மதன்லால் பஹ்வா, டாக்டர் ஜெயினின் புத்தகங்களை விற்பனை செய்து வந்த போது, அதை வாங்கியவர்களில் ஒருவர், தாதா மஹாராஜின் சகோதரர் தீக்ஷித் மஹராஜ்.
மதன்லால் பஹ்வா விற்ற புத்தகத்துக்கு, தீக்ஷித் மஹராஜ் கொடுத்த விலை 5 ரூபாய். புத்தகங்கள் பையில், மதன்லால் பஹ்வா, வழக்கமாக ஒளித்து எடுத்துக் கொண்டு செல்லும் வெடிகுண்டுகளில் சிலவற்றை, தீக்ஷித் மஹராஜ் வாங்கினாரா இல்லையா என்று இருவருமே எந்தக் காலக்கட்டத்திலும் வெளியிடவில்லை.
அப்படியொரு பரிவர்த்தனை நடந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. தன்னுடைய சகோதரர் சார்பில், வெடிகுண்டுகளை வாங்குவது, தீக்ஷித் மஹாராஜ் செய்யும் வழக்கமான ஒன்றுதானே.
ஆப்தேயின் திட்டங்களைக் கேட்டு, தாதா மஹராஜ் பிரமித்துப் போயிருந்த காலக்கட்டம் அது.
இந்த காலக்கட்டத்தில்தான் ( 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் ) ஆப்தேயிடம், தன்னால் சில ‘ கையெறி குண்டுகளையும்,டைனமைட்டையும் ‘ கொடுத்துதவ முடியும் என்று தாதா மஹராஜ் தெரிவித்திருந்தார்.
எது எப்படியோ, அந்த ஒரு புத்தகத்தின் விற்பனை மூலம், தீக்ஷித் மஹராஜ் மதன்லால் பஹ்வா இருவரும் நெருக்கமானார்கள். மதன்லால் பஹ்வா, திக்ஷித் மஹராஜ் சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்தது.
செம்பூர் முகாமில் தங்கியிருந்த அகதிகளுக்கு உதவும் பொருட்டு துணிகள் மற்றும் சமையல் பாத்திரங்களை திக்ஷித் மஹராஜ்,மதன்லால் பஹ்வாவிடம் வழங்கினார்.
திக்ஷித் மஹராஜை, மதன்லால் பஹ்வா முதல் முறையாக சந்தித்து சென்ற பிறகு,தன் அண்ணன் தாதா மஹராஜிடம் சந்திப்பின் முழு விவரங்களையும் திக்ஷித் மஹராஜ் தெரிவித்திருப்பார் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
அதே போல, மதன்லால் பஹ்வா காணாவண்ணம்,தாதா மஹராஜ் மட்டும் மதன்லால் பஹ்வாவை பார்த்திருப்பார் என்பதும் உறுதி.
அஹமத் நகரிலிருந்து பம்பாயிற்கு ,’ கையெறி குண்டுகள் ‘ விற்பனை செய்யக்கூடிய யாரேனும் கிடைப்பார்களா என்று தேடி வந்த விஷ்ணு கார்கரே 1947 ஆம் வருடம் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் தொடக்கத்திலோ மதன்லால் பஹ்வாவை சந்தித்தார்.
அந்த நேரத்தில்,தொழிற்சாலையில்,மதன்லால் பஹ்வா வேலை பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய வாய்ப்பில்லை. ஏனென்றால்,அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் மதன்லால் பஹ்வாவின் இடது கை ஆள்காட்டி விரலின் மேல் பகுதி துண்டிக்கப்பட்டிருந்தது.
ஒரு நாள் தொழிற்சாலையில்,வெடிகுண்டுகள் தயாரிப்பிற்கு உதவும் ‘ TURN TABLE ‘ கியர்களில் விரல் மாட்டிக் கொண்டு விட்டது. அவருடைய உதவியாளர் உடனடியாக மெஷினை நிறுத்தி விட்டாலும், மெஷினின் இரண்டு பற்சக்கரங்கள் இடையே விரல் நன்றாக மாட்டிக் கொண்டு நிறைய இரத்தப் போக்கும் ஏற்பட்டது.
பின்னாளில், பல வருடங்கள் கழித்து , காந்தி கொலை வழக்கில் பெற்ற ஆயுள் தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகி விட்ட பிறகு … ஒரு புத்தகத்தின் ஆசிரியரிடம் இது பற்றி விவரித்த மதன்லால், ’ முழுவதுமாக தயாரித்து முடிக்கப்படாத வெடிகுண்டுகள்,அவை தயாரிக்கப்பட்டு வந்த இடத்தில் சிதறிக் கிடந்தன.
டாக்டர் யாரேயையேனும் வரவழைக்கலாமா என்றால்,அது தற்கொலைக்கு ஒப்பானது.ஏனென்றால் விஷயம் வெளியே கசிந்து,போலீஸிடும் மாட்டிக் கொள்ளும் அபாயம் இருந்தது. ஆகவே, நான் ஒரு கத்தியை எடுத்து என் விரலை வெட்டி ‘ TURN TABLE ‘ சக்கரத்திலிருந்து விரலை விடுவித்துக் கொண்டேன் ‘’
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
– எழுத்து: யா.சு.கண்ணன்




