வேதாந்த தேசிகன் அருளிச்செய்த “பாதுகா ஸஹஸ்ரம்” எம்பெருமானுடைய பாதுகைகளின் பெருமைகளைப் பலபடிகளாக வருணிக்கின்றது !
32 பகுதிகளாக ( பத்ததிகள் ) 1008 ச்லோகங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் உயர்ந்த நூலிது !
அதில் ‘ பிம்ப ப்ரதிபிம்ப பத்ததி ‘ என்றொரு பகுதி உண்டு !
அவன் பாதுகைகள் மணிமயமானவை.. தூமணிகளானபடியால் அவைகளில் நிழல் விழுகையும் , எதிரிலுள்ளவற்றை ( அம் மணிகள் ) பளிச்சென்று காட்டிடுகையும் இயல்பானதே !
பாதுகைகளின் பளிச்சென்ற மணிகள் ; கண்ணாடி போலே பொருள்களைக் காட்டிடுமாம்!
பிராட்டிமார்கள் ஒப்பனைகளைக் ( அலங்காரம் ) கூட பாதுகை மணிகளின் துணை கொண்டே செய்து கொள்கிறார்களாம்..
என்னே மணி பாதுகைகளின் பெருமை !
இங்கே நம் ஸ்ரீமதுபயவே கேசவபாஷ்யம் ஸ்வாமி பகிர்ந்துள்ள படத்தைச் சேவித்ததும் ; இந்த பிம்பப்ரதிபிம்ப பத்ததியில் ஒரு ச்லோகம் நினைவிற்கு வர , அதடியாக இவ்வுரை புனைகின்றேன் இப்போது !
அன்பர்காள் ! படித்தின்புறுக !!
அரவரசாம் நம் அழகிய மணவாள முனி , கண்ணாடியில் தன் திருமேனியைக் கண்டு மகிழ்ந்திடும் தருணம் இது ( இப்படம் ) !
தேஹாத்மாபிமாநிகள் ( ஆத்மாவையே அறியாது; தேஹமே ஆத்மா என்றே நினைத்திருக்கும் அறிவிலிகள் ) தங்கள் உடல் , முகம் முதலானவற்றில் பெருமை கொள்கையும் , தங்கள் அழகைத் தாங்களே மெச்சிடுகையும் வியப்பிற்குரியதன்று !
ஆனால்.. ஜ்ஞாநிகள் அங்ஙனம் தங்கள் தேஹ , முக ஸௌந்தர்யங்களைக் கண்டு சிலாகித்து உவந்திடுவர்களோ ?!
பின்பு ஏன் ஜ்ஞான பக்தி வைராக்கியம் முதலான குணங்களாகிற நல்முத்துகள் நிரம்பியிருக்கும் கடல் போன்றவரான ( தீபக்த்யாதி குணார்ணவரான ) நம் மாமுனிகள் தன் திருமுகமண்டலத்தைத் தானே நோக்கிடுகின்றார் ?! நாட்டாரோடு இயல்வொழிந்தவராயிற்றே இவர் ! ( ஸம்ஸாரிகள் வழி நடவாதவர் ( அவர்கள் இயல்பைக் கைக் கொள்ளாதவர் ) )
பின்பு ஏன் கண்ணாடி பார்க்கின்றார் ?!
இக்கேள்விக்கு விடை சொல்லுமாப் போலே இருக்கும் ஒரு ச்லோகத்தைத் தான் நாம் தற்பொழுது காணவிருக்கிறோம் !
பெருமானுக்குப் பாதுகைகள் அணிந்து கொள்வதில் பெருவிருப்பமாம் !
ஓரோரிடத்திலும் தன் இஷ்டப்படி விளையாடுவதற்கு அவன் துணை கொள்ளும் பாக்கியம் மணிபாதுகைகளுக்கே கிட்டியதெனலாம் !
குற்றமற்ற இரத்தினங்களாலும் அழகாலும் அப்பாதுகைகள் எந்நாளும் ஒளிவிடுகின்றன!
பாதுகைகளைச் சாற்றிக் கொண்டு ( அணிந்து கொண்டு ) ஒய்யாரமாக அவன் நடந்திடும்பொழுது , பிராட்டியின் நினைவினால் உந்தப்பட்டவனாய்; அவளோடு கூடி மகிழ்ந்திட ஆவல் கொண்டவனாய் அவளை நாடி வந்திடுவனாம் இறைவன் !
அவளோ ‘ ஃபணிபதி: சய்யாசனம் ‘ என்கிற படியே புல்குமணையான திருவனந்தாழ்வான் மேல் வீற்றிருப்பள் !
