சாதாரண சூழ்நிலையில், கார்கரே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.மேல் விசாரணை நடந்து முடியும் வரை சிறையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,போலீஸ் ஏன் அவரை உடனடியாக கைது செய்யாது மெத்தனம் காட்டியது என்றே புரியாதிருந்தது.
வெடிகுண்டுகள்,ரிவால்வர்,வெடிமருந்துகள் போன்றவற்றை லைசென்ஸ் இல்லாது வைத்திருந்தது மிகவும் சீரியஸான குற்றம். ஏற்கெனவே போலீஸ் அறிக்கைகளில் மதன்லால் பஹ்வாவின் பெயர் கார்கரேயுடன் சேர்ந்தே இருந்தது.
‘’ எப்பொழுதும் பிரச்சனைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும் நபர் ‘’ எனும் முத்திரை இருந்தது. கடைசியாக 1948 ஆம் வருடம் ஜனவரி மாதம் 5ந் தேதி அஹமத்நகரில் ஒரு பிரச்சனையில் சிக்கி இருந்தார்.
மத நல்லிக்கணம் தொடர்பாக ஒரு சொற்பொழிவாற்ற முக்கிய காங்கிரஸ் தலைவர் ராவ்சாஹிப் பட்வர்தன் அஹமத்நகர் வந்திருந்தார். அவரை பேசவிடாமல் தடுக்கும் நோக்கில் மதன்லால் பஹ்வா கோஷங்கள் எழுப்பிய வண்ணம் இருந்தார்.
ஒரு கட்டத்தில் மேடை மீது ஏறி,பட்வர்தனிடமிருந்து மைக்கை பிடுங்கி அவரை பேச விடாமல் தடுத்தார். அங்கிருந்த போலீசார் அவரைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று லாக்கப்பில் அடைத்தனர்.
விடியற்காலை வரை சிறையிலேயே வைத்திருந்த பின் விடுவிக்கப்பட்டார். ஜனவரி மாதம் 9ந் தேதியன்று அஹமத்நகர் காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ரஸாக், மதன்லால் பஹ்வாவும்,கார்கரேயும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட வேண்டும் என்று மேலதிகாரிகளுக்கு பரிந்துரைச் செய்தார். ஆனால் அந்த பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு,உரிய இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட மூன்று நாட்கள் ஆகி விட்டது.
அதற்குள் கார்கரே மற்றும் மதன்லால் இருவரும் தப்பியோடி விட்டனர். என்றைய தினம் இன்ஸ்பெக்டர் ரஸாக் இவர்கள் இருவரின் கைதுக்கான பரிந்துரையை அனுப்பினாரோ,அதே நாளில் இவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.
காவல்துறையில்,ரகசியக் கோப்புக்களை நெருங்கக் கூடிய வாய்ப்பிருக்கும் அவர்களுடைய நண்பர் யாரோ ஒருவர்தான் இவர்களுக்கு,கைது செய்யப்பட இருக்கும் தகவலை தெரிவித்திருக்க வேண்டும். அஹமத்நகர் மாவட்டத்தின் போலீஸ் கண்காணிப்பாளரின் செயலாளராகச் செயல்பட்டு வந்த இன்ஸ்பெக்டர் J.N.ஜோஷி,பின்னாளில் சில விஷயங்களை தெரிவித்தார்.
‘’ ஜனவரி மாதம் 10 ந் தேதி வாக்கில் ( சரியான தேதி ஜனவரி 9 ஆக இருந்திருக்க வேண்டும் ) நான் மதன்லால் பஹ்வாவை அஹமத்நகர் ரயில் நிலையத்தில் எதேச்சையாகச் சந்தித்தேன். அவனிடம் பேசவும் செய்தேன்.அவன் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும்,அதற்காக டெல்லிக்கு செல்வதாகவும் கூறினான் ‘’.
அடுத்த ஓரிரு நாட்களுக்குள்ளாகவே, இன்ஸ்பெக்டர் ஜோஷிக்கு மதன்லால் பஹ்வா,கார்கரே ஆகிய இருவரையும் கைது செய்ய வாரண்ட் தயாராகிக் கொண்டிருக்கும் விவரம் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் மதன்லால் பஹ்வா டெல்லிக்கு போய் விட்ட விவரத்தை தன் உயர் அதிகாரியிடம் ஏனோ தெரிவிக்கவில்லை.
இன்னும் கூற போனால் ஜனவரி மாதம் 21ந் தேதி வரை இது பற்றி வாயை திறக்கவே இல்லை. அதற்குள்ளாகவே காந்தியை கொல்லும் முயற்சியாக,GUN COTTON ( இது ஒரு நைட்ரோ-செலுலஸ் வகையிலானது ) வெடிகுண்டு ஒன்றை ,டெல்லியில் காந்தியின் பிரார்த்தனை கூட்டத்தின் போது மதன்லால் பஹ்வா வெடிக்கச் செய்தார். ஆனால் அங்கிருந்து தப்புவதற்குள் போலீஸாரால் கையும் களவுமாகப் பிடிப்பட்டு விட்டார்.
அவருடைய கால்சட்டைப் பைக்குள் வெடிப்பதற்கு தயாரான நிலையில் இன்னொரு வெடிகுண்டும் இருந்தது. மதன்லால் பஹ்வாவை பொறுத்த வரை தன்னுடைய நடமாட்டங்களைப் பற்றிய விவரங்களை அவர் ரகசியமாகவே வைத்துக் கொள்ளவே இல்லை.
சொல்லப் போனால், இன்ஸ்பெக்டர் ஜோஷியிடம் தான் திருமணம் செய்துக் கொள்ளும் பொருட்டு டெல்லி போவதாகக் கூறியது உண்மைதான். அவர் தேவையில்லாமல் தெரிவித்த தகவல்,டெல்லிக்கு போகும்முன் பம்பாய் போகப்போவதாக கூறியதுதான்.
பம்பாய்க்கு சென்ற இரண்டு நாட்களுக்குள்ளாக,அஹமத்நகரிலிருந்த தன் காதலிக்கு ஒரு கடிதம் எழுதினார். பம்பாயில் ஒரு விலாசத்தைக் கொடுத்து,தன்னுடன் தொடர்பு கொள்ள அந்த விலாசத்திற்கு கடிதம் எழுதும்படி கூறி இருந்தார்.
அந்த விலாசம் : c/o பேராசிரியர் ஜெயின்,மங்கல் நிவாஸ்,சிவாஜி பார்க் ,தாதர்,பம்பாய்.
( தொடரும் )
#காந்திகொலையும்பின்னணியும்
– எழுத்து: யா.சு.கண்ணன்




