
போர்க் களத்திலே போரிட்ட வீரன் ,தலைமையகத்திலே உட்கார்ந்து கொண்டிருக்கும் அதிகாரிகளிடம் தன் போர் அனுபவங்களை கூறுவது போல இருந்தது, கார்கரே, கல்கத்தா மற்றும் நவ்காளி கொடூரங்களைப் பற்றி ஆப்தேயிடமும் கோட்ஸேயிடமும் கூறியது.
தங்கள் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் லட்சியங்களுக்காக தாங்கள் எதுவுமே செய்யவில்லையே எனும் ஆதங்கம் அவர்கள் மனதிலே மேலோங்கியது. என்ன மிஞ்சி மிஞ்சிப் போனால்,ஜின்னாவை காங்கிரஸ் தலைவர்கள் தாஜா செய்து வருவதைக் கண்டித்து தலையங்கங்கள் எழுதியிருப்பார்கள்…..
பத்திரிகைச் சட்டத்தை மதிக்காது, ஹிந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்கள் கட்டவிழ்த்து விட்ட கொடூரங்களைப் பற்றிய விவரங்களை தங்கள் தினசரியில் வெளியிட்டிருப் பார்கள்…… முஸ்லீம்களுக்கு எதிராக சீக்கியர்களும்,ஹிந்துக்களும் நடத்திய தாக்குதல்களை வரவேற்றிருக்கா விட்டாலும் அவற்றை கண்டித்திருக்க மாட்டார்கள்..
பூனாவில்,புத்வார்பேத் எனும் பகுதியிலே அமைந்திருந்த ,இரண்டு மாடி வீடான ஆனந்தாஸ்ரமம் எனும் தங்கள் குடும்ப வீட்டிலே ஆப்தே வசித்து வந்தார்.
அவர் கட்டிக் காக்க பெரிய குடும்பம் இருந்தது. மனைவி, உடல் நிலை சரியில்லா குழந்தை, ஆறு சகோதர சகோதரிகள்… குடும்பத்தின் தலைவர் என்ற முறையில் , அவர் தன் கடமைகளை சரி வரவே செய்து வந்தார் என்று கூறலாம்.
ஆனால் குடும்ப சூழ்நிலையிலிருந்து விலகி வேறு இடங்களுக்கு செல்லும் சமயத்தில்,ஒரு ஹிந்துவாக தான் செய்ய வேண்டிய கடமைகளின் எண்ணமே மேலோங்கி நின்றது. விமானப்படையில்,போர்கால அதிகாரியாக ,நிர்வாகப் பணியில் இருந்தப் போதும்,
எதிரிகளின் பகுதிகளுக்குள் சென்று குண்டு வீசித் தாக்குதல்கள் நடத்தியவர்கள், மேம்பாலங்களையும், அணைக்கட்டுகளையும் தகர்த்தவர்கள் என்று செயல்பட்ட அதிகாரிகளின் தொடர்பு அவருக்கு தினசரி கிடைத்தது.
அது போன்றதொரு தண்டனையைத்தான் ஹிந்துக்களின் விரோதிகளுக்கு அளிக்க வேண்டும் எனும் கனவு அவருக்கு இருந்தது. ஒரு கண்டிப்பான,அஞ்சாத தலைவனாக,தனக்கு முழு விசுவாசமான,தான் சொல்வதை கண்ணை மூடிக் கொண்டு செயல்படுத்தக் கூடியஒரு இளைஞர் படையை உருவாக்க வேண்டும்….
அவர்களைக் கொண்டு அபாயகரமான,சாகஸமான காரியங்களை செய்து முடிக்க வேண்டும் என்பதே அவருடைய எண்ணமாக இருந்தது… நாதுராம்,பத்திரிகையின் அன்றாட பணிகளை கவனித்து வந்தார்.
ஆப்தே,தேவைப்படும் நிதியை திரட்டும் பணியில் ஈடுபட்டார்.
ஒரு விற்பனையாளனைப் போல புன்னகைத் தழுவ அழகாகப் பேசும் திறன் அவரிடம் இருந்தது. பம்பாயில் பல பணக்கார வியாபாரிகளின் தொடர்புகள் அவருக்குக் கிடைத்தது.
அவர்களும்,தங்களால் உடல் உழைப்புத் தர முடியாவிட்டாலும் ,தங்கள் மதத்திற்காக நேர்மையாக உழைக்கும் ஒருவருக்கு நிதியாவது கொடுத்து உதவலாமே என்று எண்ணம் கொண்டு பெரிய அளவில் உதவினார்கள்.
பம்பாய்க்கு அடிக்கடி சென்ற ஆப்தே,தன் தொழில் பணியோடு மனோரமா சால்வேயை சந்திப்பதையும் ஒரு கடமையாகக் கொண்டிருந்தார்.
மனோரமா சால்வேயோடு ஏதாவது ஒரு படத்திற்கு செல்வார்,பிறகு ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு,இரவு ஏதாவது ஒரு ஹோட்டல் அறையில் ஒன்றாகத் தங்குவார்கள்.
ஆப்தே, தனக்கென ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொண்டார்.
பூனாவிலிருந்து 120 மைல்கள் அந்த வண்டியிலே பயணம் செய்து பம்பாயில் மனோரமாவை சந்திப்பார். மனோரமாவை சந்தித்து ஒன்றாக இருக்கும் சில மணி நேரங்களுக்காக ,அவ்வளவு தூரம் செல்வது அவருக்கு கடினமாகத் தோன்றியதே இல்லை.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
– எழுத்து: யா.சு.கண்ணன்



