
தன் தம்பி திக்ஷிதிக்கு ‘ அனுமதிக்கப்பட்ட‘ வாங்கவோ விற்கவோ லைசென்ஸ் தேவைப் படாத ஆயுதங்கள் சப்ளை செய்பவர்களில், திகம்பர் பாட்கே என்பவர் ஒருவர் என்பதும், அவர் பூனாவில் ‘ சஸ்த்ர பண்டர் ‘ (ஆயுதங்கள் விற்பனையகம்‘) என்ற பெயரில் கடையை நடத்தி வருகிறார் என்பதும் தாதா மஹராஜுக்கு தெரிந்திருந்தது.
இந்த பட்கேதான், கார்கரே குழு நவ்காளி சென்ற போது 6 இரும்பு வலைக் கவசங்களை விற்றவர். தாதா மஹராஜ் அவரோடு பேசியதில்லை.ஆனால் சில நேரங்களில் பார்த்திருக்கிறார்.
திகம்பர் பாட்கேயை, ஆப்தேயும் கோட்ஸேயும் நன்கு அறிவர். பின்னாளில் காந்தியை கொலை செய்ய திட்டமிட்ட போது அதில் பங்கேற்றவர். ஆனால் வழக்கின் போது அப்ரூவராக மாறி விட்டார் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
1947 ஆம் வருடம் ஜூலை மாதம் வாக்கில், பாகிஸ்தானிய தலைவர்களை, அவர்களுடைய பாராளுமன்ற கட்டிடத்தை தகர்த்து மொத்தமாக கொன்று விட ஆப்தே திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவலை தாதா மஹராஜ் அறிந்த கால கட்டத்தில் நாதுராமும் ஆப்தேயும் திகம்பர் பாட்கேயை எட்டத்திலேயே வைத்திருந்தார்கள்.
அவரிடமிருந்து இவர்கள் எந்த ‘ அனுமதிக்கப்பட்ட ‘ ஆயுதங்கள் வாங்கியதும் இல்லை, தங்களுடைய ரகசியத் திட்டங்கள் பற்றி பேசியதும் இல்லை. ஆகவே அவரைப் பற்றி அக்கறை கொள்ளவும் இல்லை.

ஆப்தே செய்யவிருந்த காரியத்தைக் கேட்டு ‘ த்ரில்’ அடைந்த தாதா மஹராஜ், அவரை சந்திக்கவும், பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளவும், அவருக்கு ஏதாவது விதத்தில் உதவ முடியுமா என பார்ப்பதற்காகவும் பூனா விரைந்தார்.
1947 ஜூலை மாதத்தில், தாதா மஹராஜ் இரண்டு முறை ஆப்தேயிடம் ரகசிய ஆலோசனைகள் நடத்தினார். ஒரு கூட்டத்தில் கார்கரேயும் கலந்துக் கொண்டார்.
பாகிஸ்தான் பாராளுமன்றக் கட்டிடத்தை தகர்க்க இரண்டு ‘ மார்டர்கள் ‘ ( ஒரு பெரிய வகையான துப்பாக்கி ) தேவைப்படும் என்றும் அதற்கு 5000 ரூபாய் ஆகும் என்றும் ஆப்தே கூறினார். ஆப்தேயின் ராணுவ பின்னணியை அறிந்திருந்த தாதா மஹராஜ் பணத்தை கொடுக்கச் சம்மதித்தார்.
ஆப்தேயுடனான பேச்சு வார்த்தையில் திருப்தியடைந்த தாதா மஹராஜ் பம்பாய் திரும்பினார். ஆனால், பின்னாளில் காந்தி கொலை வழக்கின் போது, தான் பணம் ஏதும் தரவில்லை என தாதா மஹராஜ் மறுத்தார்.
அவர் பணம் கொடுத்திருக்கக் கூடும் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆப்தே அந்த இரண்டு ‘ மார்டர் ‘ களை வாங்கினாரா இல்லையா என்று தெரியவில்லை.
தாதா மஹராஜிடம் ஆப்தே கூறுகையில்,அவை கோவாவில் கிடைப்பதாகவும், அங்கிருந்த போர்த்துகீயர்களிடமிருந்து வாங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் ஆப்தே கூறிய ’ மார்டர்கள் ‘கிடைப்பது சாத்தியமா, அப்படியே கிடைத்தாலும், ராணுவத்தில் வெறும் நிர்வாகப் பணியில் இருந்த ஆப்தேயிற்கு அதை பயன்படுத்தத் தெரியுமா, நல்ல பயிற்சிப் பெற்ற ராணுவ வீரருக்கே, ‘ மார்டாரை பயன்படுத்துவது எளிதான காரியம் இல்லை….
அப்படியேயிருந்தாலும் அதை பாகிஸ்தான் பாராளுமன்றக் கட்டிடத்தை தகர்க்க எப்படி அங்கு கொண்டுச் செல்ல திட்டமிட்டிருந்தார் என்பதற்கான கேள்விகளுக்கு கடைசி வரை விடை கிடைக்கவேயில்லை.
போர்த்துகீயர்களிடமிருந்து ‘ மார்டர்கள் ‘ கிடைக்கவே இல்லை என்பதுதான் உண்மையாக இருக்க முடியும். ஏனென்றால்,இப்போது ஆப்தேயின் கவனம் ஒரு ஸ்டென் கன் வாங்குவதில் திரும்பி இருந்தது.
( தொடரும் )
- எழுத்து: யா.சு.கண்ணன்



