
ஆப்தேக்கு நிதி அளித்தவர்களுக்கு, ஆப்தேயின் மனோரமா சால்வேயுடனான அவருடைய தொடர்பு தெரிந்திருக்குமேயாயின், அதுவும் மனோரமா சால்வே ஒரு கிறிஸ்துவ பெண் என்பது தெரிந்திருக்குமேயாயின்… ஒரு ஹிந்து மதப் போராளி எனும் விதத்தில் அவர் மீதான மரியாதையும் நம்பிக்கையும் குறைந்திருக்கக் கூடும்….
ஆப்தே, தன்னை ஒரு ஹிந்து தர்மத்தின் தீவிரப் படைத் தளபதி என கற்பனைச் செய்து கொண்டிருந்த நிலையில், இப்படி வெளிப்படையான ஓர் உறவினை வைத்துக் கொண்டிருந்தது அவருக்கு பலவீனம் என்பதை அவர் உணர்ந்ததாகவே தெரியவில்லை.
மேலும், பம்பாயிலும் சரி, பூனாவிலும் சரி, அவரை பிரமிப்புடன் பார்த்த நண்பர்களோடு மது அருந்தும் போதும், உணவருந்தும் போதும், தேசத்தின் விரோதிகள் மீது தான் நடத்த எண்ணும் தாக்குதல்கள் பற்றி விரிவாகவும் வெளிப்படையாகவும் பேசுவார்.
இதனால், ஆப்தேயை அறியாதவர்கள் பலருக்கும் கூட ஆப்தேயின் எண்ண ஓட்டங்களும், திட்டங்களும் தெரிந்திருந்தது. ஒரு நாள், அவர் விபரீதமாக ஏதோ ஒன்றைச் செய்யப் போகிறார் என்று அவர்கள் வெளிப்படையாகவே பேசி வந்தார்கள்.
இப்படி ஆப்தேயை பற்றி அறிய வந்தவர்களில் தாதா மஹராஜ் என்பவர் முக்கியமானவர். (பின்னாளில், காந்தி கொலை வழக்கில் இவர் முக்கிய அரசு தரப்பு சாட்சி ஆனார் )
இவர் புஷ்டிமார்க்க வைஷ்ணவர்கள் என அறியப்பட்ட செல்வாக்கும், வசதியும் மிக்க ஒரு ஹிந்து மதப் பிரிவைச் சார்ந்தவர். 42 வயதான இவர், பம்பாயில் பிரசித்தி பெற்ற புலேஷ்வர் கோயிலின் சுற்றாடலில் ஒரு வீட்டில் வசித்து வந்தார்.
முகுந்த் மாளவியா எனும் நபர் ஒருவர், தாதா மஹராஜிடம், ’முழு பாகிஸ்தான் பாராளுமன்றக் கட்டிடத்தை ‘ தகர்க்கப் போகும் ஒருவரை பற்றி தனக்குத் தெரியும் என்றும் அவர் பெயர் நாராயண் ஆப்தே என்றும் கூறினார்.
தாதா மஹராஜ் ஒரு முக்கிய மதப்பிரிவின் குருவாக விளங்கிய போதும், சமுதாய ரீதியாக ஹிந்து சமுதாயமும், தேசமும் எதிர் நோக்கியிருந்த பிரச்சனைகளை நன்கு உணர்ந்திருந்தார். அவர் ஒரு பல்கலைக்கழகத்தில், சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்றவர்.விமான ஓட்டி லைஸென்ஸும் வைத்திருந்தார்.
தன் மதப்பிரிவின் தலைமைப் பொறுப்பை அவர் மிகவும் தீவிரமாக நிர்வகித்து வந்தார். தன்னை ஹிந்து மத பாதுகாவலராகவும் கருதிக் கொண்டிருந்தார்.
நன்கு படித்தவர், சூட்சும புத்தியுடையவர், ஒரு வியாபாரிக்கு உரித்தான சாமார்த்தியம் கொண்டவர். எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் பெரிய பணக்காரர்.அந்தக் காலத்திலேயே அவருடைய ஆண்டு ரொக்க வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கும் மேலாக இருந்தது.எல்லாம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை.
பக்தர்களுக்கு அவர் மேல் அவ்வளவு பாசம்,மரியாதை. தாதா மஹராஜும் கூட, கார்கரேயைப் போலவே, நவ்காளி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடந்தேறிய கொடூரங்களால் மனம் கொதித்துப் போய், திருப்பித் தாக்க வேண்டுமெனும் எண்ணம் கொண்டவரானார்.
அவர் பல பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஏறக்குறைய ‘ சாவர்க்கரின் கொள்கை ‘ யையே மக்களிடையே பிரச்சாரம் செய்தார். அதாவது, ஹிந்துக்கள் தங்கள் மத மற்றும் அரசியல் உரிமைகளுக்காக போராட வேண்டும் என்று.
இந்த அவருடைய தீர்மானத்தை செயல்படுத்தும் விதமாக, தீவிர ஹிந்துக்களைக் கொண்ட ராணுவப் படையை போன்றதொரு அமைப்பை தயார் செய்ய வேண்டும் எனும் எண்ணம் கொண்டு துப்பாக்கிகளும்,வெடிகுண்டுகளும் சேகரிக்கத் தொடங்கினார்.
இந்த வெடிகுண்டுகளையும், துப்பாக்கிகளையும், ஹைதராபாத் நிஜாமின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதியின் எல்லையிலிருந்த ஹிந்துக்களுக்கு விநியோகம் செய்து நிஜாமின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்குள் பல தாக்குதல்களை நடத்த எண்ணினார்.
ஆனால் இந்தப் பணிகளை அவர் நேரடியாக மேற்கொள்ளாமல், தன் தம்பி திக்ஷித் மஹராஜிடம் ஒப்படைத்தார். திக்ஷித் மஹராஜ் கோயிலுக்கு சொந்தமான ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வந்தார். இரண்டு சகோதர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தனர்.
தாதா மஹராஜ் அமைப்பாளராகவும், நிதி அளிப்பவராகவும் இருந்தார். திக்ஷித் மஹராஜ் அண்ணனின் எண்ணங்களை செயல்படுத்துபவராகவும் இருந்தார்.
தாதா மஹராஜ் பின்னணியிலிருந்தாலும், தன் தம்பி என்ன செய்கிறார், யாரெல்லாம் அவரைச் சந்திக்க வருகிறார்கள் என கண்காணித்தே வந்தார். திக்ஷித் மஹராஜும் அண்ணன் தான் எல்லாம் என்று ஏற்றுக் கொண்டு, நடைபெற்றுக் கொண்டிருந்த அனைத்து விஷயங்களையும் அவருக்கு மறைக்காமல் தெரிவித்து வந்தார்.
( தொடரும் )
– எழுத்து : யா.சு.கண்ணன்



