பம்பாயில் தாதா மஹராஜ் தன் ஆன்மீகப் பணிகளோடு‘ மார்டர்களை’ பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவற்றின் பயன்கள்,வரம்புகள் என்பன போன்ற விவரங்களை தெரிந்துகொள்ள முயன்று கொண்டிருந்தார்.
ஆப்தே மீது அவருக்கிருந்த நம்பிக்கை போய் விட்டது. வேறு வழிகளைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, ஒரு நாள்..
ஆப்தே,கார்கரேயுடன் அவரைச் சந்திக்க வந்தார். பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தின் போது, கூட்டம் நடக்கும் கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தி
ஜின்னா உள்ளிட்ட முஸ்லீம் லீக் தலைவர்களை கொல்லும் திட்டம் தோல்வி அடைந்ததற்கான காரணங்களை தாதா மஹராஜிடம் விரிவாக விளக்கினார். அதே நேரத்தில் வேறு இரண்டு திட்டங்களுடன் தான் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பகுதியாகி விட்ட சிந்த் மாகாணத்தில் அமைந்திருந்த ஹைதராபாத் (இது வேறு ஹைதராபாத் ) நகருக்குச் செல்லும் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் இருந்த, சுங்கச்சாவடி மீது தான் வாங்கியிருந்த ’ ஸ்டென் கன்னை ‘ கொண்டு தாக்குதல் நடத்தி, அங்கிருப்பவர்களை கொன்று மொத்த வசூலையும் ( அது மிகப் பெரியத் தொகை என்பது அவர்கள் கணிப்பு ) கொள்ளையடித்து , அந்த பணத்தை எதிர்காலத் திட்டங்களுக்கு பயன்படுத்துவது என்று திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார் .
இந்த திட்டத்தை செயல்படுத்த தங்களுக்கு ,தாதா மஹராஜ் வைத்திருந்த CHEVROLET STATION WAGON போன்றதொரு கார் தேவை என்றும் கூறினார்.
தாக்குதலை நடத்தப் போகிறவர்கள் பயணிக்கத்தான் கார் தேவைப்பட்டது. அடுத்த திட்டம், பிரிட்டிஷார்கள் விட்டுச் செல்லும் வெடி பொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களில்,பாகிஸ்தான் பங்கினை ஏற்றிச் செல்லும் ரயில் மீது FLAME THROWERS எனும் தழல் வீசி கருவிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி அவற்றை அழிப்பது என்றும் திட்டமிட்டிருப்பதாகவும் ஆப்தே,தாதா மஹராஜிடம் தெரிவித்தார்.
அந்த ‘ தழல் வீசி கருவிகள் ‘ இரண்டு தேவைப்படும் என்றும் அவற்றை வாங்க 10,000 ரூபாய் ஆகும் என்றும் கூறினார். கார் கொடுக்க சம்மதித்த தாதா மஹராஜ்,’ தழல் வீசி ‘ கருவிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே பணம் கொடுக்க முடியும் என்று கூறி விட்டார்.
தொடக்கத்தில் ஆப்தே மீதிருந்த நம்பிக்கை,இப்போது தாதா மஹராஜுக்கு இல்லை. டைனமைட்டுகள்,கை எறி குண்டுகள் ( HAND GRENADES ) போன்றவைகள் குறித்து தானும் நிறைய தெரிந்து வைத்திருப்பதாகவும் ,தேவைப்பட்டால் அவர்களுக்கு தன்னால் கொடுக்க முடியும் என்றும் கூறினார் தாதா மஹராஜ்.
ஆப்தே சொல்லுவதையெல்லாம் அப்படியே ஏற்கும் மனநிலையில் தாதா மஹராஜ் இல்லை என்பது வெளிப்பட்டது. ‘ FLAME THROWERS ‘ செயல்படுத்தப்படுவதை ஏதாவது சினிமாவில் மட்டுமே ஆப்தே பார்த்திருக்கக் கூடும்.