தன் பாதுகைகளைக் கழற்றிக் கீழே வைத்து விட்டு , ஆதிசேஷனாகிற படுக்கையில் பிராட்டியுடன் விளையாடிட வேண்டி ஏறிடுவன் எம்பெருமான் !
ஆயினும் பைந்நாகணையில் அவன் ஏறின பிற்பாடும் , அவனுடைய பிரதிபிம்பமானது ; அப்பாதுகைகளில் காணப்படுகின்றதாம் !
அதாவது பாதுகைகளைக் கழற்றிக் கீழே வைத்துவிட்டு , படுக்கையில் வீற்றிருக்கும் வேளையிலும் அவன் திருமேனியின் பிரதிபலிப்பு பாதுகைகளில் தெரிகின்றது என்றபடி!
தேசிகன் ஸாதிக்கின்றார் ! ப்ரதிபலிப்பு என்கிற வியாஜத்தாலே ( கண்ணாடி போலே பாதுகைகள் அவனைக் காட்டிடுகையாலே ) .. பாதுகைகளைக் கழற்றி வைத்திருந்தும் அதனை விடாதவனாகின்றான் பெருமான் என்றுரைக்கின்றார் !
எல்லாம் சரி ! இதற்கும் மாமுனிகள் கண்ணாடி பார்ப்பதற்கும் யாது தொடர்பு ?! அது தானே உங்கள் கேள்வி ??
மேலே வாசித்திடுக ! ஸ்வேச்சா கேளி ப்ரிய ஸஹசரீம் ஸ்வச்ச ரத்நாபிராமாம் ..ஸ்தாநே ஸ்தாநே நிஹிதசரணே நிர்விசந் ரங்கநாத: |
ஸஞ்சாராந்தே ஸஹ கமலயா ‘சேஷ சய்யாதிரூட: ‘ .. த்யக்த்வாபி த்வாம் த்யஜதி ந புந: ஸ்வப்ரதிச்சந்த லக்ஷ்யாத்|| .. என்பதே அந்த ச்லோகம்..
பாதுகைகளைக் கழற்றி வைத்து விட்டு ; ஆதிசேஷனாகிற படுக்கையில் ஏறினபின்பும் ; அவனுருவம் மணிபாதுகைகளில் பிரதிபலிக்கக் கண்டமை மேலே சொல்லப்பட்டது..
அச்சமயம் அக்காட்சி கண்டு , ஆதிசேஷன் ஆச்சர்யப்பட்டிருக்கக் கூடும்..
அவனைச் சுமந்த பாதுகைகள் அவன் நிழலைக் காட்டிடுமாப் போலே ; அவனைச் சுமக்கின்ற நம்மிலும் அவன் பிரதிபிம்பமாய்த் தெரிந்திடுவானோ என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் எழப்பெற்றவனாய் ,
தன் பணாமணிகளில் அவன் (இறைவன்) உருவம் தெரிந்திடுமாயினும் ;
அது தன்னைத் தானும் கண்டிட எண்ணினவனாய் , தானே ( ஆதிசேஷனே ) மாமுனிகளான படியால் , அர்ச்சையிலும் கார்மேனி அருளாளர் கச்சியில் அந்தர்யாமியான அவன் கண்ணாடியில் ப்ரதிபிம்பமாக காக்ஷி தந்திடுவன் ( ஸுந்தர ஜாமாத்ரு முனி மாநஸ வாஸி யன்றோ பகவான் ( மணவாள மாமுனிகள் ஹ்ருதயத்தில் / மனதில் வஸிப்பவன் பெருமான் ) ) என்று விச்வஸித்து ,
தன் திருமுக மண்டலத்தையும் திருமேனியையும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு , அவ்வழியாலே மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் உடையனான பேரருளாளனின் தர்சநீயமான ( காணத் தக்கதான ) வடிவைக் கண்டு ஹ்ருஷ்டராகிறார் ( மகிழ்கிறார் ) என்று நாமும் சிந்திந்தின்புறும் படியாகவன்றோ இப்படம் விளங்குகின்றது !!
அவனைக் கண்ட பூரிப்பு அவர் தம் திருக்கண்களிலும் திருப்பவளத்திலும் கண்டறியலாகின்றதே !
நம் ப்ரார்த்தனை என்பது என்ன தெரியுமா ? நாம் கண்ணாடி காணுங்கால் நம் மாமுனிகளே தெரிய வேண்டும் என்பதொன்றேயாம் !
– கட்டுரை: அக்காரக்கனி ஸ்ரீநிதி




