மதன்லால் பஹ்வாவின் காதலியின் பெயர் ஷெவந்தா. உண்மையிலேயே,ஏதும் தீங்கிழைக்கும் முன்னரே,மதன்லால் பஹ்வாவை கைது செய்ய விட வேண்டும் என போலீஸ் எண்ணியிருந்தால்,அவர்களால் செய்திருக்க முடியும்.
பஹ்வா மற்றும் ஷெவந்தா,இருவருக்குமிடையேயான கடிதப் போக்குவரத்தை கண்காணித்திருந்தாலே,பஹ்வாவின் இருப்பிடம் தெரிய வந்திருக்கும்.
சந்தேகிக்கப்படும் குற்றவாளி ஒருவருடனான கடிதங்களை இடைமறித்து என்ன எழுதியிருக்கிறது என்று தெரிந்துக் கொள்வது காலாக்காலமாக இந்தியாவில் காவல்துறை செய்து வந்த ஒன்றே.
ஷெவந்தாவிற்கு பஹ்வா மீதிருந்த காதல் பற்றி போலீஸுக்குத் தெரியவில்லை என்பது வியப்பே. ஏனென்றால்,பஹ்வாவுடைய செயல்பாடுகளை கண்காணிக்கும்படியாக அவர்களுக்கு உத்தரவிருந்தது.

ஷெவந்தாதான் பாவம். அவளுடைய அடையாளத்தை போலீசார் கடைசி வரை வெளிப்படுத்தவில்லை.மதன்லால் பஹ்வா எழுதிய இரு கடிதங்களுக்கு அவளின் பதில்களோடு அது முடிந்துபோனது.
அவள் அவன் மீது வெறித்தனமான காதலில் இருந்தாள் என்பது அந்த கடிதங்களிலிருந்து தெரிந்தது.ஆனால் அவன் அவளை ஆசைக்காட்டி கைவிடப் போகிறான் என்பதை அவள் உணரவே இல்லை.
அவள் படிப்பறிவு இல்லாதவள்தான். ஆனாலும் அவன் மீதான காதலை வெளிப்படுத்த அவள் ,சில ஹிந்தி ஈரடி கவிதைகளை மேற்கோள் காட்டி கடிதங்களில் எழுதி இருந்தாள்.
அந்த கவிதைகள்… காதலும் காமமும் ஒருங்கே தொனிக்கும் வார்த்தைகளைக் கொண்டவை. முதல் கடிதம் 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ந் தேதி எழுதப்பட்டது.
மதன்லால் பஹ்வாவின் கடிதத்திற்கு எழுதிய பதில் கடிதம். அதில் அவள் ‘’ எனக்கு எல்லாம் புரிகிறது ‘’ என்று குறிப்பிடுகிறாள். ‘’ இரண்டு நாட்கள் மட்டுமே உங்கள் காதலைக் காட்டி விட்டு என்னை விட்டு செல்கிறீர்களே …என் மனம் உங்களுக்காக ஏங்குகிறது ..இந்த கடிதத்தை தந்திப் போல பாவித்து உடனே என்னிடம் திரும்பி வந்து விடுங்கள்..’’
அவள் வார்த்தைகள் கூறுவன கொஞ்சம் மட்டுமே… இரண்டாவது கடிதம் அடுத்த நாளே எழுதப்பட்டது. அவன் மீதான வெறித்தனமான காதல் அவளை வாட்டுகிறது என்றும் உடனே தன்னிடம் திரும்பி வந்து விடும்படியும் எழுதுகிறாள்.
திரும்பி வரும் போது அவளுக்குக்காக ஒரு பட்டுச்சேலையும்,காலணிகளும் வாங்கி வரும்படியும் எழுதினாள். ‘’ விரைவில் வாருங்கள்,என் மனம் துயரப்படுகிறது ‘’ என முடித்து விட்டு ..
‘’ என் மலர்த் தோட்டம் நீயின்றி வெறிச்சோடி இருக்கிறது..
என் மனதை வேட்டையாடிக் கொண்டிருப்பவனே சீக்கிரம் வா
இரவுகள் கழிகின்றன,பகல்கள் போய் கொண்டிருக்கின்றன
என் மனமோ மூழ்கிக்கொண்டிருக்கிறது…
இளவேனிற் காலம் வந்து விட்டது…மலர்படுக்கை கொள்ளைக்கொள்ள காத்திருக்கிறது…
வா..என்னை வேட்டையாட வா..
என்னுடைய வாழ்க்கை துணைவனே,உன்னுடைய காதல் என்னை வாட்டுகிறது
அதன் எண்ணத்தை வாய் விட்டுக் கூற என் பெண்மை தடுக்கிறது..
நீயின்றி நான் எப்படி வாழ்வேன்…
வா..என் வேட்டைக்காரனே ..! ‘’
எனும் அர்த்தம் தொனிக்கும் ஹிந்தி மொழி கவிதையை எழுதியிருந்தாள். இந்த முறை மதன்லாலை அவளுடைய ‘ டார்லிங் ‘ என விளித்து முடிக்கிறாள். அதை தொடர்ந்து வேறு ஒரு ஈரடி கவிதையும் எழுதப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தாரால் நியமிக்கப்பட்டிருந்த மொழிப்பெயர்ப்பாளரால் ‘ வார்த்தைகள் புரியவில்லை ‘ என கூறப்பட்டது. முதல் கடிதம் பம்பாயிற்கு வந்து சேருமுன்னரே மதன்லால் பஹ்வா டெல்லிக்கு கிளம்பி விட்டிருந்தார்.
அரசுத்தரப்பு அவற்றை சாட்சியங்களாக கோர்ட்டில் தாக்கல் செய்தபோதுதான் இரு கடிதங்களையும் பார்த்தார் மதன்லால் பஹ்வா. மதன்லால் மற்றும் மற்றவர்கள் மீதான குற்றங்களை நிரூபிக்க அவை ஆவணங்களாக பயன்படுத்தப்பட்டன.
ஷெவந்தாவை பொறுத்தவரை,அந்த ‘காதல் நோய் ‘ கடிதத்தை எழுதிய நான்கு நாட்கள் கழித்துதான் பஹ்வா என்ன காரியத்தில் ஈடுபட்டிருந்தார் என தெரிய வந்தது. ‘ பிர்லா ஹவுஸ் ‘ ஸில்,ஜனவரி 20ந்தேதி காந்தி, பிரார்த்தனைக் கூட்டம் நடத்தி வந்த நேரத்தில்அந்த வளாகத்திற்குள் வெடிகுண்டு வீசியதற்காக மதன்லால் பஹ்வா கையும் களவுமாகப் பிடிபட்டார்.
(தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
- எழுத்து: யா.சு.கண்ணன்