அந்த கருவி எங்கிருந்து கிடைக்கும் என்பது கூட ஆப்தேயிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. டைனமைட்,வெடிகுண்டுகள் ஏதும் தேவையில்லையென்றும்,கார் மட்டும் போதுமென்றும் கூறி விட்டு,காரை பெற்றுக் கொண்டு ஆப்தேயும்,கார்கரேயும் திரும்பினர்.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஆப்தேயிடமிருந்து எந்த தகவலும் வராமல் போகவே,தன் கார் கதி என்னவாயிற்றோ என்று கவலைக் கொண்ட தாதா மஹராஜ்,பூனா புறப்பட்டு வந்தார். அங்கு கார் பத்திரமாக இருப்பதைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டார்.
தாதா மஹராஜை வரவேற்ற ஆப்தே ஒரு பத்து,பதினைந்து ’ தள் ‘ ( முன்பொரு பதிவில் குறிப்பிட்ட கட்சி ரீதியாக செயல்படுத்த முடியாத சில காரியங்களைச் செய்ய சாவர்க்கர் உருவாக்கிய அமைப்பு ) தொண்டர்களை தாதா மஹராஜுக்கு அறிமுகப்படுத்தினார்.
அவர்கள்தான் ,பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் கொண்டுச் செல்லும் ரயில் மீது தாக்குதல் நடத்தப் போகிறவர்கள் என்றும்,’ தழல் எறி கருவிகள்’ வருவதற்காக காத்திருப்பதாகவும் ஆப்தே தெரிவித்தார். சுங்கச் சாவடி மீதான தாக்குதல் திட்டம் என்னவாயிற்று என்று தாதா மஹராஜிடம் ஆப்தே கூறவேயில்லை,அவரும் கேட்கவே இல்லை.
‘ தழல் எறி கருவிகளை ‘ கண்ணால் பார்த்தால்தான் பணம் கொடுக்க முடியும் என தாதா மஹராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.
‘ ஹிந்து ராஷ்ட்ரா ‘ தினசரி க்காக சொந்த கட்டிடம் தயாராகி இருந்தது. சாவர்க்கர் அதை திறந்து வைப்பதாக இருந்தது.ஆனால் அவருக்கு அப்போது உடல்நிலை சரியில்லாது இருந்ததால்,அவரால் வர இயலவில்லை.
தாதா மஹராஜை திறந்து வைக்கும்படியாக ,ஆப்தேயும் நண்பர்களும் கேட்டுக் கொண்டனர். தாதா மஹராஜும் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு திறந்து வைத்தார்.
பின்னாளில் காந்தி கொலை வழக்கு விசாரணையின் போது,தாதா மஹராஜ் வாக்குமூலம் அளித்த போது, ரெயிலை தகர்க்க வெடிகுண்டுகள் பயன்படுத்துவது பற்றி தாங்கள் விவாதித்ததாகவும்,ஆப்தே,திகம்பர் பாட்கே மூலம் அவற்றை வாங்க முயற்சிக்கலாம் என்று கூறியதாகவும் சொன்னார்.
ஆப்தேயை சந்தித்த பிறகு,திகம்பர் பாட்கே வரவழைக்கப்பட்டு,அவர் மூலமாக,’ GUN COTTON SLABS,FUSE WIRE,DETONATORS,’’ 808 ‘’ PACKETS CONTAINING EXPLOSIVE SUBSTANCES ( கடைசி பொருள் நோபல் உருவாக்கிய NITROGLYCERINE ) என ஏராளமான வெடிப்பொருட்களை தாதா மஹராஜ் வாங்கிச் சென்றார்.
நிஜாம் ஆளுகையிலிருந்த ஹைதராபாத் வாழ் ஹிந்துக்களிடம் அவர்கள் பாதுகாப்பிற்கு கொடுப்பதற்காக என தாதா மஹராஜ் விளக்கமளித்தார்.
ஆப்தே தான் 400 ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறி ஒரு பிஸ்டலை தாதா மஹராஜிடம் கொடுத்தார். தாதா மஹராஜும் அதைப் பெற்றுக் கொண்டு வேறு நல்ல பிஸ்டலோ,ரிவால்வரோ வாங்கித் தருவதாகக் கூறி தன் காரையும் எடுத்துக் கொண்டு ஊர் திரும்பினார்.
போகும் போது ” பாகிஸ்தானுக்கு வெடிப்பொருட்கள் கொண்டு செல்லும் ரயில் தகர்க்கப்பட்டே ஆக வேண்டும்” என்று ஆணையிட்டுச் சென்றார்.
( தொடரும் )




