1947 ஆம் வருடம் ஜூலை மாதம் ஒரு நாள்…. கடும் மழை பெய்து கொண்டிருந்தது…. கார் ஒன்றை இரவல் வாங்கிக் கொண்டு,பூனாவில், நாராயண் பத் சாலை, கதவிலக்கம் 300ல் அமைந்திருந்த திகம்பர் பட்கேயின் ‘ சஸ்த்ர பண்டர் ‘ ஆயுதங்கள் விற்பனையகத்திற்கு,ஆப்தேயும் கார்கரேயும் சென்றனர்.
பின்னாளில், நீதிமன்றத்தில் காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தபோது,
திகம்பர் பாட்கே அளித்த வாக்குமூலத்தின்படி, ‘’கார்கரேயும்,ஆப்தேயும்,சில ‘ செல்வாக்குமிக்க மனிதர்கள் ‘ சார்பாக வந்திருப்பதாகவும்,அவர்களுக்கு ஒரு ஸ்டென் கன் தேவைப்படுகிறது என்றும் கேட்டார்கள்.
நானும் சங்கர் கிஷ்டய்யாவிடம் கடையைப் பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு,அவர்களுடன் காரில் புறப்பட்டுச் சென்றேன். வழியில்,குர்தயால் சிங் எனும் சீக்கியரை வண்டியில் ஏற்றிக் கொண்டு,யர்வாடா சிறைச்சாலை மதில் சுவரை ஒட்டி அமைந்துள்ள சாலை வழியாகச் சென்றோம்.
ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தச் சொல்லி விட்டு,குர்தயால் சிங் மட்டும் வண்டியை விட்டு இறங்கிச் சென்றார். சிறிது நேரத்தில் அவர் ஒரு ஸ்டென் கன்னுடன் திரும்பினார் ‘’.
அவ்வளவு எளிதாக ஸ்டென் கன் கிடைத்து விட்டது. இதற்கு முன்,தாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்காத திகம்பர் பாட்கே, இப்போதுஒரு சாதனையாளனாக ஆப்தேயிற்கும்,கார்கரேக்கும் காட்சித் தந்தார்.
சொன்னபடி வாங்கிக் கொடுத்து விட்டாரே.அதுவும் எந்த சிரமமும் இல்லாமல் என்று திகம்பர் காட்கேயை எண்ணி வியந்து போனார்கள் அவர்கள். குர்தயால் சிங்கை வழியில் இறக்கி விட்டு விட்டு,’ சஸ்த்ர பண்டாருக்கு ‘ வந்தனர்.
அங்கே திகம்பர் பாட்கே ஸ்டென் கன்னிற்கு கேட்ட விலையான 1200 ரூபாயை மகிழ்ச்சியுடன் கொடுத்து விட்டு,தங்கள் ‘ ஹிந்து ராஷ்ட்ரா ‘ பத்திரிகை அலுவலத்திற்கு திரும்பினார்கள். அன்றைய தினம் ஒரு மகிழ்ச்சியான தினம்,தாங்கள் எண்ணியதை செயல்படுத்துவதற்கு வழி கிடைத்து விட்டது என்று ஆப்தேயும்,கார்கரேயும் மன நிறைவு கொண்டனர்.
ஆனால் ஸ்டென் கன் என்பது அவ்வளவு எளிதாகப் பயன்படுத்தக் கூடிய ஆயுதம் அல்ல. அதை லோட் ( load ) செய்வதற்கும்,கையாளுவதற்கும்,சுடுவதற்கும் நிறைய பயிற்சித் தேவை.
இடுப்பருகே நிறுத்திக் கொண்டு,ஒரு குறிப்பிட்ட திசையில் சுடும் ஆயுதம். ஒரு முறை சுட்டாலே அதிலிருந்து பெரிய அளவிலான வெடிப்பொருள் பாய்ந்து செல்லும் என்பது அதன் சிறப்பு. அதைப் பயன்படுத்த அதிக அளவிலான வெடிப்பொருள் தேவை.அந்தளவிற்கான ‘MAGAZINES ’ கிடைத்தாலும் அதை நன்கு பயன்படுத்தத் தெரிந்த ஒரு நபர் தேவை.அப்படியே ஒருவர் கிடைத்தாலும் அவர் உயிருக்குத் துணிந்தவராக இருக்க வேண்டும்….
பாகிஸ்தான் எனும் ஒரு நாடு வெகு விரைவில் உருவாக இருந்த நிலையில், டெல்லியிலே நடைபெற இருந்த அதன் ( PAKISTAN CONSTITUENT ASSEMBLY ) அரசியல் நிர்ணய சபை பாராளுமன்ற முன்னோட்டக் கூட்டத்தின் போதே,தங்கள் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தவறினால்,புதிய நாடு உருவாகி விட்டால், அந்த நாட்டின் எல்லைக்குள் சென்று எதுவும் செய்ய முடியாது…
இதைச் செயல்படுத்துவது எப்படி ? எவ்வளவு முயன்றும் அதற்கான வழி கிடைக்கவேவில்லை.ஆகவே அந்த ஸ்டென் கன் பயன்படுத்தப்படவே இல்லை.
இதற்கிடையே,காலம் போய் கொண்டேயிருந்தது. சுதந்திரத்திற்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. ஜூலை மாதத்திலிருந்தே பாகிஸ்தானிய தலைவர்கள் விமானங்கள் மூலம் பாரதத்தை விட்டு வெளியேறிக் கொண்டு இருந்தார்கள்.
ஜூலை மாதம் 10 ந் தேதி வாக்கில், டெல்லியிலிருந்து அனைத்து பாகிஸ்தானிய தலைவர்களும் வெளியேறி விட்டனர். ஆகஸ்ட் 14 ல்,ஜின்னாவும்,அவரின் ( பாகிஸ்தானின் ) புதிய பாராளுமன்றமும்,அந்நாட்டின் புதிய தலைநகரான கராச்சியில்பாதுகாப்பாக அமைந்து விட்டது.
ஆப்தேயின் ‘ பாகிஸ்தானின் பாராளுமன்ற தகர்ப்பு ‘ திட்டம் கனவாகவே நின்று போனது. ஆகஸ்ட் 15ந் தேதி பாரதத்திற்கு சுதந்திரம் வந்தது.
‘ விதியுடன் ஒரு சந்திப்பு ‘ ( TRYST WITH DESTINY ) என்று சுதந்திரத்தை வர்ணித்து நேரு உரையாற்றினார். ‘சரித்திரப் புகழ் ‘ மிக்க நேரம் என்றார் மவுண்ட்பேட்டன்.
நாதுராமும்,ஆப்தேயும் அவர்களின் நண்பர்களும் ‘ வலி மிகுந்த அவமானகரமான நிலை ‘யாக உணர்ந்து நொந்தனர்.கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்ளவில்லை.
மிகுந்த சோகத்துடன் இருந்தனர். அதே நேரத்தில் பஞ்சாப்பில் முஸ்லீம் வெறியர்கள் கோர வெறியாட்டம் ஆடத் தொடங்கினார்கள்….
பஞ்சாப் பற்றி எரியத் தொடங்கியது. ஹிந்துக்களின் இரத்தம் ஆறாக ஓடியது. ’ ஈஸ்வர அல்லா தேரா நாம் ‘ எனும் கோரஸ் பின்னணியில்… காந்தி உண்ணா நோன்பும்,மெளன விரதமும் மேற்கொண்டார்.
( தொடரும் )




