாக்குதல்களுக்காக,அவர்கள் பல திட்டங்கள் தீட்டியிருப்பதை அறிந்து திகைப்படைந்தார். திட்டங்களை செயல்படுத்தும் விஷயத்தில்,தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி அவர்களிடம் கேட்டுக் கொண்டார் கார்கரே.
ஏறக்குறைய 1947 மே மாதத்திலிருந்து அந்த குழுவின் தூதுவர் போல செயல்பட்டார் கார்கரே. வெடிக்குண்டுகள்,துப்பாக்கிகள் முதலிய ஆயுதங்களின் விற்பனையாளர்களோடு தொடர்பு கொண்டு அவற்றை பெறுவதற்கும்,சமயத்தில் தேவைப்பட்ட பணத்திற்கு ஏற்பாடும் செய்தார்.
இந்த நடவடிக்கைகளுக்காக அவர் அடிக்கடி அஹமத்நகர் மற்றும் பூனா இடையே பயணித்தார். குறுகியக் கால அவகாசத்தில் பம்பாய் மற்றும் வேறு பகுதிகளுக்கும் சென்று வந்தார்.
1947 ஆம் வருடத்தின் தொடக்கத்தில் ‘ ஹிந்து ராஷ்ட்ரா ‘ தினசரி நன்கு விற்பனை ஆகிக் கொண்டிருந்தது. பணியின் பளுவின் காரணமாக் ஒரு உதவி ஆசிரியரை நியமிக்க முடிவு செய்து,கார்கரேயின் நண்பரான B.D.கேர் என்பவரை அப்பொறுப்பில் அமர்த்தினார்கள்.
கார்கரே பூனா வரும் போதெல்லாம் கேர் இல்லத்தில் தங்குவதை வழக்கமாக்கி கொண்டார். கேர் பூனாவில் நாராயண் பேத் எனும் இடத்தில் கதவிலக்கம் 2 ல் வசித்து வந்தார். அந்த இடம் வசதி படைத்தவர்கள் தங்கும் இரட்டை அடுக்கு மேன்சன் ஆகும்.
காலப்போக்கில் அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட அறைகள் பல்வேறு விதமாக மாற்றியமைக்கப்பட்டு ஃப்ளாட்டுகளாக உருமாறியிருந்தது.
இதில் ஒரு பெரிய ஃப்ளாட்டில், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் திரு. N.Y.DEULKAR வசித்து வந்தார்.
எந்த DEULKAR ?
1944 ஆம் வருடம் பஞ்சக்னியில் காந்திக்கு எதிராக ஆப்தே கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது அங்கே பணியிலிருந்தாரே அதே DEULKAR தான்.
கோட்ஸேயும்,ஆப்தேயும் பார்த்த மாத்திரத்திலேயே சட்டென்று அடையாளம் கண்டு கொள்ளும் அளவிற்கு DEULKARக்கு நன்கு பரிச்சயமானவர்கள் ஆயிற்றே.
அவர்கள் ‘ காந்தியை இந்தியாவின் எதிரியாக பார்த்த திமிர் பிடித்த ஹிந்து ஒருங்கிணைப்பாளர்கள் ‘ என்றும் தெரியும். அவர் கேரின் அடுத்த ஃப்ளாட்டில்தான் தங்கியிருந்தார்.
இருவரின் ஃப்ளாட்டிற்கு இடையேயிருந்த பொதுச் சுவரில் காற்று வசதிக்காக இரும்பினாலான க்ரில் ஜன்னலும் இருந்தது.
கேரும்,DEULKARரும் பக்கத்து பக்க ஃப்ளாட்டில் வசித்தவர்கள் என்ற முறையில் நன்கு அறிமுகமானவர்களும் கூட. அதன் காரணமாக,அஹ்மத் நகரிலிருந்து கேரை பார்க்க வந்த கார்கரேயும் கூட DEULKARக்கு பரிச்சயமானவர் ஆனார்.
இன்னும் சொல்லப் போனால்.கார்கரேயின் நாடகக் குழுவிற்கு,கேரின் ஃப்ளாட் அமைந்திருந்த வளாகத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் DEULKAR ரும் கலந்து கொண்டார்.
ஆக காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் முதல் மூவர் ( குற்றப்பத்திரிகையின்படி ACCUSED NO.1 ,ACCUSED NO.2 மற்றும் ACCUSED NO. 3 ) DEULKAR க்கு நன்கு அறிமுகமானவர்கள் !!
ஆனால் அவர்களது மன ஓட்டம் பற்றி அவருக்கு தெரியாமலே போனது விந்தையிலும் விந்தை , ஆச்சரியத்திலும் ஆச்சரியம் !! அவர்களும் எந்த வித அறிகுறியையும் அவருக்கு காட்டாது இருந்திருக்கிறார்கள்.
தெரிந்திருந்தால் காந்தி கொலையை அவரால் தடுத்திருக்க முடியும். காந்தி கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே காந்தியை கொல்லப் போகிறார்கள்,யார் கொல்லப் போகிறார்கள்,யாரெல்லாம் சதியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற விவரமெல்லாம் பம்பாய் போலீஸுக்கு தெரிந்திருந்தது.
அந்தக் காலக்கட்டத்தில், குஜராத் ஒருங்கிணைந்த பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அந்த மாகாணத்தின் உள்துறை அமைச்சராக திரு. மொரார்ஜி தேசாய் இருந்தார்.
எந்த மொரார்ஜி தேசாய் ? பின்னாளில் பாரத நாட்டு பிரதமர் ஆனாரே அதே மொரார்ஜி தேசாய்தான். அவருக்கும் காந்தியை கொல்ல திட்டமிட்டிருக்கிறார்கள் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.
காந்தியையாவது,கொல்வதாவது,RUBBISH என்று ஒதுக்கித் தள்ளினார். பூனாவில் கொலையாளிகளுக்கு மிக நெருக்கத்திலிருந்த DEULKARக்கு அந்த தகவல் தெரிவிக்கப்படவேயில்லை.
என்னே விதியின் விளையாட்டு !!
( தொடரும் )
– எழுத்து: யா.சு.கண்ணன்